அனுபவச் சுவடுகள் – 3 பழனி முருகனா? மூட்டை சாமியா?

அனுபவச் சுவடுகள் – 3 பழனி முருகனா? மூட்டை சாமியா?
Published on

லய தரிசனம். புண்ணியத்தை அளிக்கக் கூடியது. வாஸ்தவம்தான்.

அதே சமயம், மகான்களைத் தேடியும் நிறைய பயணிக்க வேண்டும்.

எந்த ஒரு ஊருக்குச் சென்றாலும். அங்கே மகான்களின் ஜீவ சமாதி இருக்கின்றதா என்று அறிய வேண்டும்.

ஜீவ சமாதி கொண்டிருக்கிற மகான்களின் திருச்சன்னிதியை வாழ்வில் அடிக்கடி தரிசிக்க வேண்டும். அதைத் தரிசிக்கின்ற வேளையில் கிடைக்கக்கூடிய அதிர்வலைகள் (வைப்ரேஷன்) நம் உடலிலும் உள்ளத்தில் நல்ல மாற்றங்களை உண்டுபண்ணும்.

எந்த ஜன்மத்தில் செய்த புண்ணியமோ. எனக்கு அத்தகைய ஒரு பணி வாய்த்தது. ஆலயங்களை ஊர் ஊராகப் போய்த் தரிசிப்பது, மகான்களின் ஜீவ சமாதிகளைத் தேடித் தேடி தரிசிப்பது- இதுதான் என் கடந்த கால உத்தியோகம்!

ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

நான் நீண்டகாலம் பணிபுரிந்த ஒரு வாரப்பத்திரிகையில் எனக்கு சீனியரான வை.கதிர் (வேல்). என் ஆத்ம நண்பர்.

நண்பர் வேறு. ஆத்ம நண்பர் வேறு.

நமது முன்னேற்றத்தில் நண்பருக்கு அக்கறை இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஆனால். ஆத்ம நண்பருக்கு நமது முன்னேற்றத்திலும், உயர்விலும் கூடுதல் அக்கறை உண்டு.

என்னை அதிகம் புரிந்துகொண்டவர் கதிர். என் வேகத்தை அறிந்து, அதற்கான களத்தில் என்னைப் பயணிக்க வைத்தவர். என் நலனில் அக்கறை கொண்டவர்.

அவர் அடிக்கடி, "சாமீ (சுவாமிநாதன் என்பதன் சுருக்கம்)... பலரும் ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு. சொந்தக் காசை செலவழிச்சு கோயிலுக்குப் போவாங்க... ஆனா, ஆபீஸே உங்களை ஆன் டூட்டில கோயிலுக்கு அனுப்புது. செலவும் பண்ணுது. புண்ணியம் பண்ணவர் நீங்க" என்று கொஞ்சம் நெகிழ்ச்சியாகவே சொல்வார்.

பத்திரிகைப் பணியில் இருந்தபோது நடந்த சம்பவம் இது...

ஜீவ சமாதிகள் குறித்த கட்டுரைக்காக ஒரு முறை திண்டுக்கல் சென்றேன்.

வந்த வேலை என்னவோ, அதைத் திண்டுக்கல்லில் முடித்துவிட்டேன்.

என் அசைன்மெண்டுகளுக்கு உடன் வந்து உதவியவர், திண்டுக்கல் நிருபர் பிரபு.

"சார். அரை நாள் டைம் இருக்கே... பழநிக்குப் போகலாமா?" என்று கேட்டார்.

போதிய கால அவகாசமும் இருந்தது. தண்டாயுதபாணியைத் தரிசிக்க வாய்ப்பு வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் எப்படி?!

"ஓகே" என்றேன் உற்சாகமாக.

அடுத்த கால் மணி நேரத்தில் பிரபுவின் காரில் இருந்தேன். அவர் காரை ஓட்ட... அருகே நான்.

திண்டுக்கல் டூ பழநி சுமார் 60 கி.மீ. தொலைவு. ஒரு மணி நேரப் பயணம்தான்.

