

பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் எல்லா தடைகளையும் நீக்கவென்றே கேரளாவில் ஒரு பகவதி (Kadampuzha Bhagavathy Temple) கோவில் உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் காடம்புழா என்னும் இடத்தில் உள்ளது இந்த பகவதி கோவில். இந்த இடத்தின் விசேஷம் என்னவென்றால் பக்தர்களின் வாழ்வில் வரும் தடைகளை நீக்கி வாழ்வில் வளம் பெருகக் செய்யும் ‘முட்டறுக்கல் வழிபாடு’ என்னும் சிறப்பான வழிபாடு தான். இந்தக் கோவிலே ‘முட்டு நீக்கும் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு பக்தர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் தேக முட்டு, கிரக முட்டு, மாங்கல்ய முட்டு போன்ற பல்வேறு தடைகளை நீக்க ‘முட்டறுக்கல் ’ என்னும் பரிகாரத்தை செய்கிறார்கள்.
இந்த முட்டறுக்கல் வழிபாட்டுக்கு பக்தர்கள் தேங்காய் வாங்கி அர்ச்சகரிடம் கொடுக்கின்றனர். அவர் அவர்களுடைய வேண்டுதலை, அதாவது எந்த விதமான தடை, கஷ்டம், இடையூறு நீங்குவதற்காக அவர்கள் அந்த வழிபாடு செய்கிறார்கள் என்று கேட்டறிந்து, அதை அம்மன் முன்பாக அவர்கள் சார்பில் தெரிவித்து அந்த முட்டு அல்லது தடை உடைபட வேண்டிக் கொண்டு அந்த தேங்காயை உடைக்கிறார். அந்த தேங்காய் உடைபட்ட உடன் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட தடை நீங்கி விடுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
இந்தக் கோவிலில் சராசரி ஒரு நாளைக்கு ஏழாயிரம் முதல் எட்டாயிரம் வரை ‘முட்டறுக்கும் வழிபாடு’ செய்யப்படுகிறது.
ஆடி மற்றும் தை மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் முட்டறுக்கல் வழிபாடுகள் கூட நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
இதனால் காடம்புழா பகவதி அம்மன் தடைகளை நீக்கி அருளும் தேவியாக போற்றப்படுகிறாள்.
இந்தக் கோவிலுக்கு ஒரு தல புராணம் உள்ளது. பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக சிவனை நோக்கி இந்த இடத்தில் தவமிருந்தான். சிவபெருமான் வேடுவனாகவும், பார்வதி வேடுவப்பெண்ணாகவும் உருவெடுத்து அங்கே வந்தனர். அர்ஜுனனின் தவத்தை கலைப்பதற்காக துரியோதனனால் அனுப்பப்பட்ட முகாசுரன் பன்றி உருவத்தில் அங்கே வந்தான். வேடுவனாக வந்த சிவன் அந்த பன்றியை நோக்கி அம்பு எய்தார். தவத்தில் இருந்த அர்ஜுனனுக்கும் பன்றி வருவது தெரிய அவனும் அந்த பன்றியை நோக்கி அம்பு எய்தான். இருவர் அம்புகளும் அந்த பன்றி உடம்பில் குத்தியிருக்க, யார் அந்த பன்றியை கொன்றது என்னும் கேள்வி எழ, அர்ஜுனன் தான் தான் என்னும் கர்வத்துடன் சிவனுடன் வாதாடி சிவன் மேல் அம்பு தொடுத்தான்.
பார்வதி அந்த அம்புகளை மலர்களாக மாற்றி சிவன் மேல் விழ செய்தாள். உடனே தன் எதிரே நிற்பது சிவனும் பார்வதியும் என்று புரிய, அர்ஜுனன் சிவனின் காலடிகளில் விழுந்து தன்னை மன்னிக்க வேண்டினான். சிவன் அவனை மன்னித்து, அவனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கினார். இந்த நிகழ்வு நடந்த இடத்தை மலையாளத்தில் காடன் (வேடன்) அம்பு எய்த அழை (துளை) என்றழைத்தனர். பின்னர் அந்த பெயர் மருவி காடம்புழா என்று மாறி விட்டது.
இந்தக் கோவிலில் நான்கு அடி நீளமும், மூன்று அடி அகலமும் கொண்ட கருங்கல்லாலான கருவறையை உருவாக்கியுள்ளனர். இக்கல்லின் நடுவில் ஐந்து அங்குல சுற்றளவு கொண்ட துளை இருக்கிறது. அந்தத் துளையில் பகவதி இருந்து ‘முட்டறுக்கு ‘ பரிகாரம் செய்ய வரும் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்.