மனித குலத்தின் நினைவில் அவர் இன்னமும் வாழ்கிறார். தொடர்ந்து வாழ்வார்.

அத்தியாயம் - 16
மனித குலத்தின் நினைவில் அவர் இன்னமும் வாழ்கிறார். தொடர்ந்து வாழ்வார்.

த்வைத தத்துவத்தின் அடிப்படையில் இந்திய நாட்டின் கலாசார ஒருமைப்பாட்டினைப் பாதுகாக்கவும், ஆன்மீக வாழ்வின் உயர்ந்த இலட்சியத்தை உன்னதாக விளங்கச் செய்யும் சங்கரர், சந்நியாச பீடங்களையும், ஸ்தாபனங்களையும் ஏற்படுத்தினார். அவையாவும் பல நூற்றாண்டுகளாக நின்று...நிலவி வருகின்றன. 

அத்வைத சம்பிரதாயத்தை சேர்ந்த பீடங்கள் பத்து உண்டு. அந்த பீடத்திற்கு வருபவர்களின் சந்நியாச ஆசிரமத்தில் பெயரில் சேர்க்கப்படும் ஒரு சொல் அளவில்தான்...இந்த பத்து பீடங்களுக்கும் வேறுபாடு தெரியும். இந்த பத்து பீடங்களையும் தொகுத்து , தசநாமி என்று குறிப்பது வழக்கம். அவை, சரஸ்வதி, புரீ, பாரதி, வன, அரண்ய, தீர்த்த, ஆசிரம, கிரி, பர்வத, ஸாகர என்பன. 

இவ்வாறாக இந்திய நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மடங்களை நிறுவி அத்தகைய மடங்கள் ஒவ்வொன்றிலும் தொடர்ந்து இடையறாமல் அத்வைத ஆசார்யார்கள் இருந்து வரும் வகையில் அவற்றில் தன் பிரதான சிஷ்யர்களை அமர வைத்தார். அத்தகைய மடங்களில் முக்கியமனாவை காஞ்சியிலும், பதரீயிலும், துவாரகையிலும், பூரீயிலும், சிருங்கேரியிலும் உள்ளன. 

பதரிகாய்ஸ்ரமத்திற்கும், பதரீகர் கோயிலுக்கும் சங்கரருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்தியாவின் தலைமையான முனைகள் நான்கிலும் நான்கு முக்கிய புண்ணிய தலங்கள் உள்ளன.வடக்கே இமயமளையில் பதரீ, மேற்கே துவாரலை, கிழக்கே பூரீ, தெற்கே இராமேஸ்வரம்.

 தவம் புரியவும், ஞானம் பெறவும் பத்ரீ அனுகூலமான இடமாகும். ஆகவே, அதைத் தரும பூமி என்பார்கள். உத்தவருக்கு உபதேசங்களைச் செய்த பிறகு, கண்ணன், அவரை தன் ஆசிரமமான பதரிகாசிரமத்திற்குச் செல்லுமாறு பணித்தார். 

பத்ரிநாதன் கோயிலுக்கு இரு புறமும் நர-நாராயணன் எனும் பெயருடைய இரு மலைகள் இருக்கின்றன. நரன் (மனிதன்)-நாராயணன்- நரர்களுக்கு இறுதி இருப்பிடமான ‘இறைவன்‘ என்ற விஷ்ணுவின் இரட்டை அவதாரங்களும் உலக நலத்திற்காகத் தவம் புரிவதை இந்த இரண்டு மலைகளும் குறிக்கின்றன. அவற்றிற்குப் பின்புறம் மிகவும் பெருமைப்படைத்த நீலகண்ட சிகரம் நிமிர்ந்து நிற்கிறது. பதரியின் இயற்கை அழகு மிக்கவும், ஆத்ம ஞானத்தை ஊட்டுவதுமான சூழ்நிலையை உணர்ந்து தான் சங்கரர் அந்த இடத்தைத் தன் மடத்தை நிறுவ ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்தார். இந்த மடம் அமைந்துள்ள இடம் பதரிநாதர் கோயிலுக்கு தெற்கே சுமார் 27 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அந்த இடம் இங்குள்ள மடத்தின் பெயரால் ஜோதிர்மடம் என வழங்கப்படுகிறது. 

