தாமரையில் தோன்றிய கங்கை!

ஓவியம் சேகர்
ஓவியம் சேகர்

-பொன்னம்மாள்

ங்கதேசம், நாடியாவில் மாயாபூர் எனும் கிராமத்தில், ஜகந்நாத மிஸ்ரா-சசிதேவிக்கு வேப்ப மரத்தடியில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. வேப்பமரத்தடியில் பிறந்ததால் குழந்தைக்கு, 'நிமாய்' என்றும், பொன்னிற மேனி கொண்டிருந்ததால், 'கெளர் ஹரி' என்றும் பெயர் சூட்டினர். குழந்தை வளர்ந்து, தக்க பருவம் அடைந்தவுடன், 'நவத்வீபம்' என்ற ஊரில் கல்வி கற்க சேர்த்தனர். கல்வியில் தேர்ந்து, 'கௌரங்கா' என்ற சிறப்புப் பட்டமும் பெற்றார்.

அதே ஊரில் கேசவ சாஸ்திரி என்ற வித்யா மேதை, வாக்தேவியை உபாசித்து, சரஸ்வதியின் அருளைப் பெற்ற ஒருவரும் இருந்தார். ஆனால், மகா கர்வி. பல பண்டிதர்களை வாதத்துக்கழைத்து தோற்கடித்து தனது

அடிமைகளாக்கிக் கொண்டிருந்தார். ஒருநாள் நிமாயியின் ஆசான்களை சொற்போரிட அழைத்தார். அவர்கள் நிமாயியிடம் நிலவரத்தைத் தெரிவித்தனர். நிமாயி குருபக்தி மிக்கவர். கேசவ சாஸ்திரிகளிடம், "கங்கைக் கரையில் வாதப்போரை வைத்துக்கொள்ளலாம்" என்றார். அப்போது நிமாய்க்கு இருபது வயதுதான். கேசவ சாஸ்திரி பழுத்த வித்வான்.

''இப்போதும் நீ ஒதுங்கிக்கொள்ளலாம்" என்று இறுமாப்புடன் கூறினார் பண்டிதர். "வாதத்தை யார் தொடங்க வேண்டும்" என்று கேட்டார் நிமாயி. ''எதைப் பற்றிய பாடல் வேண்டும்?" என்று அகந்தையுடன் வித்வான் கேட்க, ''கங்கா நதியைப் பற்றிப் பாடுங்கள்" என்றார் நிமாயி. ஆசு கவியான கேசவர் கங்கையைப் பற்றி நூறு பாடல்களைப் பாடினார்.

"இதில் ஒரு பாடலுக்கு அர்த்தம் சொல்லுங்கள்" என்று நிமாயி கேட்க, சாஸ்திரிக்கு 'குப்'பென்று வியர்த்தது. அவர் தேவியின் அருளால் பாடுவாரே தவிர, பொருள் அறியாதவர். நிமாயி, "நீரில் தாமரை பூக்கும். தாமரையில் நீர் இருக்குமா?" என்கிறது பாடல். விஷ்ணுவின் பாதத் தாமரைகளில் கங்கையெனும் நீர் பிரவகிக்கிறது என்கிறது அடுத்த பாடல்" என்று விளக்க, கூடியிருந்த புலவர்கள் ஆரவாரம் செய்தனர்.

கேசவர் தமது இருப்பிடம் திரும்பி, "தாயே! நீ எப்போதும் என் நாவில் இருப்பேன் என்று சொன்னது பொய்யாயிற்றே" என்று கலைவாணியிடம் முறையிட, "பண்டிதனே, பாடல்களின் பொருளறிந்தல்லவா
நீ போட்டியிட்டிருக்க வேண்டும்" எனக் கூற, நிமாயிடம் சரணடைந்தார் சாஸ்திரி. அவரது அகந்தை அழிந்தது. நிமாயி, அன்றிலிருந்து 'சைதன்ய பிரபு' என்று அழைக்கப்பட்டார்!

இரவிலும் நாம சங்கீர்த்தனம் செய்வார் சைதன்யர். அப்பகுதியை ஆண்ட காதி என்ற முஸ்லிம் மன்னரிடம், 'இது அரசுக்கு எதிரான பிரசாரம்' என்று பொறாமையாளர்கள் ஓலை அனுப்ப, 'இரவில் பஜனை கூடாது' என்று அரசரிடமிருந்து உத்தரவு பிறந்தது. அன்று நரசிம்மாவதாரத்தைப் பாடி, ஆடிக்கொண்டிருந்தார் சைதன்யர். அதேசமயம் தன் மார்பில் ஒரு சிங்கம் அமர்ந்து மார்பைக் கிழிப்பதுபோல் கனவு கண்டார் மன்னர் காதி. பயத்தோடு எழுந்து பார்க்க, அவரது மார்புப் பகுதியாடை கிழிந்திருக்க, மார்பில் நகத்தால் கீறிய வடு, எரிச்சல். சிங்கத்தின் உறுமலும் கேட்கிறது. பதறிய மன்னர், அரண்மனை பண்டிதர்களிடம் விவரம் கேட்க, "சைதன்யர் விஷ்ணுவின் அம்சம். அவர் பூஜையை நிறுத்தக் கட்டளை பிறப்பித்ததால் வந்த அனர்த்தம் இது" என்றனர். ஸ்ரீ சைதன்யரிடம் மன்னிப்புக் கேட்டுக் கட்டளையை கிழித்தெறிந்தான் அரசன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com