குரு கிருபை!

குரு கிருபை!

ஸ்ரீ ஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள் ஸ்ரீ பத்மபாதர், ஸ்ரீ ஹஸ்தாமலகர், ஸ்ரீ தோடகாச்சாரியார், ஸ்ரீ சுரேஷ்வரர் என்பதை யாவரும் அறிவோம். இதில் ஸ்ரீ தோடகர் சற்று மந்த புத்தியுடைய மாணவராக இருந்தாலும், ஸ்ரீ சங்கரரிடம் அதிகமான பக்தி கொண்டு விளங்கினார். குருவுக்கு என்னென்ன தொண்டுகள் அவரால் செய்ய முடியுமோ அனைத்தையும் ஆத்மார்த்தமாக செய்து வந்தார்.

ஒரு நாள் பிரம்ம சூத்திர வகுப்பு ஆரம்பமாக இருந்தது. ஸ்ரீ தோடகர், குருவின் வஸ்திரங்களை சுத்தப்படுத்துவதற்காக ஆற்றங்கரைக்குச் சென்று இருந்தார். அவர் வருவதற்கு சற்று தாமதம் ஆயிற்று. இதனால் மற்ற சீடர்கள் வகுப்பைத் தொடங்கச் சொல்லி ஸ்ரீ சங்கரரை வற்புறுத்தினர். ‘அவரும் வரட்டுமே, ஆரம்பிக்கலாம்’ என்று குரு சொல்லியும் கேட்காமல், தொடர்ந்து வற்புறுத்தியதோடு, ''தோடகன் ஒரு மந்த மதியுடைய மாணவன். பிரம்ம சூத்திரத்தை நீங்கள் எப்படிச் சொன்னாலும் அவனால் புரிந்துகொள்ள முடியாது. சூத்திரங்களில் அடங்கியுள்ள உயர்ந்த கருத்துக்களைப் புரிந்துகொள்ளும் தகுதி தோடகனுக்கு இல்லை. அவன் வரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை” என்றும் அவர்கள் கூறினர்.

இங்ஙனம் கூறிய சீடர்களுக்கு புத்தி புகட்டக் கருதினார் ஸ்ரீ சங்கரர். உடனே தம்மிடம் மிகுந்த பக்தி உடைய தோடகர் மீது மனமார அருளைச் சொறிந்தார். அந்த நிமிடமே தோடகருக்கு ஒரு விழிப்பு ஏற்பட்டது. திடீரென்று அறிவு பிரகாசிக்கத் தொடங்கியது. 'சாஸ்திரங்கள் அனைத்திலும் திவ்ய அறிவு உடையவரே! கருணைக்கடலே! அமிர்தக்கடலே! உபநிஷதங்களின் உயர் பொருளை வெளிப்படுத்தி அறிவூட்டுபவரே! உமது தாமரைப் பொற்பாதங்களை என் இதயத்தில் நிறுத்தி தியானிக்கிறேன். சத்குருவே, எனக்கு நீங்கள்தான் அடைக்கலம். உம்மையே தியானித்து நிற்கிறேன். நீரே என் கடவுள். நான் ஆனந்தமாக இருக்கிறேன். என்னிடத்தில் இருந்த மோக தாபத்தை வற்ற வைத்து விட்டீர்கள். வெகு நாட்களாக நான் செய்து வந்த மாபெரும் நற்செயல்களின் விளைவாகவே தங்களின் தாமரை திருப்பாதங்கள் அடியேனுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த எளியோனைக் காத்தருள்வீராக' என்று தனக்கே உரிய உயரிய நடையில் அமையும் அரும் பாக்களை பாடியவாறு வகுப்பினுள் நுழைந்தார் தோடகர். பத்மபாதரும் மற்றவர்களும் ஆச்சரியத்துடன் தோடகரை நோக்கினர். அந்த நிமிடமே அவர்களின் கர்வம் அடங்கியது.

'கிரி' என்கிற பெயரில் குரு சேவை புரிந்து வந்த எளியவனை, உயர்ந்த நிலைக்குச் செல்ல அனுக்கிரகம் புரிந்து, ' தோடகாஷ்டகம்' பாட வைத்தவர் ஸ்ரீ ஆதிசங்கரர். உபநிஷத்துக்களின் சாரத்தை விளக்கும், 'ஸ்ருதி ஸாரஸமுத்தரணம்' என்னும் நூலையும் தோடகர் இயற்றினார். 'தத்வமஸி' என்கிற மகாவாக்கியத்தின் கருத்தினை இந்நூலில் விளக்கியுள்ளார். 179 ஸ்லோகங்களைக் கொண்ட இந்நூல் தோடகரின் பரந்த ஞானத்துக்கு எடுத்துக்காட்டாகவும், பக்தி பனுவலாகவும் அமைந்துள்ளது.

ஸ்ரீ சங்கரரின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரராகி, அபார ஞானத்தைப் பெற்றவர் ஸ்ரீ தோடகர். ஸ்ரீ சங்கர பகவத்பாதர் பத்ரிகாஸ்ரமத்தில் ஜ்யோதிர் மடத்தை நிறுவி, அதற்கு முதல் குருவாக ஸ்ரீ தோடகரை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குரு சேவையே மிகச்சிறந்த வரப்பிரசாதம். குரு சேவை சம்சார சாகரத்தை கடப்பதற்கு உரிய மகத்தான ஓடம். குருதான் பிரம்மா. குருதான் விஷ்ணு. குருதான் சிவன். குருவின் நல் ஆசிகள் தோடகருக்குக் கிடைத்ததில் வியப்பென்ன இருக்கிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com