இடையூறுகளை அகற்றி நலத்தைத் தருபவர் கணபதியே...

அத்தியாயம் -10
இடையூறுகளை அகற்றி   நலத்தைத் தருபவர் கணபதியே...
Published on

ங்கரருடைய உபதேசங்களால் வேதாந்த தத்துவம் பயன் அடைந்தது. மத நம்பிக்கைகளிலும்,வழிபாடு போன்ற சம்பிரதாய ஏற்பாடுகளிலும்,தேவையில்லாமல் புகுந்து விட்டிருந்த மாசுகளை சங்கரர் கலைந்து மதத்தைத் தூய்மை படுத்த முயன்றபோது, அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்ட சூழ்நிலைகளும் ஏற்பட்டதுண்டு. அவர் அதை பொருட்படுத்தாமல் தனது தூய்மைப்படுத்தும் பணியைத் தொடர்ந்தார். சங்கரர் கருத்துப்படி உருவமும், பெயரும் கொண்ட தெய்வத்தை மனதால் சமைத்துக் கொள்வது மிகமிக உயர்ந்தது ஆகாது.

தெய்வம் என்பது மக்கள் சமூகத்துக்கு அளிக்கப்பட்ட ஒரு சகாயச் சலுகையும் இல்லை. பயனற்றதென ஒதுக்கக் கூடியதும் அல்ல என்பதே சங்கரர் கருத்து.

இறைவனிடம் பக்தி கொள்வது அத்வைத ஞானம் ஏற்படுவதற்கு அவசியமான ஒரு படிக்கட்டு. இந்த நேரத்தில் பார்த்தால் இறைவனை எந்தப் பெயரிட்டு வணங்குகிறோமோ அந்தப் பெயர் அவ்வளவு முக்கியமில்லை. வணங்குவதிலும்,வழிபாடு செய்வதிலும் இருக்கும் தீவிரமும், ஆழமுமே முக்கியமானவை. சங்கரர், "ஹரியைப் போற்றுகிறேன்"என்று ஒவ்வொரு செய்யுளும் முடியும் ஒரு நூலில் இவ்வாறு விளக்குகிறார்.

எந்த ஒரு தத்துவத்தை அறிஞர் பலரும் தம்தம் அறிவிற்கு ஏற்ப,பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்,அக்னி,சூரியன்,சந்திரன், இந்திரன், வாயு, யாகம், யக்ஞமென பல்வேறாக குறிப்பிடுகிறார்களோ... அதே ஹரியைப் போற்றி துதிக்கிறேன். அந்த ஹரிதான், பிறப்பு ... இறப்பு எனும் இருளைப் போக்கி அருள்பவர். "சமயத்தின் சாரம் ஒன்றே.., அதன் வெளிபாடுகள்தான் வேறுவேறானவை.சங்கரர் ஆன்மீகத் தத்துவத்தின் அகிலத்துக்கும் பொதுவான இயல்பைத் தன் கொள்கையாக வகுத்துக் கொண்டு..அதே நெறியில் ஒழுகியும் வந்தார்.அவர் எத்தகைய வேறுபாடும், வித்தியாசமும் பாராட்டாமல்..கடவுளின் வெவ்வேறு வடிவங்களும்..பல பெயரில்,பல வடிவங்களில் மக்கள் வழிபட்டு வந்த தெய்வங்கள் அனைத்திற்கும்...வணக்கம் செலுத்தினார்.இந்து மதத்தின் பல்வேறு உட்ப்ரிவுகளையும் சீர்திருத்தி,பண்படுத்தி இணைத்துத் திரட்டினார். .

ஒரு இளம் துறவி-..சந்நியாசி,இருந்த இடத்தில் இருந்து பல,பரிவாரங்கள் பின் தொடர்ந்து வர, ஒற்றுமை,சமயக் கருத்தில் ஒருமைப்பாடு,அமைதி,குழப்பம் இல்லாத சாந்தி போன்றவற்றை உபதேசம் செய்து கொண்டு,ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு சென்று கொண்டிருந்த அந்தக் காட்சி கடவுளரும் விரும்பும் காட்சியாகும்.

