இம்மையில் நல்லறிவு; மறுமையில் மோட்சம் தரும் குரு பூர்ணிமா வழிபாடு!

இம்மையில் நல்லறிவு; மறுமையில் மோட்சம் தரும் குரு பூர்ணிமா வழிபாடு!
Published on

குருவுக்கு நன்றி செலுத்தும் நன்னாளே குரு பூர்ணிமா. ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பெளர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. மனதில் இருக்கும் இருளை நீக்கி, ஒளி கொடுத்த கடவுளான குருவை வணங்குவதற்காகவே குரு பூர்ணிமா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.

மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். பிறப்பை கொடுத்த தாய், வளர்த்தெடுக்கும் தந்தை, அறிவை கொடுக்கும் குரு ஆகியோரின் மூலமாக தெய்வத்தைப் பார்க்கலாம் என்பதற்காக தெய்வத்துக்கு முன் குருவை வைத்து இப்படி வரிசைப்படுத்தினார்கள். அப்பேர்ப்பட்ட குருவை வணங்கும் விதமாக, ‘குரு பூர்ணிமா‘ தினம் கொண்டாடப்படுகிறது. இப்படி குருவுக்கெல்லாம் குருவாக விளங்கும் வியாசர், தட்சிணாமூர்த்தி, முருகப் பெருமான் போன்ற குருக்களை இந்நாளில் வழிபடுவது வழக்கம்.

சம்ஸ்கிருதத்தில், 'கு' என்றால் இருட்டு, 'ரு' என்றால் விரட்டுதல் எனப் பொருள். அறியாமையாகிய இருட்டை விலக்கி, ஞான ஒளியினை மனதில் ஏற்படுத்துபவரே குரு. ஒரு சிஷ்யனின் வாழ்க்கைப் பாதையை சீரமைத்து அவனுக்குள் ஞான ஒளி ஏற்படுத்தி அவனை மோட்சம் பெரும் அளவுக்குக் கொண்டு செல்பவர் குரு. வியாச பூர்ணிமா அனுசரிக்கப்படும் இந்நாளில், ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பர்.

'வேத வியாசர்' பராசர முனிவரின் புதல்வர். இவரது இயற்பெயர் கிருஷ்ணதுவைபாயனர். வேதங்களை நான்காகப் பிரித்து வகைப்படுத்தித் தொகுத்ததால், இவர் 'வேதவியாசர்' என்றழைக்க‌ப்பட்டார். வேதத்தின் சாரமாக, 18 புராணங்களை இயற்றித் தந்தவரும் இவர்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரம்ம சூத்திரத்தை நமக்களித்தவரும் இவரே. மஹாபாரதத்தை, வியாச மஹரிஷி தமது திருவாக்கினால் அருள, விநாயகப் பெருமான் அதை எழுதியதாகப் புராணம் சொல்கிறது. இந்த நாளில் குருவுக்கு நன்றி செலுத்தும் வகையில் சிஷ்யன் அவர் பாதத்தில், சிரம் தாழ்த்தி, கரம் குவித்து அவரை துதித்து வணங்க வேண்டும். வேத வியாசர் ஸ்ரீமத் பாகவதம் உள்ளிட்ட 18 புராணங்களை எழுதியவர். இந்த நாளில் வேத வியாசருக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. குரு பூர்ணிமா அன்றே வியாசர் பிரம்ம சூத்திரத்தை எழுதி முடித்தார். இந்த நாளில் பிரம்ம சூத்திரத்தை பாராயணம் செய்து வியாசரை வேண்டினால் இம்மையில் நல்லறிவு உண்டாகும்.

வேதவியாசருக்கு சென்னை வியாசர்பாடியில் சூரிய ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ரவீஸ்வரர் ஆலயத்தில் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. இந்நாளில் அருள்மிகு ரவீஸ்வரரையும் வேதவியாசரையும் வணங்க, நலம் பல கிடைக்கும். குரு பூர்ணிமா தினத்தில் நமக்குப் பாடம் கற்றுக் கொடுத்த குருவை மனதார நினைத்தலும், கோயிலுக்கு சென்று வணங்குவதும் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்துக்கு ஒருவரை இட்டுச் செல்லும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com