'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

ஒத்தாண்டேஸ்வரர்
ஒத்தாண்டேஸ்வரர்
Published on

சென்னை, பூவிருந்தவல்லி திருவள்ளூர் நெடுஞ்சாலையில் திருமழிசை தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில். ஒத்த+ஆண்டு +ஈஸ்வரர் 'ஒத்தாண்டேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.

கை தந்தபிரான் பெயர்க்காரணம்: ஒரு சமயம் கரிகால் பெருவளத்தான் பக்கத்தில் இருக்கும் சிவனை தரிசிப்பதற்காக சென்றபொழுது அவன் சென்ற யானையின் கால் ஒரு கொடிக்குள்  சிக்கிக் கொண்டு விட்டது. அந்த காலை எடுப்பதற்காக கையை விட்டபொழுது எடுக்க முடியவில்லை. ஆதலால் அந்த  யானையின் காலை எடுப்பதற்காக கொடியை வெட்டியபொழுது, கீழிருந்து இரத்தம் பீறிட்டது. அப்பொழுதுதான் லிங்கம் ஒன்று அடியில் இருப்பது தெரிய வந்தது. இதைக் கண்டு பதறிப்போன கரிகால் சோழன் தான் செய்த பாவத்திற்காக வலது கையை வெட்டி வீசினான். இதைக் கண்டு மெச்சிய சிவபெருமான் அம்பிகையுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து இழந்த கையை உடலில் சேர்த்தார் என்பது புராண வரலாறு. இப்படி சோழ மன்னனுக்கு வெட்டிக்கொண்ட கையை மீண்டும் அளித்ததால், 'கை தந்த பிரான்' என இத்தல ஈசன் அழைக்கப்படுகிறார்.

குளிர்ந்த நாயகி: அம்பிகையை குளிர்வித்த நாயகி என்று அழைக்கிறார்கள். மன்னனுக்கு ஆறுதல் மொழி சொல்லியும், சிவனுக்கு அவரின் அடியார்களின் கதைகளை சொல்லியும், அன்பர் மனம் குளிர அருள்வதால் 'குளிர்ந்த நாயகி' என்றும், அவர்களின் மனதை குளிர்வித்தபடியால் அம்பிகையை குளிர்வித்த நாயகி என்றும் அழைக்கிறார்கள்.

பெயர் காரணம்: அகத்திய முனிவர் அழிஞ்சல் மரத்தின் கீழ் தம் சீடரான புலத்தியருடன் வழிபட்ட தலம். அழிஞ்சல் தலம் என்பது, 'அழிசை' என்றாகி திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருமழிசை என வழங்கப்பட்டது. இங்கு இருக்கும் இறைவன் அன்பர்களின் செயலுக்கு ஒத்து அவர்கள் வழியே சென்று அவர்களை ஆண்டு அருள் செய்வதால் ஒத்தாண்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

ஒத்தாண்டேஸ்வரர் கோயில்
ஒத்தாண்டேஸ்வரர் கோயில்

தல அமைப்பு: அழிஞ்சல் மரம், வில்வமரம், பவளமல்லி ஆகியவை தல விருட்சங்களாக உள்ளன. சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகக் கருதப்படும் இக்கோயிலில் கிழக்கு நோக்கியபடி ஒத்தாண்டீஸ்வரரும், தெற்கு நோக்கியபடி குளிர்ந்த நாயகி சன்னிதி தவிர, சோமாஸ்கந்தர், விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, நடராஜர், ரிஷப நாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னிதிகள் உள்ளன. தீர்த்தம் 'அகத்திய தீர்த்தம்' எனவும் வழங்கப்படுகிறது. இது கோயிலுக்கு கிழக்கே உள்ளது.

தனிச்சிறப்பு: இக்கோயிலின் சிறப்பு என்று கூறினால் நடராஜர் அம்பிகையை பார்ப்பது போலவும் அம்பிகை நடராஜரை பார்ப்பது போலவும் உள்ளதுதான்.

விமான அமைப்பு: இத்தாலத்தின் விமானம் கஜ பிருஷ்ட அமைப்பில் உள்ளது. தூங்கானை மாட வடிவில் அமைந்துள்ள மூலவரின் கருவறை, விமானம் தவிர நடராஜர் சன்னிதி மீது சபாஹார விமானம், அம்பிகையின் சன்னிதி மீது சாலகார விமானம், காட்சி தந்த நாயகர் சன்னிதி மீது நீள் சதுர விமானம், சுப்பிரமணியர் சன்னிதி மீது அமைந்த எண்பட்டை விமானம் ஆகியவை குறிப்பிடத்தக்க விமானங்கள் ஆகும்.

இதையும் படியுங்கள்:
கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!
ஒத்தாண்டேஸ்வரர்

பூஜை முறை: காரண ஆகம முறைப்படி இருகால பூஜை நடைபெறும் இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் தென்திசை நோக்கி அமைந்துள்ளது. காலை 7.30 முதல் 11 மணி வரையும் மாலை 4:30 மணி முதல் 9 மணி வரையும் சுவாமி தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும்.

உப கோயில்கள்: அருள்மிகு வீர ஆஞ்சனேயர் திருக்கோயில், பஜனைக் கோயில், அருளாம்பிகை திருக்கோயில், எல்லை அம்மன் திருக்கோயில் ஆகியவை இக்கோயிலின் உப கோயில்களாகும்.

விசேஷ நாட்கள்: அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், மாதப்பிறப்பு, சுக்கிர வாரம், சங்கடஹர சதுர்த்தி, ஆவணியில் பிட்டு உத்ஸவம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்ரா, தைப்பூசம், மகா சிவராத்திரி ஆகியவற்றுடன் பங்குனி உத்திரத்தை இறுதியாகக் கொண்டு பத்து நாள் பிரமோத்ஸவமும் நடைபெறுகிறது.

பிரார்த்தனை: மன அமைதி பெறவும், செய்த பாவத்திற்கு மன்னிப்பு பெறவும் இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்: வேண்டுதல் நிறைவேறிய உடன் சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள்.

இல்லத்தில் ஒற்றுமை சிறக்க நாமும் ஒரு முறை திருமழிசை சென்று அம்பிகையையும், ஈஸ்வரரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்கும் கோலத்தை கண்டு வணங்கி ஆசி பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com