புண்ணிய க்ஷேத்திரம் என்று கொண்டாடப்படும் காசி மாநகரம் பல ஆன்மிகப் பெரியோர்களை அளித்திருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் கபீர்தாஸர்.
அங்கே நெசவுத் தொழில் புரிந்து கொண்டிருந்தார் தமால் என்ற முகமதியர். அவருடைய மனைவி, ஜிஜ்ஜா பீவி. அவர்கள் மரபுப்படி இறைவழிபாடு மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் என்று வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால் தங்களுக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அவர்களைப் பெரிதும் வருத்திற்று.
ஒருசமயம், தன் நெசவுக்குத் தேவையான பட்டு நூல்களை கங்கை ஆற்றில் அலசிக் கொண்டிருந்தார் தமால். அப்போது ஒரு நூலிழை பிரிந்து நீரோட்டத்துடன் போயிற்று. உடனே அதனைக் கைப்பற்றும் நோக்கத்தில் அதன் பின்னாலேயே நீந்திச் சென்றார் தமால். மரங்கள் அடர்ந்திருந்த கரையோரமாக அந்த நூல் ஒதுங்கியது. அதை சேகரித்துக் கொள்வதற்காக கரை ஏறிய அவர் பச்சிளங் குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டார். விரைந்து சென்று பார்க்க, அந்தணப் பெண் ஒருத்தி அந்தக் குழந்தையை அங்கே விட்டுவிட்டுச் செல்ல முனைவதைக் கண்டார். அவளிடம் விவரம் கேட்டபோது, விதவையான தனக்கு அந்தக் குழந்தையை வளர்க்க வழி தெரியவில்லை என்று பரிதாபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக அகன்றாள்.
அந்த ஆண் குழந்தையைப் பார்த்த தமால், இறைவன் தனக்காகவே இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்திருப்பதாக எண்ணி மகிழ்ந்தார். உடனே அந்தக் குழந்தையை அள்ளி எடுத்துக் கொண்டு மனைவியிடம் தர, அவளும் பேருவகை கொண்டாள். குழந்தைக்கு ‘மேன்மையானவன்‘ என்ற பொருள் கொண்ட ‘கபீர்‘ என்று பெயரிட்டார்.
வளர்ப்புப் பெற்றோரைப் போலவே தானும் நெசவுத் தொழிலில் ஆர்வம் காட்டினான் கபீர். ஒருநாள் அந்தணப் பெரியவர் ஒருவரை கபீர் சந்திக்க நேரிட்டது. அவர் குரு ஒருவர் மூலமாக உபதேசம் பெற்று, ராம நாமத்தை உச்சரித்தால் மேன்மை ஏற்படும் என்று விவரம் சொன்னார்.
அதைக் கேட்ட கபீர், காசியிலேயே வசித்து வந்த ராமானந்தர் என்ற துறவியையே தன் குருவாக வரித்துக் கொண்டான். அவரிடம் உபதேசம் பெற ஆவல் கொண்டான். ஆனால் அவன் வேற்று மதத்தவன் என்ற காரணத்தால் துறவியின் சீடர்கள் அவனை விரட்டினார்கள். ஆனால் எப்படியாவது குருவிடமிருந்து உபதேசம் பெற்றே தீருவது என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டான் கபீர். ஓர் உத்தியைக் கையாண்டான்.
அதிகாலையில் இருள் விலகு முன்னரே கங்கையில் நீராடும் வழக்கத்தை ராமானந்தர் கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டான். ஆகவே படித்துறையில் ஒரு படியில் படுத்துக் கொண்டான். படிகளில் இறங்கிய ராமானந்தர் தன் கால்களை எதுவோ இடறுவதை அறிந்து திகைத்தார். அவ்வாறு மிதிபடுவது ஒரு சிறுவன் என்றறிந்து அதிர்ச்சியுற்றார். உடனே, ‘ராம,‘ என்று சொல்லி அறியாமல் செய்த தன் தவறுக்கு ஸ்ரீராமனிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
நீராடித் திரும்பியவர் அந்தச் சிறுவன் ‘ராம‘ மந்திரத்தை இடைவிடாது உச்சரித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். உடனே மனமுவந்து அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார். தன் ஞானத்தால் அவனுடைய பூர்வ ஜன்ம புண்ணிய பலன் அது என்றும் தெரிந்து கொண்டார்.
கபீருடைய இதயத் தடாகத்தில் ஞானத் தாமரை பூத்தது. விளைவாக பல அபூர்வ கவிதைகள் பிரவாகம் எடுத்தன. அவருடைய போதனைகள் எல்லோரையும் ஈர்த்தன. ராமன் என்று வந்துவிட்ட பிறகு, சாதி என்ன, மதம் என்ன? எல்லோரும் கபீரின் உபதேசங்களை விரும்பிக் கேட்க ஆரம்பித்தார்கள். மனிதப் பண்பு, கருணை, தர்மத்தால் மன நிம்மதி என்று வாழ்க்கைத் தத்துவங்களை எளிமையான சொற்களில் விளக்கும் வகையில், நூற்றுக் கணக்கில் காகுத்தனான ராமனைத் துதித்துக் கவிதைகள் இயற்றினார் கபீர்தாஸர். காசி முழுவதும் நூற்றுக் கணக்கில் பக்தர்கள் அவருடைய பாடல்களைப் பாடி மகிழ்ந்தார்கள்.
கபீர்தாஸரின் மரணமும் தெய்வாம்சமாகத்தான் இருந்தது. கி.பி. 1518ம் ஆண்டு அவர் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டபோது, ஹிந்துக்கள் அவருடைய உடலை தகனம் செய்ய வேண்டும் என்று சொல்ல, இஸ்லாமியரோ அடக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அவருடைய உடலை மூடியிருந்த துணியை நீக்கியபோது அங்கே மணமிக்க மலர்கள் மட்டுமே காட்சி தந்தன!
ஹிந்து – இஸ்லாமிய இணக்கத்துக்கு ஞானப் பாலமாக விளங்கிய முதல் ஞானி மற்றும், கவிஞர், கபீர் ஒருவரே. உலகெங்கும் இவர் தோற்றுவித்த சர்வமத சமரச சன்மார்க்கத்தைப் பின்பற்றி வாழும் அன்பர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.