பத்ரீயும்,கோயிலும் முற்றிலுமாய் பனியில் மறைந்து விடும் குளிர் காலங்களில் ஒவ்வொரு வருடமும் பத்ரி நகர் முழுவதுமே ஜோதிர் மடத்திற்கு இடம் பெயர்ந்துவிடும். 

ஜோதிர் மடத்தில், ஜோதிலிங்க மகாதேவர், வாசுதேவர், எட்டு காளியம்மன் ஆகியோரின் கோயில்கள் இருக்கின்றன. குளிர் காலங்களில் பதரீநாதர் ஜோதிர் மடத்தில் தான் வழிபாடு செய்யப்படுகிறார். அங்கேதான் சங்கரர் நரசிம்ம ஸாலிக் கிராமத்தைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார். இந்த ஜோதிர் மடம் ஒரு மலையின் உச்சியில் எழில் மிகுந்த சூழலுக்கிடையில் அமைந்திருக்கிறது.

 ஒரு பெரிய மரத்தின் அடியில் ஒரு குகை இருக்கிறது.சங்கரர் அந்தக் குகையில் சில காலம் தவம் செய்து கொண்டு இருந்தார் என்று சொல்கிறார்கள். உண்மையில் பாரதத்தின் வட பகுதி முழுவதும் சங்கரரின் புனிதத் தொண்டால் நிறைந்து விளங்குகிறது.

••• ••• •••

 துவாரகை அல்லது துவாரவதி என்ற பெயர்  வழங்கும் ஊர்..மோட்சம் நல்கும் ஊர்களில் ஒன்றாகும். அது முன்னால் நாம் கூறியுள்ள நான்கு புன்னியத் தலங்களில் ஒன்றாகும். துவாரகை, கண்ணன் ஆட்சி செய்த ஊர். இந்தியாவின் மேற்குத் தெற்கு முனையில் உள்ளது. அங்குள்ள மிக முக்கிய அம்சம் கண்ணன் கோயில். சங்கரர் தன் மடத்தை ஸ்தாபிக்க இதையும் தேர்ந்தெடுத்தார். அங்குள்ள மடம் காலிக பீடம் என்பதாகும். 

கிழக்குக் கடற்கரையில் மற்றொரு முனைத் தலமான புரீயில் சங்கரரின் மற்றொரு மடம் உள்ளது.அது கோவர்த்தன பீடமாகும். 

சிருங்கேரி என இக்காலத்தில் வழங்கப்படும் சிருங்ககிரி என்பது ரிஷ்ய சிருங்கர் எனும் முனிவருடன் தொடர்பு உள்ளது.அந்த முனிவரின் ஆலோசனைப்படிதான்... தசரதர் புத்திர காமேஷ்டி செய்து... ஸ்ரீராமர்,லட்சுமணன்,பரதன், சத்ருக்கணன் ஆகியோரைப் புதல்வர்களாகப் பெற்றார். சிருங்ககிரி,துங்கபத்திரை நதியாலும்,அதன் காப்பிடங்களாலும் அழகுப்படுத்தப்பட்டுள்ளது, இங்கும் சங்கரர் ஒரு மடத்தை நிறுவினார். இந்த மடம் தோன்றியது பற்றி ஒரு கதை உண்டு... 

மண்டனமிச்ரர், சங்கரருக்கு சீடராகத் துறவறம் பூண்ட பின்... அவர் மனைவியான சரஸ்வதி தேவியும்... சங்கரரின் பரிவாரத்தில் சேர்ந்ததை முன் அத்தியாயம் ஒன்றில் சொன்னோம். யாத்திரையிலும் அந்த தேவி பின் தொடர்ந்து வந்தாள். ஆனால் அவள் சங்கரருக்கு ஒரு நிபந்தனை விதித்தாள். தான் பின்தொடர்ந்து வருவதை சங்கரர் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பதே அது. பாதச் சிலம்பின் "கலீர்...கலீர்..." என்று ஒலிக்க தேவி பின் தொடர்ந்து வந்தாள். துங்கபத்திரை நதிக்கரையில் ஓரிடத்தில் வரும்போது அவளது கால்கள் புதையுண்டன. 

