சிலரது வீடுகளில் தினசரி சண்டையாகத்தான் இருக்கும். இப்படி சண்டை சச்சரவாக இருப்பவர்கள் மீனாட்சி அம்மன் கோயிலில் தினசரி நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசனம் காண்பது நினைத்துப் பார்க்க முடியாத பலன்களைத் தரும். சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தும் இந்தப் பள்ளியறை பூஜையை தம்பதி சமேதராக காண்பவர்களின் குடும்பங்களில் ஒற்றுமை அதிகரிக்கும்.
அனைத்துக் கோயில்களைப் போல, மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் பள்ளியறை சன்னிதி உள்ளது. இரவு அர்த்த ஜாம பூஜையின்போது மல்லிகை பூவால் கூடாரம் அமைத்து, வெண்தாமரை மலர்களால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரித்து, வெண்பட்டு உடுத்திக் காட்சி தரும் அம்மனின் திருக்காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.
இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரின் வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னிதியில் இருந்து வரும். பாதுகைகள் வந்த பின் அன்னைக்கு விசேஷ ஆரத்தி, அதாவது மூக்குத்தி தீபாராதனை நடைபெறுகிறது. அத்தோடு, மூன்று வகையான தீபங்கள் அப்போது காட்டப்படும். அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்துக்கு மிக அருகில் காட்டப்படும். அவ்வாறு காட்டப்படும்போது மிகத் தெளிவாக அம்மனின் திருமுகத்தை தரிசிக்கலாம். மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னிதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாகத் தள்ளப்பட்டு விடும்.
மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்தச் செயினின் இன்னொரு பகுதி அம்மனின் பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும். இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார். அதாவது, மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு பாத பூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் இந்த பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டாத திருக்காட்சியாகும்.
பள்ளியறை பூஜை சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்துக்கு சிறப்பு அதிகம். அதன் பின்னர் அம்பிகையின் சன்னிதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோயில் நடை சார்த்தப்படுகிறது. கணவன், மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது மீனாட்சியம்மன் கோயிலில் மறைந்துள்ள பள்ளியறை பூஜை தரிசன ரகசியமாகும்.
குழந்தைப் பேறு இல்லாதோர், பிள்ளை வரம் வேண்டுவோர் காலையில் மீனாட்சி அம்மனுக்கு சின்னஞ்சிறு சிறுமி அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் அன்னை நிச்சயம் சந்தான பாக்கியப் பலனைத் தருவாள்.
சின்னச் சின்ன பிரச்னைகள் கூட பெரிய சண்டையாக மாறி விவாகரத்து வரை போனவர்கள்கூட, சண்டை நீங்கி சமாதானம் அடையவும், கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கவும் சிவாலயங்களில் நடைபெறும் பள்ளியறை பூஜையை சில முறை பார்க்க வேண்டும். அதுவும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசிப்பவர்களின் வீடுகளில் கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் சிவபெருமான் நகர்வலம் வரும்போது சிவபுராணம் படிக்க வேண்டும். பள்ளியறை பூஜையை தினம் தினம் தரிசனம் செய்தாலே வளமான வாழ்க்கை அமையும். பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி சுமக்கும் பாக்கியம் பெற்றவர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதிகளாக விளங்குவர். பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கொடுப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பள்ளியறை பூஜைக்கு நெய், நல்லெண்ணெய் ஆகியவை கொடுப்பவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை.