குடியாத்தம் 'கெங்கையம்மன் சிரசு' திருவிழா!

Gangaiamman Sirasu festival
Gangaiamman Sirasu festival

- தா. சரவணா

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில் திருவிழாக்களில் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுத் திருவிழாவும் ஒன்று. இக்கோயில் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 29ம்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 10ம்தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 12ம் தேதி இரவு குடியாத்தம் நடுப்பேட்டை, பெரிய வாணியர் தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து கெங்கையம்மன் கோயில் தேர்த்திருவிழாவுக்கு நடுப்பேட்டை, வாணியர் தெரு வாசிகள் சார்பில் மாலைகள் மற்றும் பூச்சரங்கள் அலங்கார பூ மாலைகள், அம்மன் உற்சவ மாலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக புறப்பட்டு, பூ மாலைகள் வழங்கப்பட்டன. 13ம் தேதி தேர்த் திருவிழா முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, பின்னர் தேரோட்டத்துக்கு உற்சவர் புறப்பாடு, திருத்தேர் ஊர்வலம் தொடங்கியது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் மிளகு கலந்த உப்பை தேர் மீது போட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இத்தேர் கோபாலபுரம் சிப்பாய் முனிசாமி தெருவில் இருந்து புறப்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தெரு, காந்தி ரோடு வழியாக சென்று தரணம்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் பிற்பகல் நிலை நிறுத்தப்பட்டது. மீண்டும் மாலை தேர் ஊர்வலம் புறப்பட்டு தரணம்பேட்டை பஜார் தெரு, கண்ணகி தெரு, காந்தி ரோடு, ஜவகர்லால் தெரு வழியாக சென்று மீண்டும் சிப்பாய் முனிசாமி தெருவில் நிலைக்கு சென்று முடிவடைந்தது.

Gangaiamman Sirasu festival
Gangaiamman Sirasu festival

வரலாறு:

விதர்ப தேசத்தை ஆண்ட மன்னன் குழந்தை பாக்கியம் வேண்டி, பிரம்ம தேவனை வணங்கி, கடும் தவத்தில் ஈடுபட்டான். பிரம்மனின் வரத்தால், ரேணுகா தேவியை மகளாக பெறுகிறார். ரேணுகா தேவி வளர்ந்து, அழகு தெய்வமாக (கெங்கையம்மன்) காட்சி தரும் போது, ஜமதக்னி என்ற முனிவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இவர்களுக்கு விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் உட்பட 4 குழந்தைகள் பிறக்கின்றன.

தினம்தோறும் ரேணுகா தேவி, அருகே உள்ள தாமரைக் குளத்தில் நீராடி விட்டு, தன் கற்பு நெறியால் மண்ணில் குடம் செய்து, தாமரைக் குளத்தில் தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். இப்படியாக ஒரு நாள், ரேணுகா தேவி, குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது, ஆகாய மார்க்கமாகச் சென்ற கந்தர்வர்களின் அழகில் வியந்து நிற்கிறார். இதனால் அவரின் கற்புநெறி கலங்கப்பட்டு விடுகிறது. அதன் பின்னர் எத்தனை முறை மண் குடம் செய்தும், அது உடைந்து, உடைந்து போகிறது. இதை ஜமதக்னி முனிவர் தன்னுடைய ஞானத்தால் கண்டு கொள்கிறார். இதனால் கடும் கோபமடைந்த ஜமதக்னி முனிவர், தன் புதல்வர்கள் 4 பேரையும் அழைத்து, உடனடியாக தாய் ரேணுகாதேவியின் தலையை வெட்டிக் கொண்டு வரும்படி உத்தரவிடுகிறார். ஆனால் 3 சகோதரர்கள் தாயைக் கொல்ல மறுத்து விட, பரசுராமர் மட்டும் பொங்கி வரும் துக்கத்தை அடக்கிக் கொண்டும், பெருகி வரும் கண்ணீரைத் துடைத்தபடியும் தாய் தலையை துண்டிக்க கிளம்புகிறார். மகன் தன்னைக் கொல்ல வரும் செய்தி அறிந்த ரேணுகாதேவி, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பியோடுகிறார். அருகே உள்ள பறை சாற்றுபவர் வீட்டில் தஞ்சம் கொள்கிறார்.

ஆனால் அங்கும் பரசுராமன் வந்து விட, அங்கிருந்து தப்பி, உடல் எங்கும் கொப்புளங்களுடன் வெட்டியான் ஒருவர் வீட்டில் மறைந்து கொள்கிறார். அங்கு வந்த பரசுராமன், தாயின் தலையை கொய்ய முயல்கிறார். அப்போது வெட்டியான் மனைவி அவரைத் தடுக்க முற்பட்ட போது, அவரின் தலையையும் வெட்டி விட்டு, தாயின் தலையையும் வெட்டி தந்தையின் உத்தரவை நிறைவேற்றுகிறார். பரசுராமர் பின்னர் தன் தந்தையிடம் செல்லும் பரசுராமன், கண்ணீர் மல்க தாயின் தலையைக் கொய்ததை கூறுகிறார். இதைக் கேட்ட ஜமதக்னி, உனக்கு என்ன வரம் வேண்டும்? எனக் கேட்க, தனக்கு தாய் உயிருடன் வேண்டும் என பரசுராமன் கேட்கிறார். இதையடுத்து, தந்தை கொடுத்த மந்திர நீரை எடுத்துக் கொண்டு, தாய் வெட்டுண்ட இடத்துக்கு செல்லும் பரசுராமன், அந்த இடத்தில் தலை வெட்டுண்டு கிடக்கும் வெட்டியான் மனைவி உடலில் தன் தாய் தலையை தவறாகப் பொறுத்தி, மந்திர நீரைத் தெளிக்கிறார். அதன் பின்னர் நடந்த தவறை எண்ணிய நிலையில் உயிர் பெற்றிருக்கும் தாயை வணங்குகிறார். இதன் மூலமாக நமக்கு உணர்த்தப்படுவது கற்பு நெறி, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதாகும். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வைகாசி 1ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா இங்கு சிறப்பாக நடந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com