காமதேனு அருளும் கோவத்ஸ துவாதசி!

கோ பூஜை
கோ பூஜை
Published on

‘கோ’ என்றால் பசு. ‘வத்ஸ’ எனும் வார்த்தைக்கு அன்புக்குரிய என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது, பசுவை அதன் கன்றோடு அன்புடன் கொண்டாடுதலே, ‘கோவத்ஸ’ எனும் சொல்லுக்கு அர்த்தம். ‘பசுக்களில் நான் காமதேனு’ என்கிறான் கீதையில் பகவான். அந்தப் பசுவை கன்றுடன் பூஜித்து, பகவானின் அனுக்ரகத்தைப் பெற வேண்டிய தினம்தான் கோவத்ஸ துவாதசி. அதாவது, ஐப்பசி மாத கிருஷ்ணபட்சத்தில் (தேய்பிறையில்) வரும் துவாதசிக்கு கோவத்ஸ துவாதசி என்று பெயர்.

இன்று பசு, கன்று இரண்டையும் நன்றாகக் குளிப்பாட்ட வேண்டும். பிறகு அவற்றுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூ வைத்து அலங்கரிக்க வேண்டும். பிறகு, பசுவுக்கு தீவனம் வைக்க வேண்டும். அகத்திக்கீரையும் கொடுக்கலாம். அதாவது, போதுமான அளவுக்கு தீனியை வைக்க வேண்டும். அதேபோல, இன்று ஒரு நாள் மட்டுமாவது கன்றுக்குட்டியைக் கட்டாமல் தாயிடம் நன்றாகப் பாலருந்த விட வேண்டும். எப்போதும் போல கொஞ்சம் பாலருந்தியவுடன் பிடித்துக் கட்டுவது போல செய்யக் கூடாது என்பது முக்கியம். மேலும், இன்று பசுவிடமிருந்து பால் கறக்கவும் கூடாது. தவிர, இந்த நாளில் நாம் பசுவிடமிருந்து கிடைக்கும் பொருட்களான பால், தயிர், மோர், நெய், வெண்ணெய் உள்ளிட்ட எந்தப் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது. இது தவிர, பசுவுக்கு இதமாகத் தடவிக் கொடுக்கலாம்.

கோமாதா
கோமாதா

ராமாயணத்துக்கு முன்கதையே இந்த கோ பரிபாலனத்தோடு தொடர்பு கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது. ஸ்ரீ ராமனின் முன்னோர்களில் ஒருவன் திலீபன். மிகச் சிறந்த புகழும், அறமும் கொண்ட அரசனான அவனுக்கு குழந்தைப் பேறு இல்லை. அதனால் வருந்திய அவனிடம், ‘தம் ஆசிரமத்தில் இருந்த பசுவின் கன்றான நந்தினியை பராமரித்தால் புத்திர பாக்கியம் ஏற்படும்’ என்றார் முனிவர். அதன்படி தினமும் அதை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று பாதுகாத்து வந்தான் திலீபன். இந்த சூழலில்தான் ஒரு சமயம் காமதேனுவின் கன்றான நந்தினியை காப்பாற்ற முனைந்தான்.

ஒரு நாள் அது தன்னுடைய உடலை மரம் ஒன்றில் உரசி தினவைத் தீர்த்துக்கொள்ள முயன்றது. அப்போது அங்கு ஒரு சிங்கம் தோன்றி, “இந்த மரம் ஒரு யக்ஷனுக்குச் சொந்தம். நான் இதைக் காவல் செய்பவன். யார் இந்த மரத்தைத் தொட்டாலும், அவர்கள் எனக்கு உணவாக வேண்டும். இது யக்ஷன் எனக்களித்த வரம்” என்றது. அந்த நிலையில் காமதேனுவின் கன்றைக் காக்க தன்னுடைய உயிரைத் தியாகம் செய்ய முனைந்தான் திலீபன். “மக்களைக் காக்க வேண்டிய நீ, ஒரு பசுவுக்காக உயிரை இழப்பதா…” என்றெல்லாம் பேசியது சிங்கம். ஆனாலும், திலீபன் மனம் மாறவில்லை. ‘ஒப்புக்கொண்ட பணியை நிறைவேற்றுவதில் உயிரே போனாலும் அந்தப் பணியை நிறைவேற்றுவதே தர்மம்’ என்று தன்னுயிரை இழக்கவும் தயாரானான். அந்தத் தியாகத்தின் விளைவாகவே, ரகு என்கிற மிகச் சிறந்த வீரனை மகனாக அடைந்தான் என்று விவரிக்கிறது ரகு வம்ச காவியம்.

வேண்டுதல்
வேண்டுதல்

க, பசுவுக்குச் செய்யும் எந்தவிதமான சேவையும் பெரும் புண்ணியத்தைத் தரவல்லது. பசுவுக்குப் புல், அகத்திக்கீரை இவற்றைத் தரும்போது கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லலாம்.

‘ஸுரபி த்வம் ஜகன்மாதர்
தேவி விஷ்ணுபதே ஸ்திதா
ஸர்வ தேவ மயே க்ராஸம்
மயா தத்தம் இமம் க்ரஸ’

இப்படிப் பசுவையும் கன்றையும் ஆராதித்து திருப்திப்படுத்த வேண்டும், பிறகு பிரார்த்தனையாக,

‘ஸர்வதேவ மயே தேவி ஸர்வ தேவைஸ்ச ஸத்க்ருதா
மாதர் மமா அபிலஷிதம் ஸபலம் குரு நந்தினி’

எனும் ஸ்லோகத்தைச் சொல்லலாம்.

இதன் பொருள்: ‘சகல தெய்வங்களின் வடிவானவளே, என்னுடைய அபிலாஷைகளை (விருப்பங்களை) கைகூடச் செய்’ என்பதாகும். இந்த வழிபாட்டுக்குக் பிறகு இன்று பிரம்மச்சரியம் இருந்து பாய், தலையணை, மெத்தை போன்றவற்றைப் பயன்படுத்தாமல் தரையில் உறங்கி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் அழியாச் செல்வமும், மங்கலமும் உண்டாகும். தவிர, கோலோகமும் கிடைக்கும் என்பது தாத்பர்யம். கோலோகம் என்பது ஸ்ரீ கிருஷ்ணனின் வாசஸ்தலம் என்பது சொல்லாமலே புரிந்திருக்கும். அவனே கோவத்ஸலன்தானே!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com