
காளிகாம்பாள், ஆதியில் பிரதிஷ்டையாகி அருள் புரிந்த இடம், தற்சமயம் அரசு அலுவலகங்கள் அமைந்திருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்றும், ‘மதராஸ் குப்பம்’ என்றும் வழங்கப்பட்ட பகுதிதான் என்று வரலாறு கூறுகிறது.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கிழக்கிந்திய கம்பெனியார், தற்போதைய சென்னைப் பகுதியில் மூன்று குப்பங்களை விலைக்கு வாங்கித் தங்கள் வியாபாரத்தைத் துவக்கினர். தமக்காக ஒரு கோட்டையை நிர்மாணித்துக் கொண்டு, அதைச் சுற்றியுள்ள வெளிப்பகுதியை சென்னைக்குப்பம் என்றும், கூப்பர் பட்டினம் என்றும் அழைத்தார்கள். பேரி செட்டியர்கள், முதலிமார்கள், விஸ்வகர்மாக்கள், மீனவர்கள் ஆகியோர் அந்தப் பகுதியில் வாணிபம், கைத்தொழில், விவசாயம் என்று தொழில் புரிந்து கொண்டிருந்தனர். கூடவே, தங்கள் இன வழிபாட்டிற்கேற்பத் தனித்தனியே ஆலயங்களை அமைத்துக் கொண்டார்கள்.
அவ்வகையில் விஸ்வகர்மா சமூகத்தினர் அமைத்துக் கொண்ட ஆலயம்தான் காளிகாம்பாள் - கமடேஸ்வரர் திருக்கோவில். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி புரிய ஆரம்பித்தபோது இந்த சென்னைப் பகுதி ஆங்கிலேய ராணுவத்துக்கான பகுதியாகி விட்டதால், கோட்டைக்குள் அமைந்திருந்த ஆலயத்தில் வழிபாடு செய்வது தடைபட்டது. தங்களிடம் பணியாற்றிய சுதேசிகள் இதனால் மனவருத்தம் அடைந்தது கண்டு ஆங்கிலேய அதிகாரிகள் மாகாளியை அவர்கள் எங்கு வைத்து வழிபட விரும்புகிறார்களோ அங்கே மீண்டும் பிரதிஷ்டை செய்து கொள்ளலாம் என்றும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தாங்களே செய்து தருவதாகவும் தெரிவித்தார்கள்.
அதுவரை கோட்டைக்குள் கொலுவிருந்த அம்பிகையை, தற்போதைய தம்பு செட்டித் தெருவில் ஒரு கோவில் அமைத்து அங்கே குடியேற்றினார்கள். இந்த அம்மனை ‘கோட்டையம்மா’ என்றும், செந்தூரம் பூசி வழிபட்டதால் ‘சென்னம்மன்’ என்றும் மக்கள் போற்றித் துதித்தனர்.
மகாராஷ்டிர மாமன்னன் சத்ரபதி சிவாஜி, ஆங்கிலேயரையும், முகமதியரையும் எதிர்க்கப் போர்க்கோலம் பூண்டு, தென்னிந்திய விஜயம் செய்தார். 1677ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3ம் தேதி அன்று சென்னைக்கு வந்து இக்கோயிலில் உள்ள காளியம்மனை வழிபட்டுச் சென்றார் என்று அரசாங்க வரலாற்று ஏடுகளில் (கிழக்கிந்திய வாணிபக் குழுவின் குறிப்புகள், ஆசிரியர் எச்.டி.லவ் இயற்றிய சென்னை நகர வரலாறு பக்கம் 371, 357, பாகம் ஒன்றில்; மற்றும் பாகம் மூன்றில் பக்கம் 309) காணக் கிடைக்கிறது.
மகாகவி பாரதியார், தம்பு செட்டித் தெருவில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றியபோது, இக்கோயிலுக்கு வந்து, அம்மனிடம் கொண்ட பக்தி, ஈடுபாடு காரணமாக சந்நிதி முன் நின்று மெய்மறந்து பாடல்களைப் பாடுவார் என்றும் சொல்வார்கள்.
இத்தலத்தில் அம்பாளின் பாதத்தில் ஸ்ரீசக்கரம் (அர்த்தமேரு) பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீசக்கர மந்திர அதிபதியாய் விளங்குகின்றாள் அன்னை. மகாலட்சுமியையும் சரஸ்வதியையும் இரு கண்களாய்த் தன்னருகே அமையப் பெற்ற அம்பாள் மேற்கு நோக்கி எழுந்தருளியிருப்பது இவ்வாலயத்தின் தனிப்பெரும் அம்சமாகும். அம்பாளுடன் கமடேஸ்வரர், அருணாசலேஸ்வரர், நடராஜர், விநாயகர், சுப்பிரமணியர், சகோதர வீரபத்ரர், ஆறுமுகர், நாகேந்திரன் ஆகியோர் பிரகாரங்களில் தனித்தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாலயத்தில் துர்க்காதேவிக்கு வெள்ளி, செவ்வாய், ஞாயிறு, தினங்களில் ராகு கால நேரத்தில் திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் எலுமிச்சம்பழ விளக்கேற்றி வழிபட்டுத் தாங்கள் கோரிய பலனடைந்து வருவது கண்கூடு.
இதுபோன்று, அகோர வீரபத்ரர் சந்நதியில் செவ்வாய் கிழமையிலும், குறிப்பாக பௌர்ணமி அன்றும் வெற்றிலை மாலை சாத்தி, வழிபாடு செய்து இஷ்ட காரிய சித்தி பெற்று வருகிறார்கள். படைப்புக் கடவுளாகிய விஸ்வகர்ம பரப்பிரம்மத்தை வழிபட, அவரது வழித்தோன்றலாகிய விஸ்வகர்ம பெருமக்கள் ஒரு சந்நதியை அமைத்திருப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும். நடராஜர் சன்னதியில் பிரிங்கி மகரிஷி எலும்பும் தோலுமாய் மூன்று கால்களுடன் எழுந்தருளியுள்ளார். தீர்த்தத்திற்குரிய பரிவார தேவதை, கடற்கண்ணி என்பவளாவாள். ஸ்தல தீர்த்தம், கடல்; ஸ்தல விருட்சம், மாமரம்.
தன்னைச் சரணடைந்தோர்க்கும், பூஜிப்போர்க்கும் மனத்தால் நினைப்போர்க்கும் வேண்டுவனவெல்லாம் அளித்து அவர்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் கண்கண்ட தெய்வம் காளிகாம்பாள். பக்தர்களின் கவலைகள் எல்லாவற்றையும் களையும் பேராற்றல் கொண்டவள். பக்தர்கள் குறைகள் நீங்க அம்பாளிடம் சரணடைந்து அவளைத் துதித்து எலுமிச்சம்பழம் பெற்றுச் செல்கின்றனர்.