இரவல் சொத்து!
உத்தியான வனத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் மன்னர் ஜானசுருதி. பிரம்ம ஞானத்தைக் கற்க வேண்டும் என்பது அவரது தணியாத ஆசை. அப்போது இரண்டு ஹம்ஸ பட்சிகள் அங்கே வந்தன. ஜான சுருதிக்கு பட்சிகள் பாஷை தெரியும்.
“தம்பி, பல்லாட்சா! கீர்த்திபெற்ற ஜானஸ்ருதரின் கொள்ளுப் பேரன் இவர். அருகே போகாதே! இவர் தேஜஸ் இறகுகளைப் பொசுக்கிவிடும்” என்றது ஒரு அன்னம்.
“அண்ணா! வண்டிக்கார ஞானி ரைக்வரைப் பற்றித் தெரியாதா? அவரைப் போற்றவேண்டிய சொற்களை இவருக்குப் பயன்படுத்தி விட்டீர்களே!” என்றது இரண்டாவது ஹம்ஸம். “ரைக்வரா? வண்டிக்கார ஞானியா? விவரமாகச் சொல்” என்று ஆவலோடு கேட்டது முதல் அன்னம்.
“அவர் பரப்பிரம்மத்தை அறிந்தவர்; தவவலிமை மிக்கவர்; அவரால்தான் இங்கு தர்மம் நிலைத் திருக்கிறது” என்று சொல்லிய பல்லாட்ச பட்சி பறக்க, உடனிருந்த பட்சியும் பின்தொடர்ந்தது.
ஜானசுருதியின் மன அமைதி காணாமல் போயிற்று. வண்டிக்கார ரைக்வரைக் கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பினார். பல மாதங்கள் கடந்தன.
ஒரு நதிக்கரையில் மரத்தடியில் வண்டிக்கு அடியில் படுத்துக்கொண்டிருந்த ஒரு தாடிக் கிழவரிடம், “வண்டிக்கார ரைக்வரைப் பற்றி ஏதும் அறிவீர்களா?” என்று விசாரித்தான் ஒரு காவலன். “எதற்கு அவரைத் தேடுகிறீர்கள்?” என்று எதிர்கேள்வி பிறந்தது.
“ஐயா! எங்கள் அரசர் ஜானசுருதி அவரிடம் பிரம்ம ஞானம் பெற வேண்டுமாம். அவரை குருவாக வரித்திருக்கிறார்” என்று காவலர் பணிவோடு கூறினார்.
“குரு இருக்குமிடம் சென்று வித்தை கற்பதுதானே உலக வழக்கம்” என அவர் கேட்க, காவலர்களுக்கு அவர்தான் ரைக்வர் என்று புரிந்துவிட்டது. விரைந்து சென்று வேந்தனிடம் சேதி சொன்னார்கள்.
கறவைப் பசுக்கள், நவரத்தின மாலை, பட்டு, பீதாம்பரங்களுடன் அம்ச வேணிப் புரவிகள் பூட்டிய ரதத்திலேறிச் சென்று ரைக்வரைச் சந்தித்து வணங்கினார் மன்னர். “இந்த எளிய காணிக்கைகளை ஏற்று எனக்கு பிரம்ம ஞானத்தை அருளவேண்டும்” என வேண்டினார்.
புழுதி மண்ணில் புரண்டு திரும்பிய ரைக்வர்,
“இந்த அற்பப் பொருட்களைத் தூக்கிக்கொண்டு போ! என் தூக்கத்தைக் கெடுக்காதே” என இரைந்தார்.
“காணிக்கை கொஞ்சமாயிருக்கிறதென்று நினைக்கிறாரோ?” என்றெண்ணிய மன்னர், மறுநாள் பல மடங்கு காணிக்கையுடன் சென்றார்.
ரைக்வர் எழுந்து உட்கார்ந்தார். “நீ தரும் இந்த வெகுமதிகளெல்லாம் உன்னோடு வந்ததா? உலகை விட்டுப் போகும்போது எடுத்துச்செல்ல முடியுமா? அழியாத பிரம்ம ஞானத்தை விலைபேச ஆடம்பரமாக வந்த நீ எப்படி எனக்குச் சீடனாக முடியும்?” என்றார். இதன்பின்னர், ஜானசுருதி எளிய உடையணிந்து குருவோடு புழுதியில் அமர்ந்து பிரம்ம ஞானத்தை உபதேசமாகப் பெற்றார். ரைக்வர் வாழ்ந்த இடத்துக்கு ‘ரைக்வ பர்ணம்’ என்றே பெயர் வந்தது.