ப்ளூய்ட் வடக்கு ஜகார்தாவில் இருக்கும் சிவ மந்திர் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். திருப்பதி பெருமாளுக்கு சார்த்தப்பட்ட வஸ்திரங்கள் வரவழைக்கப்பட்டு, இக்கோவிலில் இருக்கும் பெருமாளுக்கு மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று சார்த்தப்படுவது விசேஷம்.
சமீபத்தில் அக்கோவிலுக்கு சென்றிருந்தேன். சிவபெருமான் மட்டுமல்லாது, பிள்ளையார், பெருமாள், தாயார், முருகர், ஐயப்பர், நவ கிரகங்கள், ஆஞ்சநேயர் என பல தெய்வங்களின் சந்நிதிகளைக் கண்டு கை கூப்பி வணங்கினேன்.
பெருமாள் சந்நிதியில் பல ஆண்டு காலம் குருக்களாக இருக்கும் திரு கோபால கிருஷ்ணனிடம் பேசுகையில், கோவில் குறித்து கிடைத்த சுவாரசியமான தகவல்கள் இதோ:
கோவில் உருவான கதை:
பண்டைய காலத்தில் ஊருக்கு வெளியே இருந்த இந்த இடம், மயானத்திற்குரியதாக செயல்பட்டது. சுற்றும் சூழ வனாந்தரம். 1980 ஆம் ஆண்டிற்கு முன்பு, விமான நிலையம் கட்ட ஏற்பாடு நடக்கையில், காடுகள் மற்றும் பெரும் பகுதி மயானம் நீக்கப்பட்டன.
5-6 தலைமுறையாக சிந்து மக்கள் (சிந்தியன்) இங்கே வசித்ததால், இந்த ஊர் சிட்டிசன்கள் ஆகிவிட்டனர். இவர்களை பஞ்சாபிகளெனலாம். சுடுகாடு இருந்த காரணம், சுடுகாட்டிற்கு அதிபதியான சிவபெருமானின் சிறிய சிலை மரத்திற்கு கீழே பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நாளடைவில் இந்தியர்கள் அதிமாக, சிவமந்திர் ட்ரஸ்ட் ஒன்றை சிந்தியர்கள் உருவாக்கினர். இந்தியர்களையும் பூஜைசெய்ய அனுமதித்தனர். அப்போதிருந்த, இந்திய பிராமண சமூகம் பெருமாள் சிலையை பிரதிஷ்டை செய்து, அபிஷேகம், பூஜைகளென செய்யத் தொடங்கினார்கள். பின்னர் உத்ஸவர் வந்தார். 48 நாட்கள் விடாமல் பூஜை நடந்தது. மற்ற கடவுள்களுக்கும் சந்நிதிகள் உருவாகின.
பூஜை விபரங்கள்:
காலை-மாலை இரு வேளைகளிலும் தவறாமல் பூஜை நடைபெற்று வருகிறது. நவராத்திரி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதத்தில் பிரம்மோத்ஸவ நிகழ்வு, திருப்பதி கோவிலில் நடை பெறுவது போலவே இங்கும் நடைபெறுகிறது. கல்யாண உத்ஸவ தினமன்று 2,000 க்கும் மேல் மக்கள் வருகின்றனர்.
சனிக்கிழமை தோறும், பெருமாளை வழிபடும் வைணவர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகமாக வருகை தந்து பெருமாளுக்கு பூஜையையும், ஞாயிறன்று ஏனைய இந்தியர்கள் வந்து மற்ற தெய்வங்களுக்கு பூஜையையும் செய்து வருகின்றனர். பிராஸாதங்கள் நிவேதனம் செய்யப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படும்.
திருப்பதி பெருமாளுக்கு சாத்தப்படும் வஸ்திரம் வரவழைக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும், இங்கேயுள்ள பெருமாளுக்கு மாத திருவோண நட்சத்திரமன்று சார்த்தப்படுவது விசேஷமாகும்.
பெருமாளருகே வைக்கப்படிருக்கும் பெட்டியிலுள்ள 12 க்கும் மேற்பட்ட சாலிக்கிராமங்களுக்கு தினசரி பூஜை செய்யப்பட்டு, நிவேதனமும் அளிப்பது வழக்கம். 12 சாலிக்கிராமங்கள் ஒரு பெட்டியில் இருப்பது, திவ்யதேசத்திற்கு இணையெனக் கூறப்படுகிறது.
இங்கிருக்கும் பெருமாள் மிகவும் சக்தி வாய்ந்தவர். மனதார வேண்டி வணங்கினால் பலன் நிச்சயம். இங்கு வரும் பல்வேறு இன மக்கள் மற்றும் சைனீஸ்காரர்கள் கனவில் பெருமாள் வரும் காரணம், கூகுளின் மூலம் இக்கோவிலைத் தேடிவந்து வழிபடுகின்றனர்.
காலை 7 முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 7 மணி வரை கோவில் திறந்திருக்கும்.