முத்தணாம்பட்டி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் தாண்டி கணக்கன்பட்டியை கார் நெருங்கிக்கொண்டிருந்தது. கணக்கன்பட்டியில் இருந்து பழநிக்கு சுமார் 12 கி.மீ. தொலைவுதான் குறைந்தபட்சம் இன்னும் கால்மணி நேரப் பயணம்

மனம் முழுக்க பழநி தண்டாயுதபாணி ஆட்கொண்டான். இன்னும் சற்று நேரத்தில் அவனது அற்புதமான தரிசனம் கிடைக்கப் போகிறது அல்லவா?

ஆனால், கணக்கன்பட்டி பேருந்து நிறுத்தத்தைக் கடக்கும்போது கார் ஏனோ பொசுக்கென நின்றுவிட்டது.

குழப்பமான ஒரு புன்னகையுடன் என்னைப் பார்த்து விட்டுச் சிரித்த பிரபு, காரை ஸ்டார்ட் செய்ய முயன்றார். ஊஹும். ஸ்டார்ட் ஆகவில்லை.

மீண்டும் முயன்றார். பலன் இல்லை.

இறங்கினார். பானட்டைத் திறந்தார். என்னென்னவோ செய்து பார்த்தார். பிரயோஜனம் இல்லை.

ஒருவர் பயணித்துச் சென்ற கார் ரிப்பேராகி சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருக்கும்போது, அந்த வழியே கடந்து செல்கிற அனைத்து வாகன ஓட்டிகளும் நம்மையே பரிதாபமாகப் பார்த்துச் செல்வார்கள். அவர்களில் ஒரு சிலர் உதவுவதற்கு வருவார்கள் என்று படித்திருக்கிறேன்.

எல்லோரும் பரிதாபத்துடன் பார்த்துச் சென்றார்களே தவிர. அன்றைக்கு ஒருவரும் உதவ முன்வரவில்லை.

குழப்பமான சூழ்நிலையில் கைகளைப் பிசைந்துகொண்டு பிரபு என்னைப் பார்த்தார்.

"நோ பிராப்ளம் பிரபு. காரை நிதானமா ரெடி பண்ணுங்க. ஒண்ணும் அவசரமில்லை" என்றேன்.

"ஸாரி சார். இதுவரைக்கும் இப்படி பொசுக்குன்னு வண்டி ஆஃப் ஆனதில்லை. இங்க மெக்கானிக் எங்கே இருக்காங்கனு தெரியலை. நான் தேடுறேன். அதுவரைக்கும் உங்க டயத்தையும் வீணாக்க வேண்டாம். இங்க ஒரு சித்தர் இருக்கார். அவரை நீங்க தரிசனம் பண்ணுங்க. ஆனா, அவரு ஊர்ல இருக்காரா, இல்லே எங்கயாவது போயிருக்காரானு தெரியலை" என்று சந்தேகத்துடன் கூறியபடியே இரு பக்கமும் பார்த்தபடி பரபரப்பாக இருந்த அந்த சாலையைக் கடந்தார். உடன் நானும் நடந்தேன்.

ருக்குள் சென்றதும் பழக்கப்பட்டதுபோல் வலப்பக்கமாகத் தென்பட்ட ஒரு தெருவில் நடக்க ஆரம்பித்தார்.

வெகு சாதாரணமான வீடுகளைக்கொண்ட தெரு அது. வசதியான வீடுகள் தென்படவில்லை.

குறிப்பிட்ட ஒரு குடிசை வீட்டின் அருகிலும் எதிரிலும் சுமார் இருபது பேருக்கு மேல் தென்பட்டனர்.

சாணி போட்டு மெழுகப்பட்டதுபோல் தென்பட்ட சாலையின் ஓரமாகவும், சாலையிலுமாக இவர்கள் அமர்ந்திருந்தார்கள். இன்னும் சற்றுத் தள்ளி இரண்டு மூன்று கார்கள் நின்றுகொண்டிருந்தன.

பிரபுவின் முகத்தில் பிரகாசம்.

பழநி முருகனைத் தரிசிக்கச் செல்வதற்குக் கால தாமதம் ஆகி விடுமோ என்கிற கவலை எனக்குள்!

