எண்ணங்களை ஈடேற்றும் எண்ணாயிரம்!

எண்ணங்களை ஈடேற்றும் எண்ணாயிரம்!

‘மண்ணில் இருவர் மணவாளர் மண்ணளந்த

⁠கண்ணனவ னிவன்பேர் காளமுகில் - கண்ணன்

⁠அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே

⁠இவனுக்கூர் எண்ணாயிரம்’

என சிலேடைக்கவி காளமேகப் புலவர் தனது ஊர் என்று குறிப்பிடும், ‘எண்ணாயிரம்’ ஓர் சிறந்த வைணவத் தலமாகத் திகழ்கிறது. இங்கே நான்கு திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார் ஸ்ரீ மகாவிஷ்ணு. ஒன்று அழகிய சிங்கர் எனப்படும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், இரண்டு ஸ்ரீதேவி பூதேவி உடனுறை ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள், மூன்று ஸ்ரீ லக்ஷ்மி வராகர், நான்கு ஸ்ரீ வேணுகோபாலர். முனிபுங்கவர்களும், சித்தபுருஷர்களும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் திவ்ய தரிசனத்தை இந்த நடுநாட்டுப் பதியில் காட்சி தருள வேண்டினர். அதன்படி இங்கே காட்சி கொடுத்தருளினார் பரந்தாமனாகிய ஸ்ரீமந் நாராயணர்.

முற்காலத்தில் பருத்திக்கொல்லை என்று அழைக்கப்பட்ட இவ்வூரில் வசித்து வந்த ஓர் தீவிர வைணவ பக்தையின் (பருத்தி கொல்லையம்மாள்) வேண்டுகோளுக்கிணங்கி, இங்கு வந்த ஸ்ரீ ராமானுஜர் தனது கூர்மையான அறிவாலும், அருளாலும், ஊருக்கு அருகே உள்ள எண்ணாயிரம் மலையில் துறவறம் மேற்கொண்டிருந்த எட்டாயிரம் சமணர்களையும் ஸ்ரீ வைஷ்ணவத்தைத் தழுவச் செய்தார். இன்றும் இவர்களது வம்சாவளிகள் தங்களை, ’அஷ்ட சகஸ்ர கோத்திரர்’ என்றே கூறிக் கொள்கின்றனர்.

பல்லவர்களால் எழுப்பப்பட்டு, பின்னர் சோழர்களால் பல மாற்றங்கள் அடைந்துள்ளது இந்த ஆலயம். ஆதித்த சோழனின் மகனான முதலாம் பராந்தகச் சோழன் தனது ஒப்பற்ற கலைத்திறமையைக் கொண்டு, சிறியதாக இருந்த இத்திருமால் ஆலயத்தை கருங்கற் தளியாக, பேராலயமாக விரிவுபடுத்தினான்.

பராந்தகச் சோழனால் சீரமைக்கப்பட்ட இவ்வாலயம் பின்னர் இவரது பேரனான ராஜராஜ சோழனால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் காலத்தில் எசாலம், எண்ணாயிரம், நந்திவாடி மற்றும் பிரம்மதேசம் ஆகிய நான்கு ஊர்களும் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு ஊர்களிலும் வேதம் ஓதும் அந்தணர்களை குடியமர்த்தினான் மாமன்னன் ராஜராஜன். இவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இவரது மகன் ராஜேந்திர சோழன் எண்ணாயிரத்தில் வேத பாடசாலை ஒன்றை நிறுவினான். அந்தணர்களுக்கு வேண்டிய பொன்னும், நெல்லும் கொடுத்து, அவர்கள் தங்குமிடத்தையும் அமைத்துத் தந்துள்ளான். சிவ வேதியர்களுக்கும், வைணவ பட்டர்களுக்கும் போதிய நிலங்களையும் தானமாக வழங்கியுள்ளான்.

தரையிலிருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் ஆலயம் முழுதும் கருங்கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. இரு பக்கமும் தின்னைகளுடன் கூடிய முன் மண்டபம். நடுவே படிகள். உள்ளே நீண்ட மண்டப வரிசை. இங்கே ஸ்ரீ வேணுகோபாலர் காட்சி தருகின்றார். இடை மண்டபத்தின் இடப்புறம் ஸ்ரீ லக்ஷ்மி வராகர் அற்புதக்கலை வடிப்பாகத் திகழ்கின்றார். கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வைகுண்டவாச பெருமாள் வீற்றிருக்க, முன்னே ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வீற்றருள்கின்றார்.

பிரதோஷ வேளைகளிலும், சுவாதி நட்சத்திரத்தன்றும் இங்கு நரசிம்மருக்கு நடந்திடும் திருமஞ்சன சேவையில் கலந்துகொண்டு நரசிம்மருக்கு பாலபிஷேகம் செய்து, பானகம் நிவேதனம் செய்பவர்களது தீராத கடன் தொல்லை தீர்கின்றது. மேலும், மாந்த்ரீகம் மற்றும்  அமானுஷ்ய பிரச்னைகளால் அவதிப்படுபவர்களின் பிரச்னைகள் நிவர்த்தியாகின்றது.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் ரோஹிணி நட்சத்திரத்தன்று
ஸ்ரீ வேணுகோபாலருக்கு திருமஞ்சனம் செய்து, பால் பாயசம் நிவேதனம் செய்து பலனடைகின்றனர்.

திருமண வரம் வேண்டி வருபவர்கள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி வராகருக்கு மாலை சாத்தி பிரார்த்திக்கின்றனர்.

அமைவிடம்: விழுப்புரம் - செஞ்சி பேருந்து மார்க்கத்தில் உள்ள நேமூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது எண்ணாயிரம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com