“அம்மா வேணுமென்று அடம்பிடித்தால் பட்டினி கிடக்க வேண்டியதுதான்! உன் அம்மா துறவி மாதிரி, நந்தி கிராமத்தில் இருக்கிறாள்” என்று அலுத்துக் கொண்டபடி கைகேயியின் மகள் குகியியின் வாயில் சோற்றைத் திணித்தாள் மந்தரை.
குகியிக்குக் கண்களில் நீர் திரண்டது. ‘இப்படி பெற்றோர், சகோதரர்கள், அண்ணிமார்கள் பாசமில்லாமலே மந்தரையின் இடி சொற்கல்ளோடு வளர்ந்ததற்கு சீதைதானே காரணம்’ என்று தோன்றியது குகியிக்கு. இராமன் காட்டுக்குப் போகும்போது குகியிக்கு வயது ஐந்து. கைகேயி விரக்தியில் மூழ்க மந்தரை கையில் வளர்ந்தாள் அவள்.
அன்று நந்தவனத்தில் காற்று வாங்கிக் கொண்டிருந்த ஜானகியின் அருகில் வந்தமர்ந்தாள் குகியி. “அண்ணி! இலங்கை பெரிய நகரமா?” என்று ஆரம்பித்தாள் பேச்சை. ஒரு கட்டத்தில், “இலங்காதிபதிக்கு பத்து தலை, இருபது கைகள் இருந்ததாகச் சொல்கிறார்களே! அது கட்டுக்கதைதானே” என்றாள்.
வைதேகி சிரித்தபடி, “பொய்யில்லை! நிஜம்தான்” என்றாள்.
“நீ ஓவியம் வரைவதில் தேர்ந்தவளாயிற்றே! அவன் உருவத்தை வரைந்து காட்டுகிறாயா?” எனக் கேட்டாள் குகியி.
“நான் அவனை ஏறெடுத்தும் பார்த்ததில்லை. குனிந்திருந்த என் கண்களில் அவன் கால் பெருவிரல் நகம் மட்டுமே தெரிந்தது. ஆயினும், நகத்தைக் கொண்டே அவனது உருவத்தை என்னால் வரைய முடியும். ஏடும், எழுத்தாணியும் எடுத்து வா வரைகிறேன்” என்றாள் மைதிலி.
உடனே ஒரு பனை ஓலை விசிறி எடுத்து வந்தவள், “எழுத்தாணி எடுக்க மாளிகைக்குள் செல்ல வேண்டும். அலுப்பாக இருக்கிறது” என்று கூற, “பரவாயில்லை, என் கை நகத்தாலேயே வரைகிறேன்” என்று விசிறியில் இராவணன் வடிவத்தைத் தீட்டினாள் சீதை.
கர்ப்பிணியான சீதை களைப்பினாலும், தென்றல் காற்றாலும் கண்ணயர, அந்த பனையோலை விசிறியை அவள் மார்பின்மீது வைத்துவிட்டு ராமனிருக்குமிடம் சென்றாள் குகியி.
“அண்ணா! அண்ணி இராவணனின் சித்திரத்தை என்ன நேர்த்தியாக வரைந் திருக்கிறாள்!? வந்து பாரேன். கர்ப்பிணிப் பெண்கள் எவர் நினைப்போடு இருக்கிறார்களோ அவர் சாயலாகக் குழந்தை பிறக்கும் என்றார் குலகுரு வசிஷ்டர். உன் குழந்தை பத்து தலை, இருபது கைகளோடு பிறந்து தொலைக்கப் போகிறது” என்று கேலியாகச் சிரித்தாள். ராமனுக்குச் ‘சுரீ’ரென்றது. சீதையிருக்குமிடம் வந்தான். அவள் மார்பின் மீதுள்ள விசிறியைப் பார்த்தான். அரவம் கேட்டு சீதை விழித்தாள். “இதை யார் தீட்டியது?” என்று ரகுநந்தனன் கேட்க, அப்பாவியாக “நான்தான்” என்றாள் மிதிலையின் இளவரசி. ராமன் திடுக்கிட்டான்.
‘குகியி இதை யாரிடமெல்லாம் உளறப் போகிறாளோ’ என்று குழம்பினான்.
இந்த நேரத்தில்தான் வண்ணான் தன் மனைவியிடம், ‘பத்து மாதம் இராவணன் மாளிகையிலிருந்த சீதையை ஸ்ரீராமன் சேர்த்துக் கொண்ட மாதிரி என்னையும் எண்ணிவிட்டாயோ?’ என்ற கேவலமான சொல் ஒற்றர்கள் மூலம் அவனிடம் வந்தது. உடனே லக்ஷ்மணனிடம் மைதிலியைக் காட்டில் கொண்டு விடும்படி சொல்லிவிட்டார்.
விதைத்தவள் குகியி. காரணமே இல்லாமல் சீதையை வெறுத்த அவள் நோக்கப்படி, ஸ்ரீரகுபதி அதன் பின் சீதையோடு சேரவேயில்லை.