அரைநாளில் பதினான்கு திவ்ய தேச தரிசனம்!

வரதராஜ பெருமாள்
வரதராஜ பெருமாள்
Published on

’கோயில் நகரம்’ என்றழைக்கப்படும் காஞ்சி மாநகரத்துக்கு பல சிறப்புகள் உண்டு. அவற்றுள் நூற்றியெட்டு வைணவ திவ்ய தேசங்களில் பதினான்கு திவ்ய தேசங்கள் அமைந்த ஒரே நகரம் காஞ்சிபுரம் மட்டுமே. காஞ்சி மாநகரத்தில்
ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில், திருவெஃகா என்றழைக்கப்படும் ஸ்ரீ யதோத்காரி கோயில், அட்டபுயக்கர ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில், திருஊரகம் என்றழைக்கப்படும் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயில் மற்றும் அதோடு இணைந்த திருநீரகம் ஸ்ரீ திருநீரகத்தான், திருக்காரகம் ஸ்ரீ கருணாகரப்பெருமாள், திருக்கார்வானம் ஸ்ரீ கார்வானர் ஆகிய மூன்று திவ்ய தேசங்கள், திருப்பரமேச்வர விண்ணகரம் என்றழைக்கப்படும் ஸ்ரீ வைகுண்டப்பெருமாள் கோயில்,
ஸ்ரீ திருப்பவளவண்ணப் பெருமாள் கோயில், திருப்பாடகம் என்றழைக்கப்படும் ஸ்ரீ பாண்டவ தூதப்பெருமாள் கோயில், ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலுக்குள் அமைந்த திருநிலாத்துண்டப் பெருமாள், ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலுக்குள் அமைந்த திருக்கள்வனூர் கள்வப்பெருமாள், திருவேளுக்கை என்றழைக்கப்படும் ஸ்ரீ அழகியசிங்கப்பெருமாள் கோயில், திருத்தண்கா என்றழைக்கப்படும் ஸ்ரீ விளக்கொளிப் பெருமாள் கோயில் என மொத்தம் பதினான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.

காஞ்சி மாநகரத்தில் அமைந்த இந்த பதினான்கு திவ்ய தேசத் தலங்களையும் காலை ஆறரை மணிக்குத் துவங்கி பன்னிரெண்டரை மணிக்குள் தரிசித்து பேரருளாளனின் அருளைப் பெறலாம். முதலில் திருக்கச்சி என்றழைக்கப்படும்
ஸ்ரீ வரதராஜப்பெருமாளை காலை ஆறரை மணியிலிருக்கு ஏழு மணிக்குள் தரிசிக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவெஃகா என்றழைக்கப்படும் சொன்னவண்ணம் செய்த பெருமாள். அதாவது ஸ்ரீ யதோத்காரி பெருமாள் கோயிலையும், எதிர்புறத்தில் அமைந்துள்ள அட்டபுயக்கரம் எனும் அஷ்டபுஜ ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளையும் தரிசிக்க வேண்டும். இங்கிருந்து புறப்பட்டு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவேளுக்கை எனும் ஸ்ரீ அழகியசிங்கப்பெருமாளையும் இத்தலத்துக்கு அருகில் அமைந்துள்ள திருத்தண்கா எனப்படும் தூப்புல் ஸ்ரீ தீபப்பிரகாசர் விளக்கொளிப் பெருமாளையும் தரிசிக்க வேண்டும். மேற்காணும் ஐந்து திவ்ய தேசங்களும், ’விஷ்ணுகாஞ்சி’ என அழைக்கப்படும் சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளன.

தீபப் பிரகாசர்
தீபப் பிரகாசர்

’சிவகாஞ்சி’ என்றழைக்கப்படும் பெரிய காஞ்சிபுரத்தில் ஒன்பது திவ்ய தேசத் தலங்கள் அமைந்துள்ளன. இங்கு முதலில் திருப்பாடகம் என்றழைக்கப்படும்
ஸ்ரீ பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயிலை தரிசிக்க வேண்டும். இத்தலம் விளக்கொளிப் பெருமாள் கோயிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த தரிசனத்தை முடித்துக் கொண்டு, இங்கிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருப்பரமேச்சுர விண்ணகரம் எனும் மும்மாடக்கோயிலான ஸ்ரீ வைகுண்டப்பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிக்க வேண்டும். இதன் பின்னர் இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருப்பவளவண்ணம் ஸ்ரீ திருப்பவளவண்ணப்பெருமாளை தரிசித்து, அதன் எதிரில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சைவண்ணரை தரிசிக்க வேண்டும். இங்கிருந்து புறப்பட்டு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இத்தலத்தில் மட்டும் திருஊரகம்,
ஸ்ரீ உலகளந்த பெருமாள், திருநீரகம் ஸ்ரீ ஜகதீஸ்வரப் பெருமாள், திருக்காரகம் ஸ்ரீ கருணாகரப்பெருமாள், திருக்கார்வானம் ஸ்ரீ கார்வானப் பெருமாள் என நான்கு பெருமாள்களை சேவித்து, அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலுக்குச் சென்று அங்கு அமைந்துள்ள திருக்கள்வனூர்
ஸ்ரீ கள்வப்பெருமாளை தரிசித்து, இங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சென்று இக்கோயிலுக்குள் அமைந்துள்ள திருநிலாத்துண்டப் பெருமாளை தரிசித்து காஞ்சி திவ்ய தேச யாத்திரையை நிறைவு செய்யலாம்.

உலகளந்த பெருமாள்
உலகளந்த பெருமாள்

மேற்காணும் திருத்தலங்களை வரிசை மாறாமல் இதில் கூறப்பட்டுள்ளபடியே சென்றால்தான் ஒரே நேரத்தில் பதினான்கு திவ்ய தேசங்களையும் தரிசிக்க முடியும். கூடுமான வரை எங்கும் தாமதிக்காமல் ஒரு பெருமாள் தரிசனம் முடிந்ததும் விரைவாகப் புறப்பட்டு அடுத்தத் தலத்துக்குச் செல்ல வேண்டும். பதினான்கு திவ்ய தேசங்களையும் தரிசிக்க காஞ்சி மாநகருக்குள் பன்னிரெண்டு கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். சொந்த கார் வசதி இல்லாதவர்கள் ஆட்டோவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com