முருகப்பெருமான் இந்த கோவிலில் ஆறடி உயரத்தில் சுயம்புவாக ஜடாமுடியுடன் நின்றக் கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானைதான் வாகனமாக உள்ளது. அதனால், இக்கோவில் திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே உருவாகியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட ஸ்தலம். இக்கோவிலில் முருகனுக்கு அருகில் வள்ளி, தெய்வானை இருவரும் ஒருசேர இணைந்து கஜவள்ளியாக காட்சித் தருகிறார்கள் என்பது மேலும் சிறப்பைக் கூட்டுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியன் கோவில் தான் இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கோவிலாகும்.
ஒருசமயம் காசிப முனிவர் இவ்விடத்தில் தவம் செய்துக்கொண்டிருந்த பொழுது மலையன் மற்றும் மகரன் என்று இரண்டு அரக்கர்கள் வந்து அவர்களுக்கு தொல்லைக் கொடுத்தனர். இதனால் முனிவர்கள் சென்று சிவபெருமானிடம் முறையிட சிவபெருமான் முருகனை இந்த பிரச்னையை தீர்த்து வருமாறு அனுப்பி வைக்கிறார்.
முருகன் இங்கு வந்ததும் தன்னுடைய வேலை ஆசிரமத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்துவிட்டு அசுரர்களிடம் போரிட்டு அவர்களை அழித்தார். மகரன் கொல்லப்பட்ட இடத்தை மாகரல் என்றும், மலையன் தலை விழுந்த இடம் மலையன் குளம் என்றும் இன்றைக்கும் அழைக்கப்படுகிறது. முருகர் அனுப்பிய வேல் இக்கோவிலில் இன்றைக்கும் வடமேற்கு பகுதியில் உள்ளது. இந்த வேலினுடைய ஆழம் எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை.
இக்கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில், இக்கோவிலில் முருகனுக்கு வாகனமாக மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது. முருகப்பெருமானுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்தப்பொழுது இந்திரன் யானையை பரிசாக அளித்ததைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது.
முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தப் பிறகே அவருக்கு மயில் வாகனமாகவும், சேவல் கொடியும் வந்தது. எனவே, இக்கோவில் அதற்கு முன்பே உருவாகியிருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
இக்கோவிலில் ஐப்பசி அன்னாபிஷேகம், கந்தசஷ்டி விரதம், கார்த்திகை தீபம் போன்ற பண்டிகைகள் வெகுவிமர்சியாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்கிறார்கள். எனவே, இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கோவிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து தரிசித்துவிட்டு செல்வது நன்மை பயக்கும்.