மலையே சிவனாக காட்சித்தரும் அதிசயம்… எங்கிருக்கிறது தெரியுமா?

கொண்டரங்கி மலை..
கொண்டரங்கி மலை..

சாதாரணமாக சில கோவில்களுக்கு சென்று வழிப்படுவதற்கும், மலையேற்றம் செய்து சில கோவில்களுக்கு சென்று வழிப்படுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. கோவிலுக்கு செல்வதற்காக கஷ்டப்பட்டு மலையேறும்போது அதன் அருமையை உணர்வோம். சாதாரணமாக நாம் நினைப்பது உடனே கிடைக்கும்போது மனம் அலட்சியப்படுத்தி விடுகிறது அல்லவா? இதை உணர்த்துவதற்காகவே பல கோவில்கள் மலை மேல் அமைக்கப்பட்டிருக்கிறதோ? என்று தோன்றுவதுண்டு.

அப்படியொரு மலையேற்றம் செய்து காணக் கூடிய சிவன் கோவிலைப்பற்றி தான் இன்று பார்க்க உள்ளோம். மலையேற்றம் என்றால் சாதாரண மலையேற்றம் இல்லை இது சற்று கடினமாகவே இருக்கும்.

தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டஞ்சத்திரம் தாலூக்காவில் கீரனூரில் கொண்டரங்கி மலை உள்ளது. இங்கே மலை மேல் குடைவரை கோவிலில் சிவபெருமான் மல்லிகார்ஜூனேஸ்வரராக காட்சியளிக்கிறார். இங்கே இருக்கும் சிவலிங்கமானது சுயம்புவாக உருவானது என்று கூறப்படுகிறது.

இந்த கொண்டரங்கி மலை மொத்தம் 3825 அடி உயரம் கொண்டது. இந்த மலையின் உச்சியை அடைவதற்கு 2 மணி நேரம் மலையேற்றம் செய்ய வேண்டும். படிகளும், கம்பிகளும் பக்தர்கள் மேலே ஏறி செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. திருவண்ணாமலையில் மலையையே சிவபெருமானாக பார்ப்பது போல இந்த மலையையும் சிவபெருமானாகவே மக்கள் வழிபடுகிறார்கள். இந்த மலை பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக காட்சியளிப்பது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

மனநிம்மதி வேண்டி வருவோர் இந்த மலைக்கு வந்து வழிப்படலாம் . பாண்டவர்கள் இங்கே எண்ணற்ற குகைகளை சிவபெருமானை வழிப்படுவதற்காக அமைத்துள்ளனர். இந்த மலையின் அடிவாரத்தில் இருக்கும் சிவன் கோவில், கெட்டி மல்லேஸ்வரர் கோவில் மற்றும் பிரம்மராம்பிகை கோவில்களாகும். இங்கு வற்றாத நீரூற்று இரண்டு உள்ளது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய நீர் அங்கிருந்தே எடுத்து பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொண்டரங்கி மலை...
கொண்டரங்கி மலை...

இங்கிருந்து பழனி மலையை காண முடியும் என்றும் கூறுகிறார்கள். இரண்டிற்கும் ஒரு தொடர்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது மைந்தனான முருகன் பழனி மலையிலிருந்து தந்தையை பார்ப்பதாகவும் இங்கிருந்து மகனுக்கு சிவனும், பார்வதியும் காட்சியளிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் வந்தபோது, அர்ஜூனன் இந்த மலையில்தான் தவம் புரிந்ததாக கூறப்படுகிறது. எனவே இங்கே வந்து சிவனை தரிசிப்பவர்களின் வாழ்வில் மாற்றங்கள் நிகழும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

காகபஜேந்திரன் மற்றும் கணபதி ஆகிய இரண்டு முனிவர்களும் காகமாக மறுபிறவி எடுத்து இந்த மலையின் குகையில் தான் சிவனை நோக்கி தவமிருந்ததாக கூறப்படுகிறது. பொழுது சாயும் வேளையில் காகபஜேந்திரர் ஒரு சிறுபுயல் போல சிவனை தரிசிக்க இம்மலைக்கு வருவதாக கூறப்படுகிறது.

சித்திரா பௌர்ணமி, மஹாசிவராத்திரி, கார்த்திகை தீபம் ஆகிய பண்டிகைகள் இங்கு வெகு சிறப்பாக கொண்டாப் பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில், ஒன்று சேராத ஆறுகளின் சங்கமம் எங்கு ஏற்படுகிறது தெரியுமா?
கொண்டரங்கி மலை..

இக்கோவிலுக்கு செல்ல மேலே மலையேற்றம் செய்ய தொடங்குவதற்கு முன் கண்டிப்பாக தண்ணீர் மற்றும் இதர தேவையான பொருட்களை எடுத்து செல்வது அவசியமாகும்.

எனவே இந்த கோவில் மலையேற்றம்  செய்ய விரும்புவோருக்கு ஏற்றதாக இருக்கும். மலை உச்சிக்கு சென்றதும் மேகங்கள் உரசி செல்லும் அழகையும், மலையிலிருந்து கீழேயிருக்கும் இயற்கை அழகையும் ரசிக்கலாம். மலைக்கு மேல் ஏற இரண்டு மணி நேரம் ஆகும் என்றால் கீழே இறங்க ஒரு மணி நேரமே ஆகும். எனினும் இறங்கும்போது அதீத கவனம் தேவை, ஏனெனில் பாதை மிகவும் செங்குத்தாக இருப்பதால் பாதுகாப்பாக இறங்குவது அவசியமாகும். இந்த இடம் மலையேற்றத்தை விரும்புவோருக்கும், ஆன்மீகத்தை விரும்புவோருக்கும் ஏற்ற இடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com