ஆலம்பூர் ஜோகுலாம்பா சக்தி பீடமும், நவ பிரம்மா கோவில்களும்!

ஜோகுலாம்பா சக்தி பீடம்
ஜோகுலாம்பா சக்தி பீடம்

லம்பூர் தெலுங்கானா மாநிலத்தில் ஜோகுலம்பாள் மாவட்டத்தில் அமைந்துள்ளது. துங்கபத்திரை கிருஷ்ணா ஆறுகள் சந்திக்கும் இடமான இந்த இடம் தட்சிண காசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலம்பூர் நல்லமலா மலைகளால் சூழப்பட்டுள்ளது.

ஆலம்பூரில் உள்ள நவபிரம்ம கோவில், ஜோகுலம்பா கோவில், பாபநாசி கோயில்கள், சங்கமேஸ்வரர் கோயில் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கிபி ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டில கட்டப்பட்ட கோவில்கள் இவை.

பாதாமி சாளுக்கியர்களால் கட்டப்பட்ட கோவில் இது.

ஜோகுலம்பா கோவில் 18 சக்தி பீடங்களில் 5வது சக்தி பீடமாகும். இது மிகவும் பிரபலமான சக்தி தலங்களில் ஒன்றாகும். இந்த சக்தி பீடம் யோகாவில் சித்தி தெய்வமாக கருதப்படுகிறது.

ஜோகுலாம்பாள் கோவில்: தாட்சாயணியின் மேல் பற்கள் விழுந்த இடமாக கூறப்படுகிறது. தாட்சாயினி தேவியின் சடலத்தை சிவபெருமான் சுமந்து கொண்டு ஆரியவர்த்தம் முழுவதும் அலைந்தபோது இந்த இடங்களில் உடல் உறுப்புகள் விழுந்ததாக கூறப்படுகிறது.

இங்கு ஈசனின் பெயர் பால பிரம்மேஸ்வரா. கோவிலில் உள்ள ஜோகுலாம்பா தேவி தலையில் தேள், தவளை, மற்றும் பல்லியுடன் நாக்கை நீட்டிபடி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.

கோவில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது.

ஹைதராபாத்திலிருந்து 220 கிலோமீட்டர் தூரத்திலும், கர்னூலில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. 

ஜோகுலாம்பா தேவி ...
ஜோகுலாம்பா தேவி ...

இவளை வழிபடுவதால் வாஸ்து தோஷங்கள் நீங்கும். திருஷ்டி தோஷங்கள் விலகும். உடல் நலக்குறைவிலிருந்து விடுபடலாம்.

கோவில் காலை ஏழு மணி முதல் ஒரு மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் காலை 9.30 மணிக்கு சண்டி ஹோமம் செய்யப்படுகிறது. அச்சமயத்தில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படுகிறது. 

ஜோகுலாம்பா கோவில் நவபிரம்மா கோவில்களின் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளது.

நவபிரம்மா கோவில்கள்:

கிபி 8 நூற்றாண்டின் துவக்கத்தில் கட்டப்பட்ட இக்கோவில் 14ம் நூற்றாண்டில் தில்லி சுல்தானகம் ஆட்சியின்போது சிதைக்கப்பட்டது. 1980 ஆண்டிற்கு பின் இக்கோயில்களின் சிதிலங்கள் இந்திய தொல்லியல் துறையால் சீரமைக்கப்பட்டது.

நவ பிரம்மா கோயில்கள்...
நவ பிரம்மா கோயில்கள்...

சிவபெருமானுக்காக நவ பிரம்மா எனப்படும் ஒன்பது கோயில்கள் உள்ளன. அவை சொர்க்க பிரம்மா, பத்ம பிரம்மா, விஸ்வ பிரம்மா, அர்கா பிரம்மா, பால பிரம்மா, கருட பிரம்மா, தாரக பிரம்மா, குமார பிரம்மா, வீர பிரம்மா ஆகிய ஒன்பது கோயில்கள் இங்குள்ளன.

இத்தலத்தில் பிரம்மதேவன் பல ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்து அதன் பலனாக அவருக்கு சிவபெருமான் உயிர்களைப் படைக்கும் திறனை அளித்தார் என்பது தல வரலாறு. இதனால் இங்குள்ள ஈசனுக்கு "பால பிரம்மேஸ்வரர்" என பெயர் ஏற்பட்டது.

சக்தி பீடங்களில் ஒன்றாகவும், 9 சிவன் கோயில்கள் ஒன்றாக அமைந்த நவ பிரம்மா கோவிலாகவும், தட்சிண காசி எனவும் அழைக்கப்படும் இக்கோவிலை சமயம் கிடைக்கும்போது வணங்கி வரலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com