சங்கரர் நாட்டின் ஒரு கோடியில் இருந்து மறு கோடிக்குச் சென்ற பயண விவரங்களை வெவ்வேறு விஜய நூல்கள் வெவ்வேறு வகையாக சொல்கின்றன.

ஆனால், ஆதார நூல்கள் அனைத்தும் சங்கரர் பாரத நாட்டின் முக்கியமான புண்ணிய யாத்திரைத் தலங்கள் எல்லாவற்றிற்கும் விஜயம் செய்தார் என்பதை ஒருமுகமாகவே கூறுகின்றன. அந்த இடங்கள் எல்லாமே இந்து மதத்தின் உட்பிரிவுகள் பலவற்றிற்கும் கோட்டைகளாகவும்,கல்வி கேள்விகளின் இருப்பிடங்களாகவும் இருப்பவை.

சங்கரர் காலத்தில் ஜனங்களின் தாழ்ந்த உணர்வுகளான காமம், ஆசை முதலியவற்றை தூண்டி விட்டுச் செல்லும் வகையில் கிட்டத்தட்ட எழுபத்திரெண்டு மதப் பிரிவுகள் பரவி மக்களை பிரித்து வைத்திருந்தன.

ஆனந்தகிரி,சங்கரருடைய யாத்திரைகள் காசியில் அவருக்கும், வியாசருக்கும் விவாதம் நடைபெறுவதற்கு முன்னமேயே முடிந்து விட்டதாகக் கூறுகிறார்..அவர் தம் நூலில்.சங்கரரின் திக்விஜயத்தை அந்நூலில் விரிவாகச் சொல்லியுள்ளார்.

சங்கரர் சென்ற இடங்கள்,அவர் வாதம் செய்து வென்ற வெவ்வேறு சமயப் பிரிவுகள் பற்றிய விவரமெல்லாம் கூறியுள்ளார். கடைசியில், சங்கரரின் முடிவுகளையும், உபதேசங்களையும்... ஏற்றுக் கொண்டு எல்லோரும்.. வேதம்,வேதாந்தம் எனும் இரண்டும் காட்டும் வழியை மேற்கொண்டதையும் கூடச் சொல்லியுள்ளார்.

சங்கரர் சந்தித்த சில எதிர்த் தரப்புகளைக் காண்போம்..

ராமேஸ்வரம் போன்ற சில இடங்களில், சைவ சமயப் பிரிவுகளைச் சேர்ந்த சிலர் சங்கரருடன் வாதம் செய்ய வந்தனர்.

சைவத்துள்ளேயே பலஉட்பிரிவுகள் இருந்தன. சைவம், ரௌத்ரம், உக்கிரம், பாட்டம்,லிங்கமம்,பாசுபதம் என்பவை அவை. அவர்கள் அனைவருமே ருத்ரன் ஆன சிவபெருமானை வணங்குவதாலும் சிவபெருமானின் சின்னங்களான திருநூறு, ருத்திராட்சம் முதலியவற்றை அணிவதாலும் மோட்சம் அடையலாம் என்ற கருத்துள்ளவர்கள். உஜ்ஜெயினில் கபாலிகர் எனும் சைவர்களுடைய எதிர்ப்பு நேர்ந்தது. ஸ்படிக மாலைகளை அணிந்து கொண்டும், தலைச் சடைகளூடனும்,பிறைக் குளிகளுடனும் கபாலகர்கள் சகரரிடம் வந்தனர்.