தண்டாயுதபாணியின் தரிசனம் கிடைப்பதற்கு முன்னால் தரிசிக்க இருக்கிற இந்த சித்தர் யார்?

பக்தர்களுடன்...
பக்தர்களுடன்...

பிரபு என் பக்கம் உற்சாகமாகத் திரும்பினார். பக்தர் களையும், கார்களையும் பார்த்தவர், "சார்... உங்களோட நல்ல நேரம்... சித்தர் குடிசைக்குள்ளதான் இருக்கார். அவரை தரிசனம் பண்றதுக்குத்தான் இவங்கல்லாம் காத்திருக்காங்க" என்றார்.

எனக்கோ குழப்பம். பழநி தண்டாயுதபாணியை இன்னும் தரிசிக்கவில்லையே..!

பிரபு தொடர்ந்தார்: "நீங்க அவசியம் இவரை தரிசனம் பண்ணணும் சார். இந்த சித்தரைப் பத்தி அவ்வளவா வெளில யாருக்கும் தெரியாது. இவரை ரொம்ப தெரிஞ்ச பக்தருங்க மட்டும் அவ்வப்போது இந்த இடத்துக்கு வந்துட்டுப் போவாங்க, இவர் பேரு, மூட்டை சுவாமிகள்னு சொல்வாங்க. கணக்கன்பட்டி சாமீன்னும் சொல்லுவாங்க" என்றவர் சுற்றுமுற்றிலும் பார்த்தார்.

சித்தர் இருந்த குடிசை வீட்டுக்குப் பக்கத்தில் இரண்டு வீடுகள் தள்ளி, அதே வரிசையில், பக்தர்கள் எவரும் காத்துக்கொண்டிருக்காத ஓரிடத்தில் என்னை நிற்க வைத்தார் பிரபு.

பிறகு. "இங்கயே நில்லுங்க சார். இன்னும் கொஞ்ச நேரத்துல சாமீ வெளில வந்துடுவார்னு நினைக்கிறேன். மத்த சாமியாருங்க மாதிரி இவர் யார்கிட்டயும் பேசமாட்டார். பிரசாதம்லாம் தர மாட்டார். வெளிய வந்தவுடனே தன்னோட பார்வையை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்ப்பார். அப்படிப் பாக்கறப்ப அவர் ஒங்களைப் பார்த்தார்னாலே யோகம்தான். இங்கயே வெயிட் பண்ணுங்க. இந்த 'கேப்'ல வண்டிய ரெடி பண்ணிட்டு வந்துடறேன்" என்று வேகமாக நடந்தார் பிரபு.

எனக்குள் ஒரு படபடப்பு. இந்த சித்தரைப் பற்றி இத்தனை பீடிகை போட்டு விட்டுப் போகிறாரே... இவரைத் தரிசிக்க வேண்டித்தான் இந்த இடத்தில் கார் பழுதாகி உள்ளதா?

இதையும் படியுங்கள்:
அனுபவச் சுவடுகள் - 2 'அரியமாணிக்கம் அம்மன்'!
அனுபவச் சுவடுகள் – 3 பழனி முருகனா? மூட்டை சாமியா?

நான் மட்டும் தனியாக நின்றுகொண்டிருந்தேன்.

மூட்டை சுவாமிகளின் தரிசனம் வேண்டி எனக்குத் தள்ளி அமர்ந்திருந்தவர்கள். சற்றே தலையைத் திருப்பி அவ்வப்போது குடிசைக்குள் எட்டிப் பார்த்தபடியே இருந்தார்கள்.

சுவாமிகள் வெளியே வரும்போது தாங்கள் எழுந்து வணங்குவதற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வு!

அநேகமாகப் பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்.

திடீரென்று ஒரு பரபரப்பு.

வாசலில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் பரபரப்பானார்கள். தங்கள் உடையில் ஒட்டி இருந்த மண்ணை உதறியவாறு சட்டென்று எழுந்தார்கள்.

குடிசைக்குள் பார்த்துக் கைகளைக் கூப்பி வணங்கினார்கள்.

அந்தக் குடிசை வீட்டுக்குள்ளிருந்து ஒருவர் வெளியே வந்தார்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com