ஜாம்நேர் அற்புதம்

ஷீரடிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள் - நானா சாஹேப் சந்தோர்க்கர்
ஜாம்நேர் அற்புதம்
Published on

ஷீரடி ஸ்ரீ சாயி – பக்தித் தொடர்

அத்தியாயம் -2 

ஜாம்நேர் அற்புதம்

நானா சாஹேப்  என்று அழைக்கப்பட்ட நாராயண கோவிந்த சந்தோர்க்கர் ஒரு டெபுடி கலெக்டர்.  ஷீரடி கிராமம் அவருடையக்  கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.   அவருடைய தந்தை மற்றும் மூதாதையர்கள் சகல சாஸ்திரங்களையும் கற்று உணர்ந்தவர்கள்.  நானாவும் உயர் படிப்புப் படித்து, தனது இருபதாவது வயதிலேயே கல்லூரியிலே பட்டம் பெற்று அரசாங்கத்தில் உயர்ந்த பணியில் இருந்தார்.  இந்து சாஸ்திரங்கள் யாவற்றையும், முக்கியமாக ஸ்ரீசங்கரருடைய பாஷ்யத்துடன் கீதையை ஆர்வத்துடன் கற்று, ஆன்மீகத் துறையில் முன்னேறத் துடியாக இருந்தார். இந்த சமயத்தில்தான் அவர் ஷீரடி கிராமக் கணக்குப் பிள்ளை மூலம் ஷீரடிக்கு இழுக்கப்பட்டார்.

"நாலு தலைமுறைகளாக நான் உன்னை அறிவேன்!" என்றார் பாபா நானாவை முதலில் பார்த்ததும். பாபா நிகழ்த்திய அற்புதங்களை நேரில் பார்த்து  நாளா வட்டத்தில் படிப்படியாக பாபாவின் தெய்விகத் தன்மையை உணர்ந்து கொண்ட நானா,  பாபாவின் திருவடிகளே சரணம் என்று வாழ்ந்துகொண்டிருந்தார்.  அவரே மஹராஷ்டிராவின் கணக்கற்ற பக்தர்கள் ஷீர்டி வந்து பாபாவை தரிசிக்கக் காரணமாயிருந்தார்.

நானா சாஹேபுக்கு தாம் வேதாந்தத்தில் சிறந்த மாணவர் என்பதிலும், கீதையை தகுந்த விளக்கங்களுடன்  கற்றிருக்கிறோம் என்பதனாலும், தான் மிகவும் கற்றுத் தேர்ந்த அறிவாளி என்கிற கர்வம் இருந்தது.  இவைகளைப் பற்றியோ, ஏன் சமஸ்க்ருதத்தைப் பற்றியோ கூட பாபாவுக்கு ஒன்றும் தெரியாது என்று கற்பனை செய்துகொண்டார்.  இவர் குட்டு ஒருநாள் அம்பலமானது.

நானா சாஹேப் சந்தோர்க்கர்
நானா சாஹேப் சந்தோர்க்கர்

ரு நாள் மசூதிக்குச் சென்று பாபாவை நமஸ்கரித்து விட்டு அவர் கால்களைப் பிடித்து அவருக்குப் பணிவிடை செய்தவாறே ஒரு வடமொழி ஸ்லோகத்தைத் தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டிருந்தார். 

பாபா: "நானா! என்ன வாய்க்குள்ளேயே ஏதோ முணு முணுத்துக்கொண்டிருக்கிறாய்?  உரக்கச் சொல்லு! எல்லோரும் கேட்போம்!"

நானா:  "பகவத் கீதை அத்தியாயம் நாலில் 34வது ஸ்லோகம் அது.

"தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஷ்னேன ஸேவயா

உபதேஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ்தத்வதர்ஷின:"

"அதை விளக்கிக் கூறு பார்க்கலாம்!"

"சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து குருவைத் தொழுவதும் குருவிடம் கேள்விகள் கேட்பதும் குரு சேவை செய்வதுமே ஞானத்தைப் பெறும் வழியாகும்" என்று அந்த ஸ்லோகத்தின் பொதுவான விளக்கத்தைக் கூறினார் நானா.  பாபா அவரை பதம் பிரித்து விளக்கிக் கூறச் சொன்னார்.

