துன்பங்களைப் போக்கும் துல்ஜா பவானி!

ஸ்ரீ துல்ஜா பவானி
ஸ்ரீ துல்ஜா பவானி

ன்னை பராசக்தி  துர்க்கை, காளி,  அம்பிகை, சாமுண்டி,  திரிபுரசுந்தரி என பல வடிவங்களில் பக்தர்களால் வழிபடப்படுகிறாள்

அவ்வகையில் பராசக்தியின் அவதாரமான பவானி தேவியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அம்பிகை உறையும் துல்ஜா பவானி கோயில் மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் துல்ஜாபூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. சோலாப் பூரிலிருந்து 45 km துரத்தில் இக்கோயில் உள்ளது. ஸ்ரீ துல்ஜாபவானி மந்திர் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

இக்கோயிலைப் பற்றி பல கதைகள் உள்ளன. மதுகைடப் என்ற அரக்கன் தேவர்களுக்கும் மக்களுக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர்கள் பிரம்மாவிடம் உதவி கேட்டனர். பிரம்மா சக்தி தேவியிடம் உதவி கேட்கும்படி அறிவுறித்தினார். பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பார்வதி பவானி தேவியின் வடிவத்தை எடுத்து, அசுரனை அழித்து அமைதியை நிலைநாட்டினாள்.  எருமை வடிவில் மாறுவேடத்தில் வந்த மகிஷன் என்ற அரக்கனை பவானி தேவி அழித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

மற்றொன்று "கர்தம்" என்று அழைக்கப்படும் ஒரு முனிவரைப் பற்றியதாகும்.  அவர் இறந்த பிறகு, அவரது மனைவி அனுபூதி மந்தாக்கனி ஆற்றின் கரையில் தவமிருந்து தனது குழந்தையை காக்கும்படி பவானி தேவியிடம் வேண்டலானாள். அப்போது குகுர் என்ற அரக்கன் அவளை சித்திரவதை செய்ய முயன்றான். ஆனால் அன்னை பவானி தன் பக்தையை காப்பாற்றி  அரக்கனை வதம் செய்தாள். அன்று முதல் பவானி தேவி துல்ஜா பவானி என்று அழைக்கப்படுகிறாள்.

மராட்டிய  மகாராஜா சிவாஜி ஒவ்வொரு போருக்கு முன்பும் பவானி தேவியிடம் ஆசீர்வாதம் பெற கோயிலுக்கு வருகை தருவார். பவானி தேவி இவருக்கு 'பவானி தல்வார்' என்ற வாளைக் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

இந்த கோயில்  12 ஆம் நூற்றாண்டில் கடம்ப வம்சத்தைச் சேர்ந்த மராட்டிய மகாமண்டலேஷ்வர மரததேவாவால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு மூன்று வாயில்கள் உள்ளன, பிரதான நுழைவாயில் சர்தார் நிம்பல்கரின் பெயரிடப்பட்டது, மற்ற இரண்டு சத்ரபதி சிவாஜியின் பெற்றோரின் பெயரிடப்பட்டது. பெரிய படிக்கட்டுகளின் அடிப்பகுதிக்கு வரும்போது, பிரதான துல்ஜா கோயிலைக் காணலாம்

பிரதான வாயிலின் இடது புறம் சித்தி விநாயகர் கோயில் உள்ளது. வலதுபுறம் ஆதிசக்தி, ஆதிமாதா மதங்கதேவி கோயிலும்.மையப் பகுதியில் அன்னபூர்ணா தேவிக்கு ஒரு சன்னதியும் உள்ளது

பவானி தேவியின் சிலை சுயம்புவாக தோன்றியதாக கருதப்படுகிறது. கருங்கல்லால் ஆன இந்த சிலை மூன்றடி உயரம் கொண்டது. எட்டு கரங்களையுடைய மகிஷாசுரமர்த்தினி ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்த நிலையில், எட்டு கைகளிலும் ஆயுதங்களை ஏந்தியவாறு காட்சியளிக்கிறாள். தேவியின் தலையின் வலது மற்றும் இடது பக்கங்களில் சந்திரனும் சூரியனும் உள்ளன. துல்ஜாபவானியின் வலது பாதம் மகிஷன் என்ற அசுரனின் மீதும், இடது பாதம் தரையிலும் காணப்படுகிறது.  

ஸ்ரீ துல்ஜா பவானி
ஸ்ரீ துல்ஜா பவானி

ஸ்ரீ ராமர்  சீதையைத் தேடியபோது, இங்கு வந்து ஸ்ரீ துல்ஜா பவானியின் ஆசீர்வாதங்களைப் பெற்றாராம்.

பாண்டவர்களின் தலைவரான யுதிஷ்டிரர் மகாபாரதப் போருக்கு முன்னர் ஸ்ரீ துல்ஜா பவானியின் ஆசீர்வாதங்களைப் பெற்றதாக நம்பப்படுகிறது.

ஸ்ரீ துல்ஜாபவானி தேவியின் நகரும் கருவறை  சிலையே ஒரு பல்லக்கில் வைக்கப்பட்டு, கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. வருடத்திற்கு மூன்று முறை, பவானி அம்மனின் சிலை சிம்மாசனத்திலிருந்து நகர்த்தப்பட்டு சன்னதிக்கு வெளியே உள்ள ஆசனத்தில் வைக்கப்பட்டு வணங்கப் படுகிறது.

இதையும் படியுங்கள்:
இங்கே ஒரு பாம்பு கூட இல்லையாம்... ஆச்சரியமாக இருக்கா?
ஸ்ரீ துல்ஜா பவானி

பெரும்பாலான மகாராஷ்டிர மக்களின் குல தெய்வமாக பவானி அம்மன் விளங்குகிறாள். பக்தர்களின் பாவங்களையும் நோய்களையும் நீக்கும் பல தீர்த்தங்கள் இங்கு உள்ளன. சாதாரண நாட்களிலேயே கூட்டம் அலை மோதுகிறது. கூட்டம் சற்று குறைவாக இருக்கும் மாலை வேளையில் சென்று அன்னையை நிதானமாக தரிசித்து வரலாம்

விநாயக சதுர்த்தி, துல்ஜாபூர் பவானி திருவிழா, தீபாவளி மற்றும் ஹோலி ஆகியவை இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களாகும். துல்ஜா பவானி திருவிழா தீர்க்க பூஜை மற்றும் நவராத்திரி என்றும் அழைக்கப் படுகிறது. இது ஆண்டுக்கு இரண்டு முறை கொண்டாடப் படுகிறது. இந்த திருவிழா  பெண்ணின் சக்தியையும், தீயவைகளை அழித்து நல்லவற்றை நிலை நாட்டுவதையும் குறிக்கிறது.

தரிசன நேரம்: ஸ்ரீ துல்ஜா பவானி கோயிலின் தரிசன நேரம் காலை 04:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com