காகம் மண் பொம்மைகளை காணிக்கையாக செலுத்தும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

குச்சனூர் சனி பகவான்
குச்சனூர் சனி பகவான்
Published on

தேனி மாவட்டம், குச்சனூரில் அமைந்துள்ளது பிரபலமான சனி பகவான் கோயில். சனி தோஷம் உடையவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து மனமுருக வேண்ட, அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு காகத்திற்கு அன்னமிட்டு வழிபடுகின்றார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில் இதுவென்றாலும் இன்று வரை கும்பாபிஷேகம் காணாத, வேறு எங்கும் இல்லாத வழக்கமாய் பூஜைக்கு மண்ணாலான காக்கை பொம்மைகளை காணிக்கையாக செலுத்துவது போன்ற பல அதிசயமான விஷயங்கள் நிறைந்துள்ள ஒரே கோயில் இதுவென்பது சிறப்பு.

அனைத்து ஆலயங்களிலும் சனி பகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்து சுயம்புவாக சனி பகவான் வீற்றிருப்பது இந்த குச்சனூரில்தான். அரூப வடிவ லிங்கம் பூமியிலிருந்து வளர்ந்துகொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் காப்பு பூசப்பட்ட நிலையிலேயே இந்த சுயம்பு மூர்த்தி உள்ளது.

குச்சனூர் வரவேற்பு முகப்பு
குச்சனூர் வரவேற்பு முகப்பு

இக்கோயிலில் ஆடி பெருந்திருவிழா 5 வாரம் நடைபெறும். இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை சனி பெயர்ச்சி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதும், ஆடி மாதம் சனிக்கிழமைகளில், குறிப்பாக மூன்றாம் சனிக்கிழமை கம்பளத்தார் மேல்பூலாநந்தபுரம் ஊரைச் சேர்ந்தவர்கள் ஆட்டம் ஆடி கோயிலில் சிறப்பு பூஜை செய்வார்கள்.

தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்களிலிருந்தும் இக்கோயிலுக்கு நிறைய பேர் வருகின்றனர். செண்பகநல்லூர் என்பது இக்கோயிலின் புராணப் பெயர்.  சனீஸ்வரருக்கு காகம் வாகனமாகவும், எள் தானியமாகவும் உள்ளது. சுயம்புவாக சனி பகவான் அருளும் இக்கோயிலில் விடத்தை மரம் தல விருட்சமாகவும், கருங்குவளை தல மலராகவும், வன்னி இலை தல இலையாகவும் உள்ளது.

இக்கோயிலில் விநாயகப் பெருமான், முருகன் சன்னிதிகளும் உள்ளன. உட்புறமாக லாட சன்னியாசியின் கோயில் உள்ளது. வாய்க்கால் கரையில் சோணை கருப்பண்ணசாமி கோயிலும் அதற்குப் பக்கத்தில் கன்னிமார் கோயிலும், நாகர்கோயிலும் உள்ளன. சோணை கருப்பண்ணசாமிக்கு பொங்கல் வைப்பதும், ஆயிரக்கணக்கான மதுபான பாட்டில்களை படையலிட்டு வழிபாடும் நடத்தப்படுகிறது.

குச்சனூர் கோயில் முகப்பு
குச்சனூர் கோயில் முகப்பு

சனி பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம் இது. காகத்திற்கு இங்கு எப்போதும் முதல் மரியாதைதான். நாள்தோறும் பூஜை முடிந்த பின் காகத்திற்கு அன்னம் வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அன்றைய தினம் தடையாகக் கருதி பூசாரிகள் சனி பகவானிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் காகத்திற்கு அன்னம் வைப்பார்கள். காகம் உணவு எடுத்த பிறகுதான் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கப்படும். இது இன்றளவும் இக்கோயிலில் கடைப்பிடித்து வரும் பழக்கமாகும். சனி பகவானுக்கு மிகவும் உகந்த எள் பொங்கலும் இங்கு வைக்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தினகரன் என்ற மன்னன் வாழ்ந்து வந்ததாகவும் அவனுடைய வளர்ப்பு மகன் சந்திரவதனன் சனி பகவானை வணங்குவதற்காக சுரபி நதிக்கரையில் சுயம்பு வடிவ சனீஸ்வர பகவானுக்கு குச்சுப்புல்களை சேகரித்து ஒரு கூரை அமைத்து சனி பகவானுக்கு கோயில் எழுப்பி வழிபட்டு வந்தார் என்றும் குச்சினால் அமைக்கப்பட்ட கோயில் என்பதால் இந்த ஊருக்கு, ‘குச்சனூர்’ என்று பெயர் வந்ததாகவும் தல வரலாறு கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
கொட்டாவி விடுவதன் காரணம் தெரியுமா?
குச்சனூர் சனி பகவான்

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றிய கோயில் என்பதாலும், இது சுயம்புவாக தோன்றிய காரணத்தினால் இன்று வரை கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. பெரியாறும் சுருளி ஆறும் இணைந்து உருவானதுதான் சுரபி ஆறு. இக்கோயில் சென்று சனீ பகவானை வழிபட நினைப்பவர்கள் காலை 6 மணி முதல் 12 வரை வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் சென்று வழிபடலாம். சனிக்கிழமைகளில் இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

தேனியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலுக்கு அடிக்கடி டவுன் பஸ் செல்கிறது. கோயிலுக்கு முன்புறம் பெரியாறு வாய்க்கால் செல்கிறது. விருப்பம் இருந்தால் அதில் குளிக்கலாம். பூஜை செய்ய அர்ச்சனை தட்டு தேங்காய், பழம், பூ ஆகியவை வாங்கும்போது காக்கை உருவம் கொண்ட குட்டி மண் பொம்மைகளும் அங்கே கிடைக்கின்றன. அதையும் சேர்த்து பூஜைக்கு கொடுக்கும் வழக்கம் உள்ள ஒரே கோயில் இதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com