மதுராவில் இருந்து தென் கிழக்குத் திசையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது கோகுலம். மதுராவில் இருந்து ஆட்டோவில் அரை மணி நேரம் பயணித்தால் யமுனைப் பாலத்தைக் கடந்து ஒரு சிறிய கிராமத்தை அடையலாம். அதுதான் கோகுலம். இது, 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றும், ஆழ்வார்களால் பாடப் பெற்ற பெருமையும் மிக்க திவ்யத் திருத்தலமாகும்.
ஸ்ரீகிருஷ்ணரின் இளமைக் காலம் இங்கு கழிந்ததாக ஐதீகம். யசோதையால் ரகசியமாக கண்ணபரமாத்மா இங்குதான் வளர்க்கப்பட்டார். கண்ணனைக் கொல்வதற்காகக் கம்சனால் அனுப்பப்பட்ட பூதனை என்ற அரக்கியைக் ஸ்ரீகிருஷ்ணர் கொன்றதும் இந்த கோகுலத்தில்தான். கிருஷ்ணரைக் கொல்வதற்காக ஏவப்பட்ட பூதனை, பேரழகி வடிவம் கொண்டு கோகுலத்துக்கு வந்தாள். ஸ்ரீகிருஷ்ணனுக்கு பால் ஊட்டுமாறு பூதனையிடம் வேண்டுகிறார் யசோதா. பூதனையும் தனது பாலை விஷமாக மாற்றிக் குட்டிக் கிருஷ்ணனுக்கு ஊட்டி கொல்ல நினைக்கிறாள். ஆனால், பாலுக்குப் பதிலாக பூதனையின் உயிரையே குடித்து விடுகிறார் குழந்தை கிருஷ்ணர். என்னதான் அரக்கியாக இருந்தாலும் - கிருஷ்ணரைக் கொல்ல நினைத்தாலும் – தனக்குப் பாலூட்டிய காரணத்தால் பூதனைக்கும் சொர்க்கத்தில் இடம் கிடைக்கச் செய்தாராம் ஸ்ரீகிருஷ்ணர்!
புகழ் பெற்ற காளிங்க நர்த்தனம் நடந்ததும் கோகுலத்தில்தான். கோகுலத்தில் ஓர் ஏரியில் காளிங்கன் என்ற நாகம் இருந்தது. அதற்குப் பல தலைகள் உண்டு. ஏரியில் தண்ணீர் குடிக்க வருகின்ற பசுக்களைப் பிடித்துச் சாப்பிடுவதுதான் அதனுடைய வேலை. இதனால் கோபம் கொண்ட ஸ்ரீகிருஷ்ணர் ஏரியில் குதித்து காளிங்கனுடன் சண்டையிட்டார். மெதுவாக நீர்ப் பரப்புக்கு வருகிறது காளிங்கன் என்ற அந்தப் பாம்பு. அதன் மீது நடனமாடியபடி காட்சி அளிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்! மேலும், அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டு கோகுலத்தை விட்டும் நீங்குகிறது நாகம். இப்படி ஸ்ரீகிருஷ்ணரின் பால்ய லீலைகள் பலவும் நடந்த புண்ணிய பூமிதான் கோகுலம்.
ஒரு சந்தின் குறுக்கே இடதுபக்கம் ஒரு நுழைவு வாசல். உள்ளே நுழைந்தால் திண்ணை வைத்த வளாகம். நடுவில் ஒரு திறந்தவெளி முற்றம். இதுதான் நந்தனின் மாளிகை. முற்றத்தின் இடதுபுறம் சதுரமாக மணல் திட்டு. நடுவில் நமது இடுப்பு உயரத்தில் ஓர் ஆரஞ்சு வர்ண மரத்தண்டு. அந்த மணல் திட்டுதான் ஸ்ரீகிருஷ்ணன் விளையாடிய இடம். அந்த ஆரஞ்சு வண்ண மரத்தண்டுதான் கண்ணனை உரலோடு யசோதா கட்டிப்போட்ட இடம். இங்கே இருக்கும் கருவறை மண்டபத்துக்குள் நாம் நிற்கக் கூடாது. உட்கார்ந்துதான் வணங்க வேண்டும். காரணம் இங்கே எல்லா இடத்திலும் கண்ணன் பரிபூரணமாக நிரம்பி இருப்பதாக ஐதீகம். மேலும், கும்பிடும்போது கைகளைத் தட்டி, ‘ஆஹா… ஆஹா’ என்று கோஷமிட வேண்டுமாம்.
இந்தக் கோயிலில் ஆண்டுக்கு மூன்று முறை தொட்டில் வைபவம் நடைபெறும். தீபாவளிக்குத் தங்கத் தொட்டில் வைபவம் அரங்கேறும். அப்போது 51 கிலோ தங்கத்திலான தொட்டிலில் ஸ்ரீகிருஷ்ணர் உறங்குவார். ஹோலி பண்டிகை சமயம் வெள்ளித் தொட்டில். கோகுலாஷ்டமி சமயம் வைரமும் முத்தும் பதித்த தொட்டில். மற்ற நாட்களில் சாதாரண மரத் தொட்டில். இந்தக் கோயிலில் ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.