

புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது கத்தோலிக்க திருத்தலம் ஆகும். தூய ஆரோக்கிய அன்னை பெயரால் கட்டப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் நடந்த மூன்று புதுமையான நிகழ்ச்சிகளால் இந்த ஆலயம் கட்டப்பட்டது.
இந்த செயல்களால் அன்னையின் பக்தி பரவியது. இடைச் சிறுவனுக்கு காட்சி தந்தது, தயிர் விற்ற முடவனுக்கு கால் குணமான செயல், போர்த்துக்கீசிய மாலுமிகளுக்கு கரையை வந்தடைய உதவி செய்தது போன்ற செயல்களால் ஆரோக்கிய மாதா போற்றப்படுகிறார்.
கன்னி மரியாளின் பிறந்த நாளும், போர்த்துக்கீசிய மாலுமிகள் கரையை வந்தடைந்த இரண்டு தினமும் ஒரே நாளாகும்... அதாவது செப்டம்பர் எட்டாம் தேதி. எனவே செப்டம்பர் எட்டாம் தேதி விசேஷமாக கருதப்படுகிறது. இந்த ஆலயம் பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் உள்ள தேவாலயம் போன்று கட்டப்பட்டுள்ளது சிறப்பானதாகும்.
காரைக்காலில் இருந்து தெற்கு நோக்கி 26 கிலோ மீட்டர் தொலைவில் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. கிழக்கின் லூர்து என அழைக்கப்படுகிறது. வருடம் தோறும் 20 மில்லியன் யாத்திரிகர்கள் இங்கு வருகை தருகிறார்கள்.
வருடம் தோறும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் சுமார் மூன்று மில்லியன் மக்கள் கலந்து கொள்வார்கள். நடைபயணமாகவும் அதிக அளவில் யாத்திரிகர்கள் வருகிறார்கள். செப்டம்பர் எட்டாம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம். ஒரு இடையர் குலத்தை சேர்ந்த சிறுவன் ஒரு செல்வந்தருக்கு தினசரி பால் கொண்டு செல்வது வழக்கம். ஒரு நாள் பால் கொண்டு செல்லும் போது சோர்வாக இருந்ததால் ஒரு குளத்தின் கரையில் உள்ள மரத்தடியில் சற்று படுத்து ஓய்வு எடுத்தான்.
அந்த நேரத்தில் ஒரு பிரகாசமான ஒளி தோன்றியது. அவன் முன்பு அன்னை ஒரு தெய்வக் குழந்தையுடன் கையில் ஏந்தி அந்த சிறுவனிடம் குழந்தைக்கு பால் தருமாறு கேட்டார். அந்தச் சிறுவனும் அந்த குழந்தைக்கு தன்னிடம் கொண்டு வந்திருந்த பாலை கொடுத்தான்.
அதன் பின்னர் அன்னை மறைந்து விட்டார். அந்த சிறுவன் செல்வந்தரிடம் சென்று பாலை கொடுக்கும் போது பால் மிகவும் குறைவாக இருந்தது கண்டு அவனை சத்தம் போட்டார். அவன் நடந்தவற்றை கூறினான். பின்னர் குடத்தில் இருந்து பால் நிரம்பி வழிந்தது. இது அன்னையின் அற்புத செயல் என சிறுவனும் செல்வந்தரும் உணர்ந்தார்கள். சிறுவன் ஓய்வெடுத்த அந்தக் குளம் வேளாங்கண்ணி மாதா குளம் என அழைக்கப்படுகிறது.
மோர் கொண்டு வந்த முடமான சிறுவனுக்கு காட்சி தந்தது இரண்டாவது அற்புதமாகும். 1637-ல் இந்த சம்பவம் நடைபெற்றது. நடுத்திட்டு என்ற இடத்தில் ஒரு கால் ஊனமுற்ற சிறுவன் மோர் விற்று வந்தான். அப்போது மாதா அவனிடம் தனக்கு மோர் தருமாறு கேட்டார்.
அந்தச் சிறுவனும் அன்னைக்கு மோர் கொடுத்தான் பசியாற. அன்னை அந்த சிறுவனிடம் நாகப்பட்டினம் சென்று அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்தவரிடம் நடந்ததை கூறி எனக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு அந்த சிறுவன் என்னால் அவ்வளவு தூரம் நடக்க முடியாது என்றான். உடனே அன்னையின் அருளால் "மகனே நீ எழுந்து நட" என்று கூறவும், அந்த சிறுவன் நடந்து சென்று கத்தோலிக்க கிறிஸ்தவரிடம் நடந்தவற்றை கூறினான். அங்குள்ள கிறிஸ்தவர்கள் கட்டிய ஆலயம் தான் வேளாங்கண்ணி மாதா கோவில் ஆகும்.
மூன்றாவது சம்பவம் 1671ல் போர்ச்சுகீசிய பாய்மர கப்பல் ஒன்று கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பயங்கரமான புயல் காற்று வீசியது. அதில் பாய்மர கப்பல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது. அதிலிருந்து மாலுமிகள் கன்னி மரியாவிடம் வேண்டிக்கொண்டார்கள்.
சிறிது நேரத்தில் புயல் குறைய தொடங்கியது. அதில் இருந்த போர்ச்சுகீசிய மாலுமிகள் நாகப்பட்டினம் கடற்கரையில் இறங்கி ஒரு சிற்றாலயத்தை கட்டினார்கள். பாய்மரக் கப்பலில் உள்ள தூணில் கொடி ஏற்றப்பட்டது. இன்றும் இந்த தூணில்தான் கொடியேற்றம் நடைபெறுகிறது. போர்த்துக்கீசிய மாலுமிகள் கரை ஒதுங்கிய நாள் செப்டம்பர் 8.
இங்கு அனைத்து மக்களும் வருகை தந்து அன்னையை வழிபட்டு செல்கின்றனர். தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறுவதாகவும் கூறுகிறார்கள். முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1930 இல் புதுப்பிக்கப்பட்டது.
இதனை அங்கீகரிக்கும் வகையில் திருத்தந்தை 23ஆம் யோவான் 1962 நவம்பர் மூன்றில் இணை பெறும் கோவில் என தரம் உயர்த்தினார்.
2012ல் வேளாங்கண்ணி ஆலயம் பெருங்கோவில் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 50-ம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. இங்கு வருபவர்களின் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. கீழை நாடுகளின் லூர்து என அன்போடு அழைக்கிறார்கள். ஆண்டுதோறும் தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெறும். இந்த அன்னை ஆலயத்திற்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரும் பாரபட்சம் இல்லாமல் வந்து வழிபடுகிறார்கள்.