

சமீபத்தில் தெலங்கானா மாநிலத்திற்கு சென்றிருந்த போது சமத்துவத்தின் சிலை என்று அழைக்கப்படும் ராமானுஜரின் மிகப் பிரம்மாண்டமான சிலை அமைந்துள்ள கோயிலுக்கு சென்றிருந்தோம். ஹைதராபாத்துக்கு அருகில் உள்ள ஷம்ஷாபாத்தில் கட்டப்பட்டுள்ளது இந்த கோவில்.
கோவிலின் சிறப்புகள்;
45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவில் மிக அருமையான ஆன்மீக சுற்றுலாத்தலமாகும். கோயிலின் தரை தளத்தில், 63,444 சதுர அடிப்பரப்பில் இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றையும், தத்துவங்களை விளக்கும் சிற்பங்களும், சித்திரங்களும் கொண்டது. 30,000 சதுர அடி கொண்ட இரண்டாம் தளத்தில், இராமானுஜரின் 120 அடி உயரம் கொண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் மூன்றாம் தளத்தில் 14,700 சது அடியில் வேத சாத்திரங்களின் மின் நூலகம் மற்றும் ஆய்வு மையம் உள்ளது.
ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த கோவில் முழுக்க முழுக்க பக்தர்களிடம் வசூல் செய்த பணத்தில் கட்டப்பட்டது என்பது தனிச்சிறப்பு. இவ்வளாகத்தில், 108 திவ்யதேசங்கள், பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் தமிழ்த் துறவிகளின் படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள வைணவ ஆலயங்கள் இடம் பெற்றுள்ளன.கோயிலுக்குள் 200 கிலோ எடையில் தங்கச் சிலை ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கோவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் என்பதில் ஐயமே இல்லை. இங்கு உடை கட்டுப்பாடுகள் உண்டு. வாயிலேயே செல்போனை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். வளாகம் முழுவதும் நந்தவனத்துடன் மிகப் பசுமையாக காட்சியளிக்கிறது. உள்ளேயே சுத்தமான குடிநீர் வசதி கழிவறை வசதி உண்டு. ஆங்காங்கே பக்தர்களுக்கு பசி எடுத்தால் உண்பதற்கு சுவையான பிரசாத ஸ்டால்கள் மற்றும் ஃபுட் கவுண்டர்களும் உள்ளன. பெரியவர்களுக்கு 200 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 120 ரூபாய்
108 திவ்ய தேசங்கள்
இராமானுஜரின் திருமேனியை சுற்றி 108 திவ்ய தேச பெருமாள் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருமாலின் திவ்ய தேசங்களை காண்பதற்கு கண் கோடி வேண்டும். இங்குள் தன்னார்வல ஆன்மீக பக்தைகள் ஒவ்வொரு சன்னதி முன்பும் நின்று அந்த சுவாமிக்குரிய மந்திர ஸ்லோகத்தை சொல்லச் சொல்ல பக்தர்களும் திருப்பி சொல்வது காதுகளுக்கு அத்தனை இனிமையாக இருந்தது.
இராமானுஜரின் சிலை .
108 படிக்கட்டுகளில் ஏறி மேலே சென்றால் அங்கே இராமானுஜரின் பிரம்மாண்டமான சிலை அழகுற வீற்றிருக்கிறது. 216 அடி உயரமும் 1500 டன் எடையும் கொண்டது இந்த சிலை. தங்கம் வெள்ளி செம்பு வெண்கலம் துத்தநாகம் ஆகிய பஞ்ச உலோகங்களால் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை 54 அடி உயர ‘பத்ராவேதி’ என்னும் கட்டிடத்தின் மேல் அமைந்துள்ளது. இது உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஐம்பொன் சிலையாக கருதப்படுகிறது.
நடுவே யானைகள் தாங்கி நிற்கும் வகையில் 54 இதழ்களுடன் 27 அடி உயரத்தில் இரண்டடுக்குத் தாமரை பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது இராமானுஜரின் அற்புத சிலை. இரண்டு அடுக்குகளிலும் 18 சங்குகள் மற்றும் 18 சக்கரங்கள் இடம் பெற்றுள்ளன யானைகளின் வாயிலிருந்து நீர் வீழ்ச்சி விழுவது போல் அமைப்பு இருக்கிறது.
இரவு நேரத்தில் வண்ண விளக்குகளில் லேசர் விளக்குடியில் ஒளிரும் விளக்குகள் அணைக்கப்பட்டு லேசர் ஒலி விளக்கு வெளிச்சத்தில் பலவித வண்ணங்களில் ஜொலிக்கிறது இராமானுஜரின் சிலை.
சமத்துவத்தின் சிலை என்று ஏன் அழைக்கப்படுகிறது?
நாடு, இனம், ஜாதி, குல வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமமானவர்கள் என்ற அடிப்படையில் மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்ட இராமானுஜரின் இந்த சிலைக்கு சமத்துவத்தின் சிலை என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் இராமானுஜர் 1017 ம் ஆண்டு அவதரித்தவர். அவரின் காலத்தில்தான் வைணவம் நாடு முழுவதும் பரவியது. சாதி, பொருளாதாரம், பாலினப் பாகுபாடு இன்றி அனைவரும் இறைவன் திருமுன் சமம் என்றும் அவனைச் சரணடைவது ஒன்றே முக்கியத்துவம் என்றும் சொன்னதோடு அதை நடைமுறைப்படுத்தியும் காட்டினார். தான் பெற்ற எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோநாராயணாய என்னும் மந்திரத்தை உலக மக்கள் அனைவருக்கும் தெரியப் படுத்தியவர். சமூக ரீதியாக ஒதுக்கப் பட்டவர்களை அரவணைத்து, அவர்களை சமமாக நடத்த வேண்டும் என்று அரசவைகளில் கேட்டுக் கொண்டவர். அந்தப் பெருமானின் சிலைக்கு சமத்துவ சிலை என்ற பெயர் சூட்டியது மிக பொருத்தம் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள்.