ஐதராபாத்தில் உள்ள மிகப் பழைமையான கோயில்களில் கர்மன்காட் ஹனுமன் கோயில் மிகவும் பிரபலமானதாகும். இந்தக் கோயில் 12ம் நூற்றாண்டில் காகதீய வம்ச மன்னர் இரண்டாம் பிரதாப் ருத்ரனால் நிர்மாணிக்கப்பட்டதாகும். ஒரு சமயம் இந்த மன்னர் வேட்டைக்குச் சென்றபோது ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது சற்றுத் தொலைவில், ‘ஸ்ரீ ராம நாமம்’ உச்சரிக்கும் ஒலி மன்னருக்குக் கேட்டது.
‘இந்த அடர்ந்த காட்டில் யார் ராம நாமத்தை உச்சரிப்பது’ என்று யோசித்த மன்னர், சற்றுத் தொலைவில் அமர்ந்த நிலையில் இருக்கும் ஒரு ஹனுமன் கற்சிலை விக்ரஹத்திலிருந்து ஸ்ரீ ராம நாமம் ஒலிப்பதைக் கண்டு வியந்தார். அதைத் தொடர்ந்து அந்த ஹனுமன் சிலையை வணங்கி வழிபட்டு தனது ராஜ்ஜியத்துக்குத் திரும்பினார்.
அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய ஹனுமன், காட்டில் அவர் கண்ட தனது கற்சிலை உள்ள இடத்தில் தனக்கு ஒரு கோயில் கட்டும்படி கூற, மன்னனும் அங்கு ஹனுமனுக்கு ஒரு ஆலயத்தை எழுப்பினார். ஹனுமன் ஸ்ரீராமரை தியானித்துக் கொண்டிருந்ததால் இந்தக் கோயிலுக்கு, 'தியான ஆஞ்சநேய சுவாமி கோயில்’ என்று பெயரிடப்பட்டது.
அதன் பிறகு சுமார் 400 ஆண்டுகளுக்குப் பின், முகலாயப் பேரரசை விரிவுபடுத்துவதற்காக ஔரங்கசீப் தனது படைகளை நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் அனுப்பினார். ஔரங்கசீப்பின் படையால் இந்தக் கோயில் வளாகத்துக்குள் ஒரு காலடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. இந்தத் தகவலை படை வீரர்கள் ஔரங்கசீப்பின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, அவரே ஒரு இரும்புக் கம்பியுடன் அந்தக் கோயிலை உடைக்கச் சென்றார். ஔரங்கசீப் கோயிலின் வாசற்படிக்குச் சென்றபோது, இடியைப் போன்ற கர்ஜனை குரல் ஒன்று கேட்டது. அந்தக் குரலைக் கேட்ட ஔரங்கசீப் மிகவும் பயந்துபோனார். அவரது கையிலிருந்து இரும்புக் கம்பி தானாகக் கையை விட்டு நழுவியது.
அப்போது வானத்திலிருந்து, ‘ஏய் ராஜன், மந்திர் தோட்னா ஹை தோ பெஹ்லே, தும் கரோ மன் காட்’ (ஓ ராஜா! கோயிலை அழிக்க வேண்டுமென்றால் மனதை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்) என்று ஒரு அசரீரி குரலைக் கேட்டார் ஔரங்கசீப். அதுமட்டுமின்றி, தெய்வீக ஒளி அந்தப் பகுதி முழுவதையும் சூழ்ந்திருப்பதைக் கண்டார். இதை அவரால் நம்பவே முடியவில்லை. இந்தியாவில் உள்ள பல இந்து கோயில்களை இடித்தபோதிலும், ஔரங்கசீப்பால் இந்தக் கோயிலை இடிக்க முடியவில்லை. அன்றிலிருந்து இது, ‘கர்மன்காட் கோயில்’ என்று அழைக்கப்பட்டது.
இன்றளவும் இந்தக் கோயிலில் ஹனுமன் தியான ஆஞ்சனேய சுவாமியாக அமர்ந்து தியானித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயில் ஐதராபாத்தில் உள்ள பக்தர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இந்தக் கோயிலில் அனுமனுக்கு பக்தர்கள் பிரார்த்தனை மற்றும் பூஜைகள் செய்கிறார்கள். இந்த நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்கின்றனர்.
கோயில் வளாகத்தில் ஸ்ரீராமர், சிவன், சரஸ்வதி தேவி, துர்கா தேவி, சந்தோஷிமாதா , வேணுகோபால சுவாமி மற்றும் ஜகந்நாதர் போன்ற தெய்வ சன்னிதிகளும் தனித்தனியாக உள்ளன. இந்தக் கோயில் கர்மன்காட்டில் நாகார்ஜுனா சாகர் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.
தரிசன நேரம்: காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை. மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை.