
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே அத்தாள நல்லூர் என்ற ஊரில் இந்தப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் என இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கு உள்ள பெருமாளுக்கு 'கஜேந்திர வரதப் பெருமாள்' என்று பெயர். மகாவிஷ்ணு வரம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க கோவில்.
இந்திரதுமன் என்ற மன்னன் அகஸ்தியர் சாபத்தால் யானை வடிவம் பெற்றான். அந்த யானை கஜேந்திரன் என்ற பெயரால் கோவில்களில் உலா வந்து கொண்டிருந்தது. மேலும் எல்லா யானைகளுக்கும் தலைமைப் பொறுப்பையும் ஏற்று நடத்தி வந்தது. ஒருமுறை கஜேந்திரன் என்ற யானை குற்றாலநாதரை வழிபட்டு மகாவிஷ்ணுவை தரிசிக்க அத்தாள நல்லூர் வந்தது.
அங்குள்ள குளத்தில் நீராடி விட்டு ஒரு தாமரை மலரை பறித்து விஷ்ணுவை வழிபடச் செல்லும் நேரத்தில் நாதமுனிவரின் சாபத்தால் முதலை வடிவம் கொண்ட கந்தர்வன் அந்த குளத்தில் இருந்தபோது கஜேந்திரனுடைய யானையின் காலை கவ்வி பிடித்துக் கொண்டது.
யானை எவ்வளவோ முயன்றும் முதலையின் பிடியில் இருந்து விடுபட முடியவில்லை. உடனே கஜேந்திரன் என்ற யானை தாமரை மலருடன் கூடிய துதிக்கியை மேலே உயர்த்தி 'ஆதி மூலமே' என்ற உரத்த குரலில் அழைத்தது.
இதைக் கேட்ட மகாவிஷ்ணு கருட வாகனத்தில் வந்து தன் கையில் உள்ள சக்கராயுததால் முதலையை கொன்று யானையை காப்பாற்றினார். அத்தி என்றால் யானை. அத்தியை ஆட்கொண்ட காரணத்தால் அத்தாள நல்லூர் என்ற பெயர் பெற்றது. இந்த ஊருக்கு கரி காத்தபுரம் பூம்புொழில் என்ற பெயரும் உள்ளது. பெருமாள் 24 திருவிளையாடல்கள் செய்த தலத்தில் இதுவும் ஒன்று. இந்த இடம் 'கஜேந்திர மோட்ச பரிகாரத்தலம்' எனவும் அறியப்படுகிறது. கோவிலின் மேற்கே தாமிரபரணி நதி பாய்கிறது.
நின்ற கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். இங்குள்ள பெருமாளை வழிபட்டால், திருப்பதி பெருமாளை வழிபட்ட பலன் கிடைக்கும். இங்குள்ள தூணில் நரசிம்மர் சிலை ஒன்று உள்ளது இந்த சிலைக்கு சந்தனம் அணிவித்து பன்னீர் அபிஷேகம் செய்தால் நாம் நினைத்தது நடக்கும். காலை ஐந்து மணி முதல் பத்து மணி வரையும் மாலை ஐந்து மணி முதல் 8 மணி வரையும் நடை திறந்து இருக்கும்.
தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. புரட்டாசி கடைசி சனி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தைப்பூசம் போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன. முக்கூடல் மற்றும் வீரவநல்லூரில் இருந்து இந்த கோவிலுக்கு பேருந்து வசதி உள்ளது. கோவில் குளத்தில் உள்ள பாறை யானை பாறை என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோவில் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
இங்குள்ள சுற்று வட்டார பகுதியில்.. கஜேந்திர வரதன், ஆதிமூலம் என்ற பெயர்கள் உடையவர்கள் நிறைய இருப்பார்கள். சுற்றுவட்டார பகுதிகளுக்கு கண்கண்ட தெய்வமாக அத்தாள நல்லூர் கஜேந்திர வரதப்பெருமாள் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.