திருமணத்தடை நீங்க ‘கல்வாழை பரிகாரம்’ செய்யும் கோவில் எது தெரியுமா?

Kal vazhai pariharam
Kal vazhai pariharam for marriageImage Credits: indiatempletour.co
Published on

திருப்பைஞ்ஞீலி கோவில் திருமணத்தடைக்கு பரிகார ஸ்தலமாக இருக்கிறது. உங்கள் வீட்டிலும் திருமணத்தடை இருக்கிறது, திருமணம் கைக்கூடி வரவில்லை என்றால் இந்த கோவிலுக்கு சென்று வந்தால் நிச்சயம் திருமணம் நடைப்பெறும் என்று சொல்லப்படுகிறது.

காவேரி வடகரையில் பாடல்பெற்ற 61ஆவது திருத்தலமாக விளங்கும் கோவில்தான் திருப்பைஞ்ஞீலி கோவிலாகும். இந்த கோவில் திருச்சி மாவட்டத்தில் மணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ளது.

இந்த கோவில் கி.பி ஆறாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. இக்கோவிலுக்கு ராஜேந்திர சோழன், ராஜராஜ சோழன், சுந்தரப்பாண்டியன், மகேந்திர பல்லவன் போன்ற பல்வேறு மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர். ஏழு கன்னிமார்களான பிராம்மி, வராகி, வைஷ்ணவி, மகேஷ்வரி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் திருமணவரம் வேண்டி இங்கே தவம் புரிந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அவர்கள் முன் தோன்றிய பார்வதி வேண்டிய வரங்களை தந்து வாழைமர வடிவில் அந்த தலத்திலேயே குடிகொண்டதாக வரலாறு சொல்கிறது. இக்கோவிலில் தலவிருட்சம் வாழைமரமாகும்.

பிறகு இந்த வனத்தில் சிவனும் லிங்க வடிவத்தில் எழுந்தருளினார் என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலின் சிறப்பம்சமாக சொல்லப்படுவது கல்வாழை பரிகாரம். இக்கோவில் புத்திரதோஷம், செவ்வாய் தோஷம், திருமணத்தடை நீக்கும் பரிகார ஸ்தலமாக இன்றுவரை உள்ளது. திருமணம் ஆகாத ஆண்களோ அல்லது பெண்களோ இக்கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்து அங்கு இருக்கும் கல்வாழை பரிகாரத்தை செய்து வந்தால் அவர்களுக்கு நிச்சயமாக திருமணம் நடைப்பெறும் என்பது ஐதீகம்.

கல்வாழை பரிகாரம் என்பது, கல்வாழையில் மாங்கல்யத்தை கட்டி பரிகாரத்தை நிறைவேற்றுவார்கள் இங்கு வரும் பக்தர்கள். பிறகு திருமணம் நடந்ததும் தம்பதியராக வந்து பரிகார பூஜையை நிறை வேற்றுவார்கள். இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் வாரத்துக்கு அனைத்து நாட்களிலும் பரிகாரம் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இங்கு பல மாவட்டத்திலிருந்தும், பல மாநிலங்களிலிருந்தும் வந்து பரிகார பூஜை செய்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனியை பற்றித் தெரியுமா?
Kal vazhai pariharam

இங்கு எமதர்மனுக்கு என்று தனி சன்னதி அமைக்கப் பட்டுள்ளது. திருக்கடையூரில் தம் காலால் உதைக்கப் பட்டதால் இறந்த எமதர்மராஜனுக்கு இறைவன் திரும்ப உயிர்க்கொடுத்து அதிகாரத்தை வழங்கிய கோவில் இந்த திருப்பைஞ்ஞீலி கோவிலாகும். கடன் பிரச்சனை, வேலையில்லாமல் இருப்பவர்கள் இந்த சன்னதியில் வந்து வழிப்பட்டால் நிச்சயம் நல்லது நடக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சனிக்கிழமையில் இந்த சன்னதியை வழிபடுவது மேலும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இருக்கும் பல்வேறு குடைவரைக் கோவில்களில் இந்த கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் சித்திரை திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று தேரோட்டம் இங்கு நடக்கும். இக்கோவிலில் எமனுக்கு சன்னதியிருப்பதால் நவக்கிரகங்கள் கிடையாது.

மேலும் இங்கிருக்கும் இறைவனை தரிசிக்க படிக்கட்டுகளிலிருந்து கீழிறங்கி தரிசிக்க வேண்டும். இத்தகைய சிறப்புகளை கொண்ட கோவிலுக்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்துவிட்டு வருவது நல்லதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com