தான் கற்றுத் தேர்ந்த ஸ்ரீசங்கரருடைய பாஷ்யத்தில் பதம் பதமாக பொருள் விளக்கப்பட வில்லையே என்று நினைத்துக்கொண்டார் நானா.   நானாவுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.  பாபாவையே கேள்விகளுக்கு விடையளித்து சந்தேகங்களை நீக்குமாறு  பணிவுடன் கேட்டுக்கொண்டார்.

"ஞானிகளின் முன்னே வெறுமனே சாஷ்டாங்க நமஸ்காரம் மட்டும் செய்தால் போதாது. நான் ஒன்று மில்லாதவன்.  குருவே எல்லாம் என்கிற உணர்வுடன் பூரண அடக்கத்துடன் நம் சத்குருவிடம் சரணாகதியடைய வேண்டும். கேள்வி கேட்பதில் ஒரு ஒழுங்கு பின்பற்றப்பட வேண்டும். அது ஆன்மிக முன்னேற்றம் தொடர்பான கேள்விகளாக இருக்கவேண்டும்.   சேவை என்பது பாதங்களைப் பிடிப்பது மட்டுமில்லை. உடல், மனம், பொருள், உள்ளம் யாவற்றையும் குருவினிடம் அர்ப்பணிக்கவேண்டும்.  நாம் தான் குருவிற்கு சேவை செய்கிறோம் என்கிற எண்ணம் கூடாது.  குருவினிடம் ஏற்கெனவே அடைக்கலம் புகுந்து  விட்ட உனது தேகம் குருவிற்கே சொந்தமாகி விடுகிறது.  'தங்களுக்கு சொந்தமான தேகத்தைத் தங்கள் சேவையில் ஈடுபட வைக்கிறேன்' என்ற எண்ணத்துடன் சேவை செய்வது தான் சேவா." என்று விளக்கிய பாபா தொடர்ந்து கூறினார். "அறியாமையை ஒழிப்பதே ஞானம்.  இருளைத் துரத்துவது என்றால் ஒளி என்று பொருள். நாம் இருளை அகற்றுவது பற்றிப் பேசும்போதெல்லாம் ஒளியைப் பற்றிப் பேசுகிறோம்.  சுருக்கமாகச் சொன்னால் அஞ்ஞானத்தை வேருடன் கிள்ளியெறிந்தால் மிஞ்சுவது  ஞானமே.  கிருஷ்ண பரமாத்மா இந்த ஸ்லோகத்திற்கு இதுதான் பொருள் என்று அர்ஜுனனுக்கு அறிவித்தார்" மிகத் தெளிவாக கீதையின் உட்பொருளை எடுத்துரைத்தார் பாபா.

நானா சாஹேப் சந்தோர்க்கர் என்கிற பெரிய படிப்பாளி,   பாபா ஒப்புயர்வற்ற ஞானி,  வடமொழி என்ன உலகத்திலுள்ள அத்தனை மொழிகள், உபநிஷதங்கள், சகல சாஸ்திரங்களும் அவருக்குள் அடக்கம் என்று புரிந்துகொண்டு மிகுந்த பணிவுடன் பாபாவிடம் சரணாகதியடைந்தார்.

நானாசாஹேப் சந்தோர்க்கருக்கு ஒருமுறை பண்டரீ புரத்திற்கு மாற்றல் கிடைத்தது. 'பூலோக வைகுண்டத்திற்கே' போக வாய்ப்பு கிடைத்தது என்று எண்ணி அவர் அகமகிழ்ந்து போனார்.    அவர் ஷீரடிக்குச் சென்று பாபாவிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு புறப்பட எண்ணி ஷீரடிக்குப் புறப்பட்டார்.  அவர் சென்றபோது பாபா அடியவர்களுடன் பஜனைப்பாடல் பாடிக்கொண்டிருந்தார்.

              "நான் பண்டரீபுரத்துக்குப் போக வேண்டும்

              அங்கே தங்க வேண்டும்

              ஏனெனில் அதுவே எனது பரமாத்மாவின் வீடு" என்று.

தான் சொல்லாமலே பாபா தன்னுடைய மாற்றல் உத்திரவை அறிந்ததோடு இல்லாமல், அதை பாடல் ரூபத்தில் ஆசிர்வாதமும் செய்தபோது நானாவின் மகிழ்ச்சிக்கும் பரவசத்துக்கும் அளவேது?

