காரைக்கால் அருகேயுள்ள திருப்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
இக்கோயிலில் பேழையில் வைக்கப்பட்டுள்ள அம்மனை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியில் எடுத்து பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டு விமரிசையாக 2 நாட்கள் விழா நடத்தப் படுகிறது. இந்நிலையில், ஆயிரம்காளியம்மன் கோயில் திருவிழா இன்று அதிகாலை கோலகலமாக துவங்கியது.
அதையடுத்து அருகிலுள்ள ராஜசோளீஸ்வரர் கோயிலிலிருந்து பக்தர்கள் ஆயிரங்காளியம்மனுக்கு சீர்வரிசை எடுத்துச் சென்றனர். ஆயிரங்காளியம்மனுக்கு படைக்கும் ஒவ்வொரு வகையும் 1000 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டியது ஐதீகம் என்பதால் பக்தர்கள் பழங்கள், இனிப்பு உள்ளிட்ட அனைத்து வகைகளையும் 1000 என்ற எண்ணிக்கையில் சீர்வரிசை எடுத்து வந்தனர்.
இதையடுத்து இன்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு, சீர்வரிசை படைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இன்றும், நாளையும் மட்டுமே கொண்டாடப்படும் இத்திருவிழாவில், அம்மனை தரிசிக்க புதுவை, காரைக்கால், நாகை, மற்றும் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.
பிற மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த விழாவையொட்டி புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது.மேலும் பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.