வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருக…

வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருக…

வ்வொரு வீட்டிலும் பூஜை செய்வதற்காக தனியாக அறையோ அல்லது அதற்கான ஒரு இடமோ வைத்திருப்பது வழக்கம். அப்படி இருப்பதால் மட்டும் அந்த வீட்டுக்கு லக்ஷ்மி கடாட்சம் வந்து விடாது. அந்த இடத்தை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் அந்த வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருகும். அந்த இடத்தில் நாம் செய்யக்கூடிய விஷயங்களைச் செய்யாமல் இருப்பதும், செய்யக் கூடாதவற்றை செய்வது போன்றவை கூட நமக்கு வரவிருக்கும் லக்ஷ்மி கடாசத்தை தடுத்து விடும். அது மட்டுமின்றி, பூஜை அறை என்று ஒன்று இருந்தால் அதில் சில பொருட்கள் நிச்சயமாக இருக்க வேண்டும். எனவே, பூஜை அறையில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

பூஜை அறையில் சுவாமி படங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும். சிலர் ஸ்வாமி படம் இல்லாமல், விளக்கு மட்டும் ஏற்றியும் வைப்பார்கள். அப்படி இல்லாமல் ஸ்வாமி படம் வைத்து வணங்க வேண்டும் என்பதுதான் முறை. குத்து விளக்கு ஏற்றுவதாக இருந்தால் இரண்டு விளக்கும், காமாட்சியம்மன் விளக்கு ஏற்றுவதாக இருந்தால் ஒன்றும் ஏற்ற வேண்டும். அந்தக் காமாட்சி அம்மன் விளக்கை தாம்பாளத் தட்டு வைத்து அதன் மீது கொஞ்சம் அரிசி போட்டு அதன் மேல் விளக்கு ஏற்றினால் நல்லது. திரி கருகி இருக்கும்போது அதில் தீபம் ஏற்றக் கூடாது. திரி மாற்றித்தான் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்ற நல்லெண்ணெய், நெய் ஊற்றி ஏற்றுவது சிறப்பு. வாரத்துக்கு ஒருமுறையாவது வெற்றிலை, பாக்கு, பழம், வைத்து பூஜை செய்வது மிகவும் நன்று.

அதேபோல், ஊதுபத்தி ஏற்றும்போது இரண்டு ஊதுபத்தி ஏற்ற வேண்டும். மாதத்தில் இரண்டு முறையாவது வீட்டு வாசலில் மாவிலை தோரணம் மாற்றிக் கட்டுவது விசேஷம். ஸ்வாமிக்கு வைக்கும் சந்தனம், குங்குமம் தனியாகவும், நாம் வைத்துக் கொள்ளும் சந்தனம், குங்குமம் தனியாகவும் இருக்க வேண்டும். அதேபோல், பூஜை அறையில் கட்டாயமாக விபூதி, சந்தனம், குங்குமம், கற்பூரம் இவை அனைத்தும் எப்போதுமே இருக்க வேண்டும்.

பூஜை அறையில் விக்ரஹங்கள் ஆட்காட்டி விரல் அளவுக்கு இருந்தால் சாமி படங்களைப் போலவே அதையும் வைத்து வழிபடலாம். ஆனால், அதை விடப் பெரிதாக இருந்தால் கட்டாயமாக நித்திய பூஜை, நெய்வேத்தியம் செய்து வழிபட வேண்டும். அதேபோல், பஞ்ச பாத்திரம் தனியாக இருக்க வேண்டும். நிவேதனம் வைக்கும் பாத்திரம் தனியாக இருக்க வேண்டும். தீபம் காட்டும் தட்டும் தனியாக இருக்க வேண்டும். பூஜை அறையில் மணி கட்டாயம் இருக்க வேண்டும். பூஜையின்போது மணி அடித்துதான் வழிபட வேண்டும்.

ஸ்வாமி படத்துக்கு மேல் வாடிய பூக்கள் எப்போதும் இருக்கக் கூடாது. அதே நேரத்தில் வாடிய பூக்கள் இருக்கும்போது புதிய பூக்களையும் போடக்கூடாது. சிலர் பூஜை செய்யும்போது தரையில் அமர்ந்து பூஜை செய்வார்கள் அப்படி தரையில் அமர்ந்து பூஜை செய்யக்கூடாது. ஏதாவது ஒரு மனை அல்லது துணி போட்டு அதில் அமர்ந்து தான் பூஜை செய்ய வேண்டும்.

இவை அனைத்தையும் விட, பூஜை அறையை எப்போதும் சுத்தமாக, வாசனையுடன் வைத்திருப்பது நல்லது. இவை அனைத்தும் சின்னச் சின்ன விஷயங்கள்தான். இதை நாம் சரியாக செய்தாலே நாம் வீடு நல்ல தெய்வாம்சம் பொருந்திய வீடாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com