குருவின் முக்கியத்துவமும், குரு பூஜையும்!

குரு பக்தி...
குரு பக்தி...Image credit - pixabay
Published on

"தெளிவு குருவின் திருமேனி காணல்!

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்!

தெளிவு குருவின் திருநாமம் சொல்லல்!

தெளிவு குரு உரு சிந்தித்தல்தானே !"

குருவின் பெருமையை, முக்கியத்துவத்தை மேற்கூறிய திருமந்திரம் விளக்குகிறது. குரு இன்றி எதுவும் சாத்தியமில்லை. அதனால்தான் மாதா-பிதா-குரு-தெய்வமெனக் கூறப்படுகிறது. உலகில் விந்தையானது, குரு-சிஷ்ய பரம்பரை மூலம்தான் வந்து கொண்டிருக்கிறது. அதில் எல்லோருக்கும் லோக குருவாக ஸ்ரீ மகாவிஷ்ணு விளங்குகிறார்.

குருவின் முக்கியத்துவம்

குருவை சரணடைந்து, அவரது அனுக்கிரகிகத்தைப் பெற்றவனே ஆத்ம ஞானம் பெறத் தகுதியுடையவன் எனக் கூறப்படுகிறது. குருவிடம் மந்திர தீட்சை பெற்றுத்தான் மந்திரங்களை ஜபம் செய்யவேண்டும். அப்போதுதான் உரிய பலன்களை, மந்திரங்கள் தரும்.

ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் தொடர்பு ஏற்படுத்துபவரே குரு ஆவார். உலகில், குரு இறைவனின் பிரதிநிதியாக விளங்குகிறார். குருவின் போதனைகளை பின்பற்றி நடப்பதுவே உண்மையான வழிபாடாகும்.

இது குறித்து உபநிஷத்தில் கூறியுள்ளது என்னவென்றால்,-

"எவருக்கு தெய்வத்திடம் பக்தி இருப்பதுபோல குருவிடமும் இருக்கிறதோ, அவருக்கு உபநிஷதங்களில் சொல்லப்பட்டிருக்கும் உண்மைகள் தானாகவே அநுபவமாகும்" என்பதாகும்.

குரு பக்தி ஒன்றே ஆன்மாவிற்கு சாத்தியமாகும். குரு தத்துவத்தை அறியாதவனிடம், ஜபம், தவம், விரதம், யாகம், தானம் போன்றவைகள் பலனளிக்காது புத்திமான்கள் குருவை சரணாகதி அடைய முயற்சிக்க வேண்டுமென்று சிவபெருமான், குரு கீதையில் பார்வதி தேவியிடம் கூறுகிறார்.

பூஜை செய்யும் முறை

அதிகாலை எழுந்து ஸ்நானம் செய்து, தூய்மையான ஆடையணிந்து, சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். பிறகு, விளக்கேற்றி, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, சங்கு பூஜை, கண்டாமணி பூஜை, பீடபூஜை, ஆத்ம பூஜை ஆகியவைகளை செய்து, பின்வரும் சங்கல்ப மந்திரத்தை மூன்று முறைகள் கூறவேண்டும்.

"ஸ்ரீகிருஷ்ண வியாச பாஷ்ய காராணம்

சபரி வாராணம் பூஜாம் கரிஷ்யே"

பின்னர், தரையை சுத்தம் செய்து கோலம்போட்டு அதன்மீது நுனி இலையை வைத்து, நடுவில் அட்சதையை பரவலாக போட்டு அதன் மேல் கொட்டைப் பாக்குகளை வைத்து அதில் அந்தந்த தேவதைகளை ஆவாஹனம் செய்த பின் பூஜை செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
எது முக்கியம் என்பதை உணர்ந்தால் வெற்றி நிச்சயம்!
குரு பக்தி...

தியான ஸ்லோகத்தைக் கூறி தியானம் செய்து கொண்டு வேதவியாஸ "அஷ்டோத்தரத்தை சொல்லி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு, "ஓம் நமோ நாராயணா " என்கிற அஷ்டாஷர மந்திரத்தைக் கூறி, தூப தீபம் காட்டி, உபசார பூஜைகள் செய்து பிரார்த்தனை செய்யவேண்டும்.

பூஜைக்கு துளசி மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்து, பாயாசம், வடை போன்றவைகளை நிவேதனமாக படைக்க வேண்டும். பூஜைக்கு பயன்படுத்திய அரிசியை வீட்டு உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

குருவினால் உபதேசம் பெற்றவர்கள்-

ஸ்ரீ கிருஷ்ணர் குருவாக இருந்து அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தார்.

ஆதிசங்கரருக்கு கோவிந்தபாதர் உபதேசித்தார்.

ஸ்ரீராமரின் குருவாக இருந்து வழிகாட்டியவர் வசிஷ்டர். இப்படி அநேகம்.

குருவின் துணை என்றும், எப்போதும் அவசியம்.

குரூர் பிரம்மா, குரூர் விஷ்ணு குரூர் தேவோ மகேஸ்வர! குரூர் சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நம!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com