சிலம்பொலி கேட்கவில்லையே என சங்கரர் திரும்பிப் பார்த்தார். அப்படி அவள் நின்ற இடம் சிருங்க கிரி என்பதையும் அறிந்தாள். மண்டனமிச்ரர் மனைவி பெயர் சாரதா தேவி. கல்விக்கும், கலைகளுக்கும் தெய்வமான சாரதாதேவி ஒரு அவதாரம் அன்றோ! அவள் தனக்கென ஒரு இருப்பிடத்தைக் கண்டு கொண்டாள். மேலும், இப்படித்தான் அங்கு சாரதாதேவியின் பீடமும், மடமும் தோன்றின. 

காஞ்சியிலிருந்து சங்கரரின் சீடர்கள் சிலர் குருவின் ஆசியோடு தேசயாத்திரை புறப்பட்டார்கள். அவர்கள் இதற்கு முன் வெவ்வேறு சமயக் குழுக்களைச் சார்ந்திருந்தவர்கள். ஆனால் இப்போது அந்த வெவ்வேறு சமயக் கொள்கைகளும் அத்வைத சித்தாந்தத்தால் திருத்தமும், தூய்மையும் பெற்றுத் திகழ்ந்தன. அந்த நிலையில் அவற்றை நாடெங்கும் பரப்பும் நோக்கத்துடன் அவர்கள் யாத்திரை செய்தனர் என்கிறார் ஆனந்த கிரி. 

அவர்கள் அனைவரும் அத்வைதத்தில் உறுதியான உடன்பாட்டுடன், அந்த மரபுக்கேற்ப பரம ஹம்ச சந்நியாசியாக ஆனவர்கள். ஆனால், பெயரோ, வடிவமோ போன்ற யாதும் இல்லா பரம் பொருளை ஒவ்வொரு பெயரில்-வடிவில் வழிபடும் ஸ்குண உபாசனைகளைப் பொறுத்தவரை அவர்கள் ஒவ்வொருவரும் இஷ்ட தெய்வங்களை-வழிபாட்டு மூர்த்திகளைக் கொண்டிருந்தனர்.விஷ்ணு,சிவ, சக்தி என்ற வகையில் அவை அமைந்திருந்தன.பரம்பொருள் என்பது இரண்டான தன்மையை இல்லாதது,ஒன்றேயானது என்பதில் இவர்களுக்கு முழு நம்பிக்கை உண்டு.ஆனால் உருவம் தந்து வழிபடுவதில்தான்  சில மாறுபாடுகள். 

இவற்றைப் பிரச்சாரம் செய்யத் தங்கள் குருவின் அனுமதியைக் கேட்ட இவர்களுக்கு தடையின்றி அனுமதி கிடைத்தது. அவர்களில் பரமதகாலானவ என்பவர் சைவர். சௌர லட்சுமணன் என்பவரும் ஹஸ்தாமலகரும் வைணவர்கள். திவாகரர் என்பவர் கதிரவனே பரம்பொருள் என வணங்கும் மதம் உடையவர், திருபுரகுமாரர் என்பவர் சக்தியைத் தொழுபவர், கிரிஜாகுமாரர் கணபதியே பரம்பொருள் என்ற கருத்தினை உடையவர். வடுகநாதர் என்பவர் காபாலிகர்-கடுமையான சைவப்பிரிவைச் சேர்ந்தவர். அவர்கள் தேசம் முழுவதும் யாத்திரை சென்று ஸ்குண உபாசனையும் முடிவான அத்வைத தத்துவத்தையும் நன்கு பிரச்சாரம் செய்து திரும்பி வந்து தங்கள் குருநாதருடன் சேர்ந்துறைந்தனர்.

