சண்டி தேவிக்கென்றே தனிக்கோயில் அமைந்த திருத்தலம் எங்குள்ளது தெரியுமா?

Do you know where there is a separate temple for Chandi devi?
Do you know where there is a separate temple for Chandi devi?

வராத்திரி தினம் மற்றும் கோயில்களில் அம்பாளுக்குரிய சில விசேஷ தினங்களில் சண்டி ஹோமம் நடப்பதைப் பார்த்திருப்போம். அன்னை பார்வதி தேவி பல காலங்களில் பல வடிவங்களை எடுத்து தீய சக்திகளை அழித்து உலகைக் காத்தருளியிருக்கிறாள். அதில் அரக்கர்களை வதம் செய்ய அன்னை எடுத்தது 'துர்கா தேவி' வடிவமாகும். இந்த துர்கா தேவிக்கு மங்கள சண்டிகா என்கிற பெயரும் உண்டு.  துர்கையின் அருளைப் பெறுவதற்கு செய்யப்படும் ஒரு ஹோமம்தான் ‘சண்டி ஹோமம்.’

சண்டி ஹோமம் ஒரு பிரம்மாண்டமான ஹோமம் என்பதால் பொருளாதார வசதி மிகுந்தவர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அதனால்தான் எல்லோரும் கூடி தங்களால் இயன்ற பொருளுதவியை செய்து பொதுவாக கோயில்களில் எல்லோருடைய நன்மைக்காகவும் இந்த ஹோமத்தை செய்கிறார்கள். பல வருடங்கள் ஹோம பூஜை செய்வதில் அனுபவம் பெற்ற ஒன்பது வேதியர்களைக் கொண்டு செய்யப்படுகிறது இந்த ஹோமம்.

இந்த ஹோமத்தில் பல தெய்வங்களை பூஜித்தும் 700க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த மந்திர உருவேற்றி பூஜை செய்யப்படுவதால் இந்த ஹோமம் செய்பவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. பூஜையின் முடிவில் 10 வயதுக்குட்பட்ட கன்யா பெண்களை துர்கா தேவியாக பாவித்து, அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு புத்தாடைகள் மற்றும் இதர மங்கலப் பொருட்கள் வழங்கப்படும். சண்டி ஹோமம் செய்வதால் வாழ்வில் ஏற்படும் தடை, தாமதங்கள், திருஷ்டிகள், மறைமுக எதிரிகள், சாபங்கள் எல்லாம் விலகி வீட்டில் செல்வம் பெருகும்.  நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை குடும்பத்தினருக்கு உண்டாகும். தனிப்பட்ட முறையில் சண்டி ஹோமம் செய்ய முடியாவிட்டாலும், இந்த ஹோமம் நடைபெறும் கோயில்களுக்குச் சென்று நம்மால் இயன்ற பூஜை பொருட்களை வாங்கித் தந்து ஹோமத்தில் கலந்து கொள்வது பெரும் நன்மை பயக்கும்.

சண்டி தேவிக்கென்றே தனிக் கோயில் ஒன்று உத்திரகாண்ட் மாநிலத்திலுள்ள ஹரித்வாரில் அமைந்துள்ளது. இமயமலையின் தென்கோடி மலைத் தொடரான சிவாலிக் மலைகளின் கிழக்கு உச்சியில் 1929ல் இந்தக் கோவில் காஷ்மீர் மன்னராக இருந்த சுசத் சிங் என்பவரால் கட்டப்பட்டது என்று கூறப்பட்டாலும், இக்கோயிலிலுள்ள பிரதான மூர்த்தியான சண்டி தேவியின் திருவுருவச் சிலை 8ம் நூற்றாண்டில் ஸ்ரீ ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சண்டி தேவி கோயில் ஹரித்வார்
சண்டி தேவி கோயில் ஹரித்வார்https://www.trawell.in/

சண்டி என்று அழைக்கப்படும் சாமுண்டி தேவிக்கு புராணத்தில் ஒரு வரலாறு காணப்படுகிறது. நீண்ட காலத்திற்கு முன்பு அசுரர்களான சும்பன் - நிசும்பன் ஆகிய இருவரும் தேவலோகத்தின் தலைவனான இந்திரனின் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றி தேவர்களை அங்கிருந்து துரத்தியடித்தனர். தேவர்கள் கலக்கமுற்று பார்வதி தேவியை பிரார்த்தனை செய்ய, அப்பொழுது பார்வதி தேவியின் திருவுருவத்திலிருந்து சக்தி வாய்ந்த, அதே சமயத்தில் திகிலூட்டும் வடிவத்தில் ஒரு பெண் வெளிப்படுகிறாள். அவளது அழகைக் கண்டு வியந்த சும்பன் அவளை மணம் செய்துகொள்ள விரும்பினான்.

இதையும் படியுங்கள்:
காலில் வெள்ளியும் கழுத்தில் தங்கமும் ஏன் அணிய வேண்டும் தெரியுமா?
Do you know where there is a separate temple for Chandi devi?

அந்தப் பெண் சும்பனை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் சும்பன் அவளைக் கொல்ல சந்தன் - முண்டன் என்னும் அரக்கர்களை அனுப்பினான். பார்வதி தேவியில் உருவத்திலிருந்து உக்கிரத்துடன் வெளிப்பட்ட சாமுண்டி தேவியால் அவர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, சாமுண்டி தேவி நீல பர்வதத்தின் உச்சியில் சிறிது நேரம் ஓய்வெடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புராணத்திற்கு சாட்சியாக நீல பர்வதத்தின் உச்சியில் கட்டப்பட்ட கோயிலே சாமுண்டி என்னும் சண்டி தேவிக்கு அமைந்த ஒரே கோயிலாகும்.

இந்தக் கோயில் இந்தியாவின் மிகப் பழைமையான கோயில்களில் ஒன்றாகும்.  நவராத்திரி, கும்பமேளா போன்ற விசேஷங்களின்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து இங்கே சண்டி தேவியை வழிபடுகின்றனர். இந்தத் தலம் பக்தர்களின் வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றும் வழிபாட்டுத் தலமாகப் போற்றப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com