முன்பொரு சமயம் கிராமவாசி ஒருவர் தனது தோட்டத்தில் பல தென்னங்கன்றுகளை நட்டார். தனது தோட்டத்தில் தேங்காய் விளைச்சல் நன்றாக இருந்தால் முதல் அறுவடையாகும் தேங்காய் அத்தனையையும் குருவாயூரப்பனுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதாக நேர்ந்து கொண்டார்.
குருவாயூரப்பன் அருளால் தென்னை மரங்கள் அனைத்தும் நன்றாகக் காய்க்கத் தொடங்கின. வேண்டுதல்படி அந்த பக்தர் மரங்களில் இருந்து பறித்த முதல் அறுவடை தேங்காய்கள் அத்தனையையும் கோணிப் பையில் கட்டிக்கொண்டு குருவாயூர் கோயிலுக்குப் பயணித்தார். போகும் வழியில் கொள்ளைக்காரன் ஒருவன் அவரை வழிமறித்தான். ‘கோணிப்பையில் உள்ளதைத் தந்து விட்டு மரியாதையாகச் சென்றுவிடு’ என்று மிரட்டினான்.
அந்த கிராமவாசியோ, ‘இந்த கோணிப் பையில் தேங்காய்கள் மட்டுமே உள்ளன. இதை குருவாயூரப்பனுக்கு எனது காணிக்கையாக எடுத்துச் செல்கிறேன். இது நைவேத்திய தேங்காய். இதைத் தர முடியாது’ என்று கூறினார்.
ஆனால் கொள்ளைக்காரன் அலட்சியமாக, ‘குருவாயூரப்பன் தேங்காய் என்று அவற்றில் எழுதி இருக்கிறதா? இல்ல, அதற்கு பிரத்யேகமாகக் கொம்புகள் முளைத்து இருக்கிறதா? என்று கேலியாகப் பேசினான். அதுமட்டுமல்லாமல், அந்த கிராமவாசியின் கைகளில் இருந்து கோணிப்பையைப் பிடித்து இழுத்தான். கோணி பைக்குள் இருந்த தேங்காய்கள் வெளியே சிதறின ஓடின.
அப்போது அதிசயமாக, அந்த கிராமவாசி கொண்டு வந்திருந்த ஒவ்வொரு தேங்காய்க்கும் கொம்புகள் முளைத்திருந்தது. அதைக் கண்ட அந்தத் திருடன் மிரண்டு போனான். உடனே தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி, குருவாயூரப்பனிடம் மன்னிப்பு கேட்டான். அதோடு, சிதறிய அந்தத் தேங்காய்களை சேகரித்து அந்த கிராமவாசியிடம் கொடுத்து அவர் போக வழிவிட்டான்.
அந்த கிராமவாசியும் தான் வேண்டிக்கொண்டபடியே கொண்டுவந்த தேங்காய்களைக் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுத்தான். கொம்பு முளைத்த அந்தத் தேங்காயை குருவாயூர் கோயிலின் முன் மண்டபத்தில் கட்டப்பட்டிருப்பதை இன்றும் கண்டு தரிசிக்கலாம்.