எட்டீஸ்வரர்!

எட்டீஸ்வரர்!
Published on

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்தில் அமைந்துள்ளது பையனூர். இங்கு நீதி, நியாயம், தர்மம் தவறும்போது, அதைத் தட்டிக் கேட்பவராக அருள்பாலிக்கிறார் ஸ்ரீஎட்டீஸ்வரர். தாயார் எழிலார் குழலி அம்மை.

இது பல்லவ மன்னர்கள் கட்டிச் சிறப்பித்த 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும். சைவ, வைணவ நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் விதமாக, எட்டீஸ்வரர் ஆலயமும், அருளாளப் பெருமாள் ஆலயமும் அடுத்தடுத்து இங்கு அமைந்துள்ளன. நடுவே, ‘பைரவர் குளம்’ என்ற பெயரில் தீர்த்தம் அமைந்துள்ளது.

விஜயநந்தி விக்கிரம பல்லவனால் கி.பி.1773ம் ஆண்டு இவ்வாலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்று கல்வெட்டு கூறுகிறது. இது, கருவறை கஜ பிருஷ்ட அமைப்பில் அமைந்த, கருங்கல் கோயிலாகும். கி.பி.768-ல் விஜய நந்தி விக்கிர பல்லவனின் ஆட்சிக் காலத்திலேயே இந்த ஊர் ‘பையனூர்’ என்றும் இவ்வாலய இறைவன் ‘ஸ்ரீஎட்டீஸ்வரர்’ அழைக்கப்பட்டதாகவும் கல்வெட்டு கூறுகிறது. பையனூரின் புராதனப் பெயர் ‘இராஜசேரி சதுர்வேதி மங்கலம்’ எனவும் இன்னொரு கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.

ஆலயம் புதிதாகக் கட்டப்பட்ட காலத்தில் நாகன் என்னும் பக்தன் ஸ்ரீஎட்டீஸ்வரரின் மீது மாறா பக்தி கொண்டிருந்தான். இந்த ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயப் பணி செய்து வந்தவர்களில் நாகனும் ஒருவன். விளைச்சலைப் பெற்றுக் கொண்ட ஊர்ச் சபையினர், அவனுக்குச் சேர வேண்டிய கூலியைக் கொடுக்காமல், ஏமாற்றி விரட்டினர். நாகன் இதை எட்டீஸ்வரரிடம் முறையிட, இறைவன் அங்கு தோன்றி அசரீரி வாக்காக, “நாகனுக்கு உரிய கூலியைக் கொடுங்கள். அப்படிக் கொடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அனைவரையும் தீவினைகள் துரத்தும். குடும்பத்தில் நிம்மதி இருக்காது” என்று எச்சரித்தார். குரல் வந்த திசையை அனைவரும் பார்க்க, அங்கு பிரகாசமாக ஜோதி ஒன்று நகர்ந்து ஸ்ரீஎட்டீஸ்வரரின் கருவறைக்குள் சென்று மறைந்தது என்று இக்கோயிலின் சிறப்பு பற்றி அற்புதமாகச் சொல்லப்படுகிறது. அன்றிலிருந்து நீதி, நியாயம் தவறுபவர்களை ஸ்ரீஎட்டீஸ்வரர் தண்டிப்பார் என்று நம்பப்பட்டு வருகிறது.

இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் சிதிலமடைந்துக் கிடந்த இந்த ஆலயத்தின் குளத்தில் ஸ்ரீஎட்டீஸ்வரரின் திருமேனியும், நந்தி தேவரின் திருச்சிலையும் கண்டெடுக்கப்பட்டன. தற்பொழுதுள்ள ஆலயத்தில் மூலவர் ஸ்ரீஎட்டீஸ்வரர், நந்திதேவர் (அபூர்வ நந்தி) தவிர, மற்ற விக்கிரகங்கள் அனைத்தும் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டவையே. தற்பொழுது ராஜகோபுர திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

திருமணத் தடை, தீராத வழக்குகள், குழந்தையின்மை, நாட்பட்ட நோய் போன்றவற்றைத் தீர்த்து வைக்கும் அற்புத வரப்ரசாதியாக ஸ்ரீஎட்டீஸ்வரர் திகழ்கிறார். நீதியைக் காக்கும் ஸ்ரீஎட்டீஸ்வரரையும், அன்னை எழிலார் குழலியையும் வணங்கித் தொழ, சகல செல்வங்களும் கைகூடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com