
நவராத்திரி பண்டிகை இந்தியா முழுவதும் அம்மனை பூஜிக்கும் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது இரவுகள் துர்கையின் ஒன்பது வடிவங்களும், பல்வேறு வழிபாடுகள், அலங்காரங்கள், இசை, நடனங்களுடன் சிறப்பு மிக்கதாக அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை மற்றும் சுற்றியுள்ள பிரபலமான அம்மன் கோவில்களில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் நடைப்பெறுகின்றன.
செப்டம்பர் 22ஆம் தேதி நவராத்திரி தொடங்கியது. தொடர்ந்து 9 நாட்கள் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஆண்களுக்கு 1 ராத்திரி சிவராத்திரி என்றும் பெண்களுக்கு 9 ராத்திரி நவராத்திரி என்றும் வார்த்தை புழக்கத்தில் உண்டு. அப்படி பெண்கள் விசேஷமாக கொண்டாடும் இந்த நவராத்திரி விரதம் மேற்கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்றும் சுமங்கலி பெண்கள் விரதம் இருந்தால் கணவன் ஆயுள் நீடிக்கும் என்பதும் ஐதீகம்.
இந்த நிலையில், இந்த 9 நாட்கள் கோயில்களுக்கு சென்று வழிபட விரும்புவர்கள், சென்னையில் உள்ள முக்கிய கோயில்களை கட்டாயம் விசிட் பண்ணுங்க!
1. திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்: சென்னையின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள இக்கோவில் ஞான சக்தியின் வெளிப்பாடாக விளங்குகிறது. தினமும் உச்சிக் கால பூஜையில் சிவப்பு சேலையுடன் அம்மனுக்கு பலாப்பழம் படைப்பது சிறப்பு வழிபாடு. ஆதிபுரிஸ்வரர் இங்கு எழுந்தருளியிருக்கிறார்.
2. பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்: சென்னைக்கு அருகிலுள்ள பெரியபாளையத்தில் அமைந்துள்ள இக்கோவில், நவராத்திரியில் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. கம்சனின் பிடியிலிருந்து தப்பித்து, கிருஷ்ணரின் பிறப்பை அறிவித்த தெய்வமாக பவானி அம்மன் இங்கு வழிபடப்படுகிறார். பக்தி, இசை மற்றும் விழாக்கோலத்தால் கோவில் வளாகம் நிரம்பி வழிகிறது.
3. காளிகாம்பாள் கோவில்: சென்னையின் ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள இக்கோவில், நவராத்திரியில் பெரிய கூட்டத்தை ஈர்க்கும் தலமாக உள்ளது. சங்கராச்சாரியார் நிறுவிய அர்த்தமேரு இங்கு சிறப்பு பெறுகிறது. மராட்டிய அரசர் சிவாஜி இங்கு வந்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
4. அஷ்டலட்சுமி கோவில்: எலியட்ஸ் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோவில், நவராத்திரி காலத்தில் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய முக்கிய இடமாகும். லட்சுமி தேவியின் எட்டு வடிவங்களையும் ஒரே இடத்தில் காணக்கூடிய வாய்ப்பு இங்கு கிடைக்கிறது. நான்கு தளங்களாக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில், லட்சுமி தேவியின் பல்வேறு ரூபங்கள் பக்தர்களின் வாழ்வின் தேவைகளை நிறைவேற்றுகின்றன.
5. மாங்காடு காமாட்சி அம்மன் கோவில்: சென்னையின் புறநகர் பகுதியாகிய மாங்காடில் அமைந்துள்ள இக்கோவில்... திருமண பாக்கியத்துக்காக பிரார்திக்க வந்த பெண்களின் விருப்பம் விரைவில் நிறைவேறும் என நம்பப்படுகிறது.
6. திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்: திருவேற்காட்டில் அமைந்துள்ள இக்கோவில், "வேண்டும் வரங்களை தருவாள்" என்ற நம்பிக்கையால் பிரசித்தி பெற்றது. நவராத்திரியில் அலங்காரங்கள், சிறப்பு பூஜைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் பக்தர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றன. சென்னை நகரைச் சுற்றியுள்ள அம்மன் கோவில்களில் மிக அதிகமான பக்தர்கள் வருகை தரும் இடமாக விளங்குகிறது.