உண்மையான முடிவுகளை நிலைநாட்டும் நோக்கத்துடனேயே இத்தனையும் செய்தார்.

அத்தியாயம் - 13
 உண்மையான முடிவுகளை நிலைநாட்டும் நோக்கத்துடனேயே இத்தனையும் செய்தார்.
Published on

ங்கரர் தன் சீடர்களுடன் கங்கைக் கரையில் வசித்து வந்த காலத்தில் ஒருநாள் காலையில் காஷ்மீரத்தின் அருமை பெருமைகளையும், கல்விக் கடவுளான சாரதாதேவியின் கோயிலைப் பற்றியும் கேள்விப்பட்டார். நான்கு வாசல்களுடன் கட்டப்பட்டிருந்த அந்தக் கோயில் சாரதாதேவியின் அதிகாரத் தலைமையில்  ஸர்வக்ஞபீடம் இருந்தது. அந்தப் பீடத்தில் ஸர்வக்ஞரான-அதாவது அனைத்தும் அறிந்த ஒருவரே ஏறிச் செல்ல முடியும். முன்காலத்தில் பாரததேசத்தின் வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளில் இருந்தும் கல்வி... கேள்விகளில் சிறந்த பலரும் அதில் ஏறிப்புக முயன்றது உண்டாம். ஆனால் தெற்கிலிருந்து யாரும் இந்த முயற்சியில் ஈடுபட்டது இல்லையாம்.

 தெற்கு திசையிலிருந்து வந்திருந்த சங்கரர், இதைக் கேள்விப்பட்டதும் தானும் அங்கு சென்று அத்வைத சித்தாந்தத்தின் பரப்பை-அதாவது அனைத்தும் தன்பால் கொண்டிருக்கும் அதன் மேம்பட்ட இயல்பை நிலைநாட்ட வேண்டும் என விரும்பினார். 

சங்கரர் காஷ்மீரத்துக்குச் சென்று அந்தக் கோயிலையும் அடைந்து, அதன் தெற்கு வாசல் வழியே நுழைந்தபோது பல்வேறு கொள்கைகளையும், முடிவுகளையும் கொண்ட பல புரவலர்களையும் சந்தித்து வாதம் செய்ய நேர்ந்தது. 

அவர்கள் அனைவருமே அவரை-அதாவது அவரது அத்வைதக் கொள்கைகளை- எதிர்த்து அறைகூவினார்கள்.அத்வைதமே முடிவான, குறைவற்ற, பரிபூரணமான தத்துவம் என்பதை ஏற்க மறுத்தனர். பரமானவாதிகளான வைசேஷகர்களும், தர்க்கவாதிகளான நையாயிகர்களும், துவைதிகளான ஸாங்கியர்களும், பௌத்தர்களும், சைவர்களும், சங்கரரை, மாறி மாறி முறை வைத்து வாதுக்கு அழைத்து வாதப்போர் புரிந்தனர்.

அப்போது சங்கரர் முன் கூறிய பல்வேறு கொள்கைகளையும், முடிவுகளையும் கொண்ட அவர்களுடைய சாத்திரங்கள் அனைத்தும் தான் கற்றுணர்ந்ததைக் காட்டியதுடன், அவர்கள் அனைவரையும் அத்வைத முடிவே யாவற்றிலும் மேலானது என்பதை ஒப்புக்கொள்ளவும் வைத்தார். 

கடைசியாக பூர்வ மீமாம்சைகாரர்கள் சேர்ந்து வந்து, வேதங்களின் நோக்கமும், பயனும் யாக, யக்ஞம் போன்ற கருமங்களிலேயே உள்ளதாக  வாதிட்டனர். சங்கரர் அவர்களிடம் வேத வாக்கியங்களுக்கு, வேதாந்த வகையிலும் பேதமின்றி, மாறுபாடின்றி இணக்கமாகப் பொருள் கொள்ளவும் முடியும் என்பதை எடுத்துக்காட்டி, அத்வைத சித்தாந்தத்தை  நியாயமென்றும், பொருத்தமென்றும் நிரூபித்து நிலைநாட்டினார்.

 சாரதாதேவியின் கதவுகள் திறந்தன.

 அந்தத் தேவியே சங்கரரை பரிட்சித்து, உலகத்தார்க்கு அவருடைய ஞானத் தேர்ச்சியை விளக்கிக்காட்டி ஞானத்திலும், ஆசாரசீலத்திலும் அந்த ஸர்வக்ஞ பீடத்தில் ஏறுவதற்கான பெருமைக்கு அவர் முற்றிலும் தகுதி உடையவரே என்று அருள் செய்தார். 

இதை சங்கரர் தான் அடைந்த ஏதோ ஒரு சலுகையாக கருதவில்லை. 

சங்கரருக்கு "தான்" என்ற தற்பெருமை சிறிதும் கிடையாது. பல்வேறு சமயவாதிகளையும் அவர்தம் சொந்த லாபத்திற்காகவோ, சொந்த கௌரவத்திற்காகவோ வாதிட்டு வெல்லவில்லை. புராதனமான வேதாந்த தத்துவங்களை இழித்துரைத்தும், திரித்துரைத்தும் தீங்கு செய்பவர்களிடமிருந்து அவற்றை மீட்டு பாதுகாத்து அவற்றின் உண்மையான முடிவுகளை நிலைநாட்டும் நோக்கத்துடனேயே இத்தனையும் செய்தார்.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com