பைரவர் எனும் சிவபெருமானே உலகில் உள்ள அனைத்திற்கும் இறைவன் என்பது அவர்கள் கட்சி. இந்தப் பேரண்டத்தை அழிப்பவர் சிவபெருமான். ஆகவே, அவர்தானுலகைப் படைப்பவரும், காப்பவரும் ஆவார். திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வைஷ்ணவர்கள் அவரை வாதம் செய்ய அழைத்தனர்.

வைஷ்ணவ சமயத்தைத் தவிர அதன் உட்பிரிவுகளாக பாஞ்சராத்திரம்,வைகாநசம்,கர்மஹீன வைஷ்ணவம் ஆகியவையும் இன்னும் சில வகைகளும் இருந்தன.அவர்கள் அனைவருமே விஷ்ணுவே பல வடிவங்களிலும் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்டவர். வைஷ்ணவ ஆகமங்களுகுத் தனிச் சிறப்பான உயர்வும், பிரமானங்களாகும் இயல்பும் உண்டு என வாதம் செய்தார்கள்.

சுப்பிரமணியத் தலத்தில் மிகவும் நுண்ணிய சூக்கும உலகத்தின் தத்துவமான ஹிரண்யகர்ப்பம் என்பவரே ஆதாரமான தெய்வம் என்ற கொள்கை கொண்ட சிலர் சங்கரரிடம் வந்து தங்கள் மதம் மிக உயர்ந்தது என வாதம் செய்தனர்.

இது தவிர, ஆங்காங்கு சில இடங்களில் சக்தி வழிபாட்டின் பலவகைச் சமயங்கள் வளர்ச்சியுற்று பரவி இருந்தன. “துவிஜா பவானிபுரம்” என்ற இடத்தில் சக்தியை பிரகிருதி என வழிபடும் சிலர் தங்கள் கொள்கையை வாதிட்டு உரைத்தனர். படைப்பு-சிருஷ்டி அனைத்திற்கும் வேறு எதனையும் சார்ந்து இராது சுவதந்திரையான பராசக்தியே பொறுப்பும், காரணமும் ஆகின்றன. தெய்வமென்னும் அவளிடமிருந்தே கடவுளான பிரம்மனும் மற்ற தெய்வங்களும் தோன்றின என்றும் கூறி,அந்த பராசக்தியை "பவானி" என்று வணங்கி வழிபடுவதே வீடு பேற்றுக்கு வழியாகும் என்றனர்.

இதே போலக் குவலயபுரம் என்ற ஊரில் மகாலட்சுமியை வழிபடும் சிலர்,செல்வத்துக்குத் தேவதையான திருமகளே உலகம் அனைத்துக்கும் தாய் ஆவாள் என்றனர்.இன்னும் சிலர் கலைத்தெய்வமான சாரதா தேவிதான் மோட்சம் தருபவள் என்றனர்.

புரங்கவரம் எனும் இடத்தில் கணபதியே முழு முதற் கடவுள் எனக் கூறும் சிலர் சங்கரரை வாதுக்கு அழைத்தனர்.இவர்கள் "காணாபத்யம்" அதாவது கணபதியை வழிபடும் சமயப்பிரிவினர் ஆவார்கள். இவர்களுக்குள் ஆறு பிரிவினர் இருந்தனர். கணபதியின் ஆறு வடிவங்களில் ஒவ்வொன்றை ஒவ்வொருவர் கொண்டனர்.(1)மஹா கணபதி (2)ஹரித்ரா கணபதி (3)உச்சிஷ்ட கணபதி (4)நவநீத கணபதி (5)ஸ்வர்ண கணபதி (6)சந்தான கணபதி.

இடையூறுகள் யாவற்றையும் அகற்றி மிக உயர்ந்த நலத்தைப் பயப்பவர் கணபதியே என்பது அவர்கள் கொள்கை. வேறு சிலர் சூரியனையே பரம்பொருளாக கொள்வார்கள்

இவ்வாறு பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த சமயவாதிகள் அனைவருக்கும் சங்கரர் கூறிய விடை ஒன்றுதான்... அத்வைதம்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com