வாரிசு வரம் தரும்
ஸ்ரீ சாயாவனேஸ்வரர்!

வாரிசு வரம் தரும் ஸ்ரீ சாயாவனேஸ்வரர்!

காவிரிப்பூம்பட்டினம் என்னும் பூம்புகாருக்கு சமீபமாக அமைந்துள்ளது சங்கமுக க்ஷேத்ரமென்னும் சாயாவனம். முன்பு திருச்சாய்க்காடு என்று போற்றப்பட்ட இத்தலம், சோழவளநாட்டின் காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்பதாவது தலமாகத் திகழ்கிறது. காசிக்கு சமமாகக் கருதப்படும் ஆறு தலங்களுள் ஒன்று சாயாவனம். மற்றவை திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு மற்றும் ஸ்ரீவாஞ்சியம் ஆகும்.

ஆதியில் இந்திரன் இத்தல சிவனாரை வழிபட்டு, ஆண் மகவான ஜெயந்தனைப் பெற்றான். அதோடு, மகிமை மிகுந்த இந்த சிவாலயத்தை தனது தேவலோகத்துக்கே எடுத்துச் செல்ல தேர் பூட்டினான். ஆனால், உலகத்தவருக்கு அருள்புரிந்திட எண்ணிய பரமன், ஸ்திரப்பிரதிஷ்டை ஆனார். பசுபதிநாதரின் பற்றுணர்ந்த தேவேந்திரன் தனது தவறுணர்ந்து வருந்தினான்.

கிருஷ்ண பரமாத்மா இத்தல ஈசனை வணங்கி சாம்பனைப் பெற்றெடுத்தார். சூரியன் வணங்கி, மனுவைப் பெற்றார். பலராமன் வழிபட்டு, பகைவர்கள் கண்டு அஞ்சும் கலப்பைப் படையினைப் பெற்றார். வானவர் தலைவனான வாலி இத்தல சிவபெருமானை வணங்கி, மகனான அங்கதனை பெற்றதோடு, தன்னோடு எதிர்த்துப் போரிடுபவரது பாதி பலத்தைப் பெற்றிடும் பெருவரத்தையும் பெற்றுள்ளான். உபமன்யு முனிவர் துதித்து, 63 நாயன்மார்கள் சரித்திரத்தைச் சொல்லவும் கயிலையில் வசிக்கவும், அருள் பெற்றுள்ளார். ஐராவதம் சாப விமோசனம் வேண்டி இத்தலத்தினில் தீர்த்தம் உண்டாக்கி பரமனை பூஜித்துள்ளது.

‘இல்லையே எனாத இயற்பகைக்கும் அடியேன்’ என சுந்தரமூர்த்தி நாயனாரால் போற்றப்பட்ட இயற்பகை நாயனாரும், அவரது துணைவியாரும் முக்கியடைந்தது இந்த புண்ணிய பதியினில்தான். திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களையும், திருநாவுக்கரசர் மூன்று பதிகங்களையும் இத்தலத்துக்கு அருளியுள்ளனர். ஐயடிகள் காடவர்க்கோனும், வடலூர் வள்ளல் இராமலிங்கரும் இத்தலத்தினைப் பாடிப் போற்றியுள்ளனர்.

அதி உன்னதமான இந்தத் திருக்கோயில், நெடுஞ்சாலையை ஒட்டி அற்புதமாக அமைந்துள்ளது. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், நாற்புறமும் மதில்கள் மற்றும் படிகளுடன் ஐராவதக் குளம் எழிலுற அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய ஆலயம் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. ஒரே திருச்சுற்றைக் கொண்டு ஆலயம் மூடுதளத்துடன் திகழ்கின்றது.

மாடக்கோயில் என்பதால் படிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோட்செங்கச் சோழனால் எழுப்பப்பட்ட மாடக்கோயிலில் இதுவும் ஒன்றாகும். மகா மண்டபம், இடை மண்டபம் அடுத்து கருவறை. மூலஸ்தானத்தில் சுயம்பு மூர்த்தமாக அருள்பாளிக்கின்றார் ஸ்ரீ சாயாவனேஸ்வரர். சிறிய பானலிங்க வடிவில் காட்சி தருகின்றார். இவருக்கு இரத்தின சாயாவனேஸ்வரர் என்கிற திருநாமமும் உண்டு.

மகாமண்டபத்தில் தென்முகம் கொண்டு கையில் வில்லேந்திய கோலத்தில் கலைநயத்தோடு கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றார் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி. கடலில் கிடைக்கப்பெற்ற இம்மூர்த்தியை இந்த க்ஷேத்ரத்தில் ஸ்தாபித்து ஆராதித்து வருகின்றனர்.

மகாமண்டபத்தோடு ஒட்டிய அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையினுள் நின்றவண்ணம் புன்னகைச் சிந்தியபடி ஆனந்த தரிசனம் அளிக்கின்றாள் அன்னை குயிலினும் நன்மொழியம்மை. ஸ்ரீ கோஷாம்பிகை என்றொரு பெயரும் இந்த அன்னைக்கு உண்டு. ஆலய வலம் வருகையில் இந்திரன், தனது துணைவியாருடன் கூடிய இயற்பகை நாயனார், கஜலட்சுமி போன்ற சிலாரூபங்கள் காட்சி தருகின்றன. முன்புறம் ஸ்ரீ பைரவர், சூரிய-சந்திரர்கள் மற்றும் நவகோள்கள் அமையபெற்றுள்ளன. சுவர்கள் கல் கட்டிடம் என்பதால் மிக உறுதியுடன் காணப்படுகின்றன.

தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறும் இக்கோயிலின் தல விருட்சமாக பைஞ்சாய் என்னும் கோரை விளங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்த ஆலயம் செயல்பட்டு வருகிறது. பொதுவான சிவாலய விசேஷங்களோடு, சித்ரா பௌர்ணமியில் இந்திர விழா, ஆடி மற்றும் தை அமாவாசையில் இத்தல வழிபாடு சகல பாவங்களையும் நீக்கி, க்ஷேமத்தை கொடுக்கும் என்பது சான்றோர் வாக்கு.

அமைவிடம்: நாகை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் உள்ள இத்தலம், பூம்புகார் - மயிலாடுதுறை சாலையில் பூம்புகாரில் இருந்து 2 கிலோஎமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தரிசன நேரம்: காலை 7 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 8 மணி வரை.

logo
Kalki Online
kalkionline.com