வாழ்க்கை என்றால் குறிக்கோள்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். குறிக்கோளை அடைய முயற்சி தேவை. முயற்சி என்றால் அது சாதாரண முயற்சி அன்று. விடாமுயற்சி. ஒரு பெரிய விஷயத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கு விடாமுயற்சி தேவை. அப்போதுதான் குறிக்கோளை அடைய இயலும்.
முன்னொரு காலத்தில் உத்தானபாதர் என்றொரு அரசர் வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். மூத்தமனைவியின் பெயர் சுநீதி இளைய மனைவியின் பெயர் சுருசி என்பதாகும். சுநீதிக்கு துருவன் என்ற மகனும் இளைவள் சுருசிக்கு உத்தமன் என்ற மகனும் இருந்தார்கள்.
மன்னருக்கு இளைய மனைவி சுருசியின் மீது அதிக பிரியம் இருந்தது. இதன் காரணமாக மூத்த மனைவியையும் அவளுடைய மகன் துருவனிடமும் வேற்றுமை பாராட்ட ஆரம்பித்தார்.
ஒருநாள் இளைய மனைவியின் மகன் உத்தமன் அரசரின் மடிமீது அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். அரசரும் தன் மகனை கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார். இதைக்கண்ட துருவன் தானும் தன் தந்தையின் மடிமீது அமர்ந்து விளையாட விரும்பி தந்தையை நெருங்கினான். அப்போது அவருடைய இளைய மனைவி சுருசி துருவனை விலக்கி விட்டாள்.
“துருவனே. நீ என் வயிற்றில் பிறக்கவில்லை. ஆகையினால் மன்னரின் மடி மீது அமர்ந்து விளையாடும் உரிமை உனக்கில்லை”
இதைக்கேட்ட துருவன் வருத்தமடைந்து தன் தாயிடம் விவரத்தைக் கூறினான்.
“மகனே. உன் சிற்றன்னை கூறியது உண்மைதான். நீ நாராணயனிடம் வேண்டிக் கொள். அப்போது நீ மேன்மை அடைவாய்”
தாயின் இச்சொல்லைக் கேட்ட விளையாட்டுப் பிள்ளை துருவனின் மனதில் மாற்றம் நிகழ்ந்தது. நாராயணனை நினைத்து தவம் செய்ய முடிவு செய்து புறப்பட ஆயத்தமானான். அப்போது நாரத மகரிஷி அங்கே பிரசன்னமானார்.
நாரதரைப் பற்றி அறிந்திருந்த துருவன் அவரை மரியாதையுடன் வணங்கினான்.
“நாரதரே. உம்மை வணங்குகிறேன். என்னை ஆசிர்வதிப்பீராக”
“குழந்தாய். உம்மை ஆசிர்வதித்தோம். நீ இப்போது எங்கே புறப்பட்டு விட்டாய்”
துருவன் நாரதரிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறினான்.
“நாரத மகரிஷியே. நான் நாராயணனை நினைத்து தவம் புரியப் போகிறேன்”
“சிறுவனே. தவம் செய்வது என்பது அவ்வளவு சாதாரணமாக விஷயமல்ல. சிறுவனான உன்னால் அது முடியாது”
நாரதர் இப்படிச் சொன்னதும் துருவனுக்கு வைராக்கியம் அதிகரித்தது.
“என்னால் நிச்சயம் முடியும். தவம் செய்து நாராயணனின் தரிசனத்தைப் பெறுவேன்”
நாரதர் எவ்வளவு எடுத்துக் கூறியும் துருவன் கேட்கவில்லை. எனவே நாரதர் தவம் செய்வதைப் பற்றி சில விஷயங்களை துருவனுக்கு உபதேசித்தார். அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்ட துருவன் புறப்பட்டான்.
காட்டில் ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்து துருவன் தவம் செய்ய ஆரம்பித்துவிட்டான். சில காலம் தொடர்ந்து கடும் தவம் செய்த துருவனுக்கு நாராயணன் காட்சி அளித்தார்.
நாராயணன் தன்முன்னே காட்சி தந்து நிற்பதைக் கண்ட துருவன் அவரை வணங்கினான்.
“துருவனே. நீ எதற்காக தவம் செய்கிறாய் என்பது எமக்குத் தெரியும். உன் தந்தைமடிமீது என்ன. இந்த உலகில் உன்னதமான ஒரு இடத்தில் உன்னை அமர்த்துகிறேன். துருவபதத்தை உனக்கு அருளுகிறேன். நீ நீண்டகாலம் இம்மண்ணில் வாழ்ந்து மக்களுக்கு நல்லாட்சி செய்து பரமபதம் அடைந்து பின்னர் துருவ நட்சத்திரமாக வானில் பிரகாசிப்பாய். பலருக்கு நீ வழிகாட்டியாக விளங்குவாய்”
துருவனின் மகிமையைப் பற்றி அறிந்த மன்னர் உத்தானபாதர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். தனது மகனை வரவேற்று உபசரித்தார். சிற்றன்னை சுருசியும் அவளுடைய மகன் உத்தமனும் துருவனை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.
நாராயணனின் கட்டளைப்படி துருவன் தந்தையாருக்குப் பின்னர் அரசாட்சியை ஏற்று மக்களுக்கு நன்மைகள் பல செய்தான். பின்னர் துருவ நட்சத்திரமாக வானில் பிரகாசிக்க ஆரம்பித்தான்.