சில வருடங்களுக்குப் பிறகு நானா சாஹேப் சந்தோர்க்கரின் மகள் மைனாத்தாயி பிரசவ வேதனையில் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தாள்.  நானா பாபாவின் உதவியை வேண்டி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் ஷீரடியில் சில நாட்களாகத் தங்கி  பாபாவை தரிசனம் செய்து கொண்டிருந்த ராம்கீர்புவா என்பவர் கான்தேஷிலுள்ள தன் வீட்டிற்குத் திரும்ப பாபாவின் அனுமதியைக் கோரினார்.  பாபாவும் அவரை ஆசிர்வதித்து உதிப் பிரசாதம் அளித்துக் கூறினார். "நீர் உங்கள் கிராமத்திற்குச் செல்லும் வழியில் ஜாம்நேரில் நானாவின் விட்டிற்குச் சென்று சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்படியே நானாவிடம் உதியையும் இந்த ஆரத்திப் பாடலையும் கொடுங்கள்!" என்றார். ராம்கீர்புவாவின் பிரயாணத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுமாதலால் கவலைப்படாமல் போகச் சொன்னார்.

ராம்கீர்புவா ஜல்காவனை அதிகாலை இரண்டு மணியளவில் அடைந்தபோது,  அரசாங்கப் பணியாள் சீருடை தரித்த ஒருவன்,"ஷீரடியிலிருந்து வந்திருக்கும் ராம்கீர்புவா யார்?" என்று கேட்டு அவரை ஜாம்நேருக்கு அழைத்துப் போனான். "உங்களை அழைத்து வர நானா சாஹேப் சந்தோர்க்கர் என்னை அனுப்பினார்.  இந்த குதிரை வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள்! அவர் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்!" என்றான்.

வண்டி வேகமாகச் சென்றது. சற்று நேரத்தில் அவர்கள் ஒரு ஓடைக்கரையை அடைந்தனர்.   இருவரும் சிற்றுண்டி உண்ட பின் வண்டி மீண்டும் புறப்பட்டு சூர்யோதயத்தில் ஜாம்நேரை அடைந்தது.  ராம்கீர்புவா சிறுநீர் கழிக்கச் சென்று சற்று நேரத்தில் திரும்பி வந்தார்.  என்ன ஆச்சரியம்! குதிரை வண்டி, பணியாள் யாரையும் காணோம்!  சுற்றுமுற்றும் தேடியும் எங்கேயும் காணப்படவில்லை.

ராம்கீர்புவா ஒன்றும் புரியாமல் எதிரே தென்பட்டவரிடம் நானாவின் வீட்டுக்குப் போகும் வழியை விசாரித்துக் கொண்டு நானாவின் வீட்டையடைந்தார். ராம்கீர்புவா தான் ஷீரடியிலிருந்து வருவதாகக் கூறித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பாபாவின் உதியையும் ஆரத்தியையும் அளித்தார்.  நானா தன் மனைவியை அழைத்து உதியைத் தண்ணீரில் கரைத்து மகளுக்குக் கொடுக்கும்படி கூறி, தானே ஆரத்தி பாடலைப் பாட ஆரம்பித்தார்.  பாபாவின் உதவி தக்க சமயத்தில் கிடைத்திருகிறதென்று அவர் நினைத்தார்.  உதிக் கலவை உள்ளே சென்றவுடனேயே சுகப் பிரசவம் ஆனது.  கண்டம் கடந்து விட்டது என்று எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

ராம்கீர்புவா நானாவிடம், குதிரை வண்டி, பணியாள், சிற்றுண்டி முதலியவைகளுக்காக நன்றி செலுத்திய போது நானா ஆச்சரியப்பட்டுப் போனார்.  ஏனென்றால்  ராம்கீர்புவா வரும் சேதியே அவருக்குத் தெரியாது. இருவரும் பாபாவின் சர்வ வியாபகத்தன்மையையும், பக்தர்களின் குடும்பத்தின் மீது அவருக்கு இருக்கும் அக்கறையையும் நினைத்து நினைத்து பக்தியோடு அவரை மனதில் நினைத்துப் பணிந்தனர். 

நானா சாஹேப் சந்தோர்க்கர் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சி 'ஜாம்நேர் அற்புதம்' என்று வர்ணித்து சத்சரித்திரத்தில் இந்த நிகழ்ச்சி விவரிக்கப்பட்டிருக்கிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com