எள் குவியலில் தோன்றிய ஏகம்பன்!

எள் குவியலில் தோன்றிய ஏகம்பன்!

த்திரப்பிரதேச மாநிலத்தில், ‘கோயில்களின் நகரம்’ என்றழைக்கப்படும் வாரணாசியில் ஏராளமான சிவத்தலங்கள் காணப்படுகின்றன. திரும்பும் திசையெங்கும் சிவபெருமான் லிங்க ரூபத்தில் காட்சி தந்தவண்ணம் இருக்கிறார். சிவபெருமானே இங்கு முதன்மைத் தெய்வமாக வணங்கப்படுகிறார். வாரணாசியில் அமைந்துள்ள சிவத்தலங்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது தில்பாண்டேஸ்வரர் திருத்தலம்.

பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இத்தலத்தின் மூலவர் லிங்கம் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சுயம்புவாகத் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆதி காலத்தில் இத்தலம் அமைந்துள்ள இடம் எள் அதிகம் விளையும் பூமியாக இருந்துள்ளது. ஒரு நாள் இப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த எள் குவியலின் மீது ஒரு சிவலிங்கம் தோன்றியதாகவும் அன்றிலிருந்து இப்பகுதி மக்கள் எள்ளையே சிவபெருமானுக்குப் படைத்து வழிபடத் தொடங்கியதாகவும் ஐதீகம். விபாண்டக மகரிஷி இத்தலத்தில் எழுந்தருளியுள்ள லிங்கத்தை வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தி மொழியில் தில் (Til) என்றால் எள் என்று பொருள். இத்தலத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள சிவலிங்கம் ஆண்டுக்கொருமுறை எள் அளவு வளர்ந்து கொண்டே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. லிங்கம் தற்போது 4.6 மீட்டர் சுற்றளவும் 1.4 மீட்டர் உயரமும் கொண்டதாக அமைந்துள்ளது. மூலவருக்கு முன்னால் நந்தியம்பெருமான் அமைந்துள்ளார்.

இக்கோயிலுக்குள் ஏராளமான சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. மேலும், இத்தலத்தில் காலபைரவர், விநாயகர், சாரதா மாதா, ராமர்-லட்சுமணர், சீதாதேவி, அனுமன், சரஸ்வதி, ராதாகிருஷ்ணர், துர்கா தேவி மற்றும் ஐயப்பன் முதலான கடவுள்களின் சன்னிதிகளும் அமைந்துள்ளன. வாரணாசியில் ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ள ஒரே தலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில் ஜகத்குரு சங்கராச்சாரியார் சன்னிதியும் அமைந்துள்ளது.

மகாசிவராத்திரி, நாகபஞ்சமி, நவராத்திரி, மகரசங்கராந்தி முதலான முக்கிய திருவிழாக்கள் இத்தலத்தில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சிவபெருமானுக்கு மிகவும் உகந்த மாதமாகக் கருதப்படும் ஷ்ரவண மாதத்தில், அதாவது ஆவணி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் இத்திருத்தலத்துக்கு வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரை பக்தர்களின் வழிபாட்டுக்காக இக்கோயில் திறந்திருக்கிறது.

வாரணாசியின் முக்கியப் பகுதியான பெங்காலி டோலா இன்டர் கல்லூரியின் அருகில் கங்கைக் கரையிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தை வாரணாசியின் எப்பகுதியிலிருந்தும் ஆட்டோவில் பயணித்து சுலபத்தில் சென்றடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com