கார்த்திகையில் கண் திறக்கும் கடிகாசலன்!

கார்த்திகையில் கண் திறக்கும் கடிகாசலன்!
Picasa

வேலூர் மாவட்டம், சோளிங்கரில் அமைந்துள்ளது ஸ்ரீ யோக நரசிம்மர் திருத்தலம். சப்த ரிஷிகளும் தவம் செய்து அருள் பெற்ற பெருமைக்குரிய பதி. இந்தக் கோயிலில் ஒரு நாழிகை நேரம் மட்டும் தங்கியிருந்தாலே முக்தி பெறலாம் என்பது ஐதீகம். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலத்தில் இரண்டு மலைகள் உள்ளன. பெரிய மலை மீது நரசிம்ம சுவாமி யோக நிலையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். தாயார் ஸ்ரீ அம்ருதவல்லி. 750 அடி உயரமுள்ள இம்மலைக்கு, 1305 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். கருவறை பெருமான் பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம் விளங்க, முன் கரங்களில் சிம்மகர்ண முத்திரையோடு அருள்பாலிக்கிறார். இவருக்கு நேர் எதிரே 350 அடி உயரமுள்ள சிறிய மலையில் யோக ஆஞ்சனேயர், நரசிம்ம பெருமானை நோக்கியபடி காட்சி தருகிறார். இவரும் நான்கு கரங்களுடன் சதுர்புஜ ஆஞ்சனேயராக விளங்குகின்றார்.

அருளை வாரி வழங்குவதில் மிகவும் வரப்ரசாதியாக விளங்கும் இத்தலத்தை முற்காலத்தில், ‘கடிகை’ என்றும், இறைவனை, ‘கடிகாசலன்’ என்றும் பக்தர்கள் போற்றி வழிபட்டனர். இது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரிய தலமாகும். ஆழ்வார்கள் இத்தல பெருமானை, ‘அக்காரக்கனி’ என்றும் அழைக்கிறார்கள். இந்தக் கோயிலில் பதினோரு மாதங்கள் யோக நிலையில் காட்சி தரும் நரசிம்ம பெருமான், கார்த்திகை மாதத்தில் மட்டும் தமது திருவிழிகளைத் திறந்து பக்தர்களுக்கு அருள் காட்சி தருவதாக ஐதீகம். அதிலும் குறிப்பாக, கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த யோக நரசிம்மப் பெருமானை தரிசிப்பது மிகவும் விசேஷமாகும்.

கார்த்திகை மாதம் நரசிம்ம பெருமான் கண் திறந்து பார்ப்பதால் அவரை தரிசனம் செய்ய, எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் இந்தக் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இதனால் இம்மாதம் மாதம் முழுவதும் இந்தக் கோயில், லட்சக் கணக்கான பக்தர்களின் தரிசனத்தால் நிரம்பி வழியும். ஸ்ரீ யோக நரசிம்ம பெருமான் அருள்பாலிக்கும் பெரிய மலைக் கோயிலில் ஒரு நேரத்தில் சில நூறு பக்தர்கள் மட்டுமே வழிபட முடியும் என்பதால், பக்தர்களின் வரிசை மலைப்படிக்கட்டுகள் வரை நீண்டு நிற்கும். நாளை கார்த்திகை மாதம் முதல் நாள். பூமி குளிர்ந்திருக்கும் இந்த மாதத்தில், அக்காரக்கனியாம் ஸ்ரீ யோக நரசிம்மரை,

‘மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்

புக்கானைப் புகழ்சேர்ப் பொலிகின்ற பொன்மலையைத்

தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த

அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே’

என்று திருமங்கை ஆழ்வார் போற்றிப் பாடியபடி, நாமும் பாடி இறைவனை வணங்கி அருள் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com