காலகாலேஸ்வரர் கோவில்...
காலகாலேஸ்வரர் கோவில்...

அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு அபிஷேகமே நடக்காத தலம் பற்றி தெரியுமா?

Published on

பொதுவாக மகாவிஷ்ணுவை அலங்கார பிரியர் என்றும் சிவபெருமானை அபிஷேகப் பிரியர் என்றும் கூறுவது வழக்கம். ஆனால் இப்பொழுது நாம் பார்க்க போகும் இந்த தலத்தில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் என்பதே கிடையாது. ஏனெனில் இந்த லிங்கம் மணலாலும் நுரையாலும் செய்யப்பட்டது அதை பற்றி கொஞ்சம் பார்ப்போமா!

மிருகண்டு முனிவருக்கு தெய்வக் குழந்தையாக பிறந்த மார்க்கண்டேயனின் ஆயுசு 16 என்பது அனைவருக்கும் தெரியும். தன்னுடைய ஆயுள் முடியப் போவதை அறிந்த மார்க்கண்டேயன் திருக்கடையூரில் வீற்றிருக்கும் அமிர்தகடேஸ்வரரை வணங்கி வந்தார்.

உயிரைப் பறிக்கும் தனது கடமையைச் செய்ய எமன் வர, உடனே மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டித் தழுவிக்கொண்டான்.

ஆனாலும் கடமை தவறாத எமன் பாசக்கயிற்றை வீச அது மார்க்கண்டேயனுடன் அவன் கட்டித் தழுவிய லிங்கத்தின் மீதும் பட சிவன் கோபம் கொண்டார் . தன் பக்தனையும் தன்னையும் பாசக்கயிற்றால் தீண்டிய எமனுக்கு, நீ பூலோகத்தில் சாதாரண மனிதனாக பிறப்பாய் என்று சாபம் கொடுத்தார்.

இதனால் உலகில் இறப்பு வேலை தடைப்பட்டு பூமாதேவி பாரம் சுமக்க முடியாமல் வருந்தினாள். இந்த நிலையில் பூலோகம் வந்த எமன், கவுசிக நதிக்கரை வந்து தனது இழந்த சக்தியினை திரும்பப் பெறுவதற்காக சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய கற்பாறையினைத் தேடினார். கிடைக்காமல் போகவே தனது கையில் இருந்த குச்சியினால் நதிக்கரையில் உள்ள மணலைத் தோண்ட நதியிலிருந்து நுரை பொங்கி வர அந்த நுரையிலேயே, மணலும் நுரையும் சேர்த்து லிங்கத் திருமேனியை அமைத்து வணங்கி தன்னுடைய சாபம் நீங்க பெற்று விண்ணுலகம் சென்றார். எமதர்மன் தேவ பிரதிஷ்டை செய்த லிங்கம் மணலாலும் நுரையாலும் ஆனதால் பால், தயிர் போன்ற பொருட்களால் காலாலேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது

கொங்கு நாட்டு திருக்கடையூர் என்ற பெயர் பெற்றது இந்த காலகாலேஸ்வரர் கோவில். 1300 ஆண்டுகள் பழமையானது என கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன. சோழர் காலத்து கட்டிட வேலைப்பாடுடன் அமைந்துள்ளது.  எமதர்ம ராஜனே பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் ஈஸ்வரன் காலகாலேஸ்வரன் என அழைக்கப்படுகிறார். சோழ மன்னன் கரிகாலன் இந்த கோவிலை புணரமைத்ததற்கான சான்றுகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
நிகழ்காலத்திலேயே இருந்தால் மகிழ்ச்சி நிலைக்கும்!
காலகாலேஸ்வரர் கோவில்...

கால காலேஸ்வரரை வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் எனவும் நாள்பட்ட நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது திருமணத் தடை விலகவும் இங்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.  ஆயுஷ்ய ஹோமம் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும்.

கோயம்புத்தூரிலிருந்து அன்னூர் செல்லும் வழியில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் கோவில்பாளையம் என்ற ஊர் உள்ளது கோவில்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சற்று தூரத்தில்தான் காலகாலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com