 சங்கரர் தன் இறுதி நாட்களை காஞ்சியில் கழித்ததாக ஆனந்த கிரி கூறுகிறார்.காஞ்சியில் காமாட்சி அம்மன் சந்நிதிக்கு மிக அருகில் ஒரு இடத்தில் சங்கரரின் முழு உருவத்தையும் (தனி சன்னதியாக அப்படியே விக்கிரகம்) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

இங்கே  உள்ள வெண்கல உற்சவ விக்கிரகத்தை, ஒவ்வொரு வருடமும் வியாச பூஜை நாளன்று, சர்வ தீர்த்தக் கரையில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்து வழிபாடுகளும் செய்கிறார்கள். காஞ்சியில் உள்ள சிறிய-பெரிய கோயில்கள் அனைத்திலுமே வெவ்வேறு தோற்றத்தில் சங்கரரின் சிலை இருப்பதைக் காணலாம். சங்கரர் காஞ்சியில் தங்கி இருந்ததையும், அங்கு அவருடைய வாசம் அழியாச் சுவடுகளை விட்டுச் சென்றதையும் இவை காட்டுகின்றன. 

ஆனாலும் வேறு சில ஆதரவாளர்கள் சங்கரர் இறுதியில், மானிடப் பிறவியை நீங்கி மோட்ச சித்தி பெற்ற தலங்கள் என்று வேறு ஒவ்வொரு தலங்களைச் சொல்கின்றனர். 

மாதவீய சங்கர விஜயம் - சங்கரர் தன் இறுதி கட்டத்தில் சில சீடர்களுடன் பதரிக்கும்,கேதாரநாத்திற்கும் சென்ற பின் கைலாசம் சென்றதாகச் சொல்கிறது.

சித்விலாசய சங்கர விஜயம்- சங்கரர் இறுதிக் காலத்தில் பதரிகாசரமத்தில் உள்ள தத்தாத்ரேய குகையில் புகுந்து சித்தி அடைந்ததாகக் கூறுகிறது.

சிருங்ககிரி குரு பரம்பரைப் பற்றிக் கூறும் குரு வம்ச காவியம் - சங்கரர் இறுதிக் காலத்தில் நேபாளத்தில் இருக்கும் ஸித்தேசுவரத்திலிருந்து  தத்தாத்ரேய ஆசிரமம் சென்று அங்கு தண்டம், கமண்டலம் இரண்டையும் துறந்து கீழே போட்டார். அவை முறையே ஒரு மரமாகவும், குளமாகவும் ஆயின. மராட்ட வாடாவில் இருந்த தத்தாத்ரேய ஆசிரமத்தில்தான் தத்தாத்ரேயருடன் அளவளாவினர் என்கிறது. 

கோவிந்த நாதர் என்பவர் எழுதியுள்ள கேரளீய சங்கர விஜயம்- திருச்சூரில் இருக்கும், விருஷாசலம் என்ற பெயருடைய கோயிலின் உள்ளே இருந்தவாறே சங்கரர்  சூரிய மணடலத்தில் ஏறி மறைந்தார் என்கிறது.

ஸ்ரீநிவாச ஆபயா என்பவரால் ஸமஸ்கிருதத்தில் செய்யுளால் இயற்றப்பட்ட சமீப கால நூல் ஒன்று ‘காஷ்மீரத்தில்தான் சங்கர இறுதியாக வாழ்ந்தார்‘ என சொல்கிறது.... 

எப்படியாயினும் சரி, சாதாரண அனுபவ ரீதியான உணர்வில் கூட சங்கரருக்கு இறுதி என்று ஒன்று இல்லை. மனித குலத்தின் நினைவில் அவர் இன்னமும் வாழ்கிறார். தொடர்ந்து வாழ்வார். 

சித்தாந்தத்தில் அவர் அனைத்தையும் - தழுவி நிறைந்த பூர்ணமாய் என்றும் அழியாத சத்துப் பொருளாய் உள்ள இரண்டற்ற அத்வைத தத்துவமாய் இருக்கிறார். 

அனைத்திலும் நிறைந்துள்ள பிரக்ஞை மயமாக அவர் இன்னமும் இருக்கிறார். 

நல்லவர்களுக்கு மோட்சத்தை அருள்பவர் குரு சங்கரரே!  என்கிறார் ஆனந்த கிரி. 

ஜெய ஜெய சங்கரா... ஹர ஹர சங்கரா

(முற்றும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com