பகை, வன்மத்தைப் போக்கும் ஹோலி பண்டிகை!

பகை, வன்மத்தைப் போக்கும் ஹோலி பண்டிகை!

ண்ணங்களின் பண்டிகை என்று முன்பு வட இந்தியாவில் கொண்டாடப்பட்டு வந்த ஹோலி பண்டிகை தற்பொழுது இந்தியா முழுவதும் பரவலாக சிறப்பாக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் வர்ணப் பொடிகளைத் தூவி, இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டாடி வருகின்றனர். ‘ரங்க பஞ்சமி’ என்று அழைக்கப்படும் இந்தப் பண்டிகை, சாந்திர மாதக் கணக்குப்படி (வடநாட்டில் சந்திரனின் சஞ்சாரத்தைக் கணக்கில் கொண்டு நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன.

அசுரர்களில் ஒருவனான ஹிரண்ய கசிபு, பிரம்மாவை வேண்டி கடும் தவத்தினால் ஒரு வரத்தைப் பெற்றிருந்தான். அதாவது, மனிதனாலோ மிருகத்தினாலோ பகலிலோ இரவிலோ வீட்டிலோ வீட்டுக்கு வெளியிலோ எந்த ஆயுதத்தாலும் தான் கொல்லப்படக் கூடாது போன்ற பல விதிகளுடன் ஒரு வரத்தைக் கேட்டுப் பெற்றிருந்தான். அதனால் தானே தன்னை தெய்வமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டான். அவன் மகனான பக்த பிரகலாதன் தீவிர விஷ்ணு பக்தனாக இருந்து வந்தான் என்பது எல்லோருமே அறிந்ததுதான். அவனைக் கொல்ல பல வழிகளில் முயற்சித்த ஹிரண்ய கசிபுவுக்கு உண்டானது என்னவோ தோல்வி மட்டுமே.

ஹிரண்ய கசிபுவுக்கு, ஹோலிகா என்கிற ஒரு சகோதரி இருந்தாள். அவள் மாயப்போர்வை ஒன்றை வரமாகப் பெற்று இருந்தாள். அந்தப் போர்வையின் உதவியுடன் எப்படியும் பிரகலாதனை அழித்து, சகோதரனுக்கு உதவி செய்யலாம் என்று நினைத்தாள். சகோதரன் ஹிரண்யகசிபுவும் அவளுடைய உதவியை நாடினான். பிரகலாதனை கொல்வதற்கு வேண்டி ஒரு பெரிய அளவில் தீயை மூட்டி, அதில் பிரகலாதனுடன் அமர்ந்து கொண்டாள். ஆனால், பிரகலாதன் எதற்குமே பயப்படவில்லை. ஸ்ரீ மகாவிஷ்ணுவை ஆத்மார்த்தமாக வேண்டிக் கொண்டான். அப்பொழுது அந்த மாயப் போர்வையானது பறந்து வந்து பிரகலாதனை மட்டும் மூடிக்கொண்டு அவன் உயிரைக் காத்தது. ஹோலிகா நெருப்பில் கருகி உயிரை மாய்த்துக் கொண்டாள். தீயிலும் பிரகலாதன் சாகாமல் இருப்பதைப் பார்த்த மக்கள் பிரகலாதனைப் போற்றினார்கள். ஹோலி பண்டிகைக்கு முன்தினம்தான் ஹோலிகா தகனம் என்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பக்தனுக்கு தீங்கிழைக்க நினைத்த ஹோலிகா தீயில் பலியானதை ஹோலி எனக் கொண்டாடுகிறார்கள்.

இதே திருநாள், ‘காம தகனம்’ என்றும் தீமூட்டிக் கொண்டாடப்படுகிறது. சிவனை மணக்க நினைத்த பார்வதி தேவி, மன்மதனின் உதவியை நாடினார். அப்பொழுது சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார் என்பது எல்லோரும் அறிந்ததே. ரதி தேவியின் வேண்டுதலுக்கு இணங்கி மீண்டும் மன்மதனுக்கு உயிர்ப் பிச்சை அளித்தார் சிவபெருமான். காமன் என்னும் மன்மதனை சிவபெருமான் எரித்து சாம்பலாக்கியதால் அன்றைய தினம், ‘காம தகனம்’ என்று நெருப்பூட்டி அனுசரிக்கப்படுகிறது.

மன்மதனுக்கு உண்டான ஆலயங்களில் காம தகனம் என்னும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. மன்மதன் கோயிலில் வழிபாடு செய்தால் நம் மேல் பிறர் கொண்டுள்ள பகை, வன்மம், குரோதம் யாவும் தீயில் இட்ட பஞ்சு போல் விலகிப் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com