இன்றைய காலகட்டத்தில் யாருக்குத்தான் பணக்கஷ்டம் இல்லை? அனைவருக்கும் தேவைப்படும் ஒரு மதிப்புமிக்க பொருளாக உள்ளது பணம். இந்த அவசியத் தேவையான பணம் ஒருபுறமிருந்தாலும், வீட்டில் எப்போதுமே தீர்ந்துபோகாமல், இருந்துகொண்டே இருக்க வேண்டியதாக ஐந்து பொருட்கள் திகழ்கின்றன. இந்த ஐந்து பொருட்களில் ஒன்று தீர்ந்துபோய் விட்டாலும் அந்த வீட்டில் பெரும் வாழ்க்கை நெருக்கடி வரப்போகிறது என்பதற்கான அர்த்தமாகவே அது கருதப்படுகிறது.
அந்த ஐந்து பொருட்களில் முதலாவதாகச் சொல்லப்படுவது உப்பு. இந்த உப்பு எப்போதுமே வீட்டில் தீர்ந்து போய்விடக்கூடாது. அப்படி உப்பு முழுவதுமாகத் தீர்ந்து போய்விட்டால் உங்களுக்கு ஏதோ ஒரு பெரிய பணக்கஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம். அதனால் வீட்டை நிர்வகிக்கும் பெண்கள் எப்பொழுதுமே ஒரு பாக்கெட் உப்பு வீட்டில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.
அடுத்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது பொருளாகக் கருதப்படுவது மஞ்சள், குங்குமம். வீட்டில் எப்பொழுதும் மஞ்சள், குங்குமம் இல்லை என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. ஆம், மஞ்சள் மற்றும் குங்குமம் முழுமையாக தீர்ந்துபோகும் நிலை வந்தாலும் உங்களுக்கு பெரிய பணக் கஷ்டம் வரப்போகிறது என்றுதான் அர்த்தம். அதனால், மஞ்சள் குங்குமம் காலியாவதற்கு முன்பே அதை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வது நல்லது.
நான்காவதாக, அனைவரின் பசியைப் போக்கும் அரிசி எப்பொழுதும் வீட்டில் முழுமையாக தீர்ந்துபோய்விடக்கூடாது. அடுத்த வேளை உணவு சமைக்க அரிசி இல்லை என்ற வார்த்தை வீட்டில் எழக்கூடாது. வீட்டில் அரிசி தீர்ந்துபோவதற்கு முன்பாகவே அதை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி அரிசி முழுமையாக வீட்டில் தீர்ந்து போய்விட்டாலும் அந்த வீட்டில் பெரிய நெருக்கடி வரக் கூடும்.
ஐந்தாவது முக்கியமான விஷயம், வீட்டுப் பெண்களின் சந்தோஷம். எந்த ஒரு வீட்டில் பெண்கள் சந்தோஷமாக இல்லாமல், மிகவும் துக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அந்த வீட்டிலும் சந்தோஷம் துளியும் இருக்காது. அதனுடன், லட்சுமி கடாட்சமும் அந்த வீட்டில் இருக்காது. லட்சுமி கடாட்சம் இல்லாத வீட்டில் காசு பணம் சேராது. அதனால் வீட்டுப் பெண்கள் எப்பொழுதும் சிரிப்புடனும் சந்தோஷத்துடன் இருக்கும்படி பார்த்துக் கொள்வது குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும். எந்த வீட்டில் மேற்கண்ட ஐந்து விஷயங்களும் நிறைவாக உள்ளதோ அந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.