
இமயமலைச் சாரலில் காலவ முனிவர் தவமியற்றி வசித்து வந்தார். முக்காலமும் அறிந்த ஞானியாகிய இவரிடம், பலரும் வந்து தங்களின் எதிர்காலம் குறித்துக் கேட்பது வழக்கம். கேட்கும் நபரை நேரெதிரே நிறுத்தி அவரை ஒருமுறை தீர்க்கமாய் பார்த்த பிறகு கண்களை மூடிக்கொள்வார். சிறிது நேரத்தில் எதிரில் நிற்பவரின் எதிர்காலம் பற்றிய விபரங்களைக் கடகடவெனக் கூறி விடுவார். அவர் சொல்வது அத்தனையும் பலிக்கும்.
காலவ முனிவரின் புகழ் திக்கெட்டும் பரவியது. அச்சமயம் இளம் சன்னியாசி ஒருவர் வந்து இவரைப் பணிந்து வணங்கி, தனது எதிர்காலம் குறித்த விபரங்களைக் கேட்டார். முனிவரும் கண்களை மூடி தியானிக்கையில் அந்த சன்னியாசியின் எதிர்காலம் முனிவருக்குப் பிடிபடவில்லை. அதிர்ச்சியுற்ற முனிவர், “தாங்கள் யார்?” எனக் கேட்க, “நான் யாரென்பது இருக்கட்டும். உங்களது எதிர்காலம் எப்படியென்று பார்த்திருக்கிறீர்களா?” எனக் கேட்டார் இளம் சன்னியாசி.
முனிவரும் ஞான திருஷ்டியில் அதைப் பார்க்க, தொழு நோய் பிடித்துத் தான் துன்புறுவது போலப் புலப்பட்டது. உடனே இளம் சன்னியாசி மாயமாய் அங்கிருந்து மறைந்து விட்டார். சன்னியாசியாக வந்தவர் யமதர்மராஜன்தான் என்பது முனிவருக்குப் புரிந்தது. உடனே அவர் தொழு நோயிலிருந்து தப்பிக்க நவக்கிரகங்களை நோக்கி கடும் தவம் புரிந்தார். நவக்கிரகங்களும் தொழு நோய் பிடிக்காமலிருக்க முனிவருக்கு வரம் கொடுத்து விட்டனர். ஆனால், இதில் ஒரு பிரச்னை என்னவென்றால், நவக்கிரகங்களுக்கு சுயமாக எவருக்கும் வரம் தரக்கூடிய அந்தஸ்து கிடையாது. தங்களது கடமைகளை மட்டுமே அவர்களால் செய்ய இயலும்.
நவக்கிரகங்களுக்கு அதிபதியான பிரம்ம தேவருக்கு இது தெரிய வர, விசாரனை நடத்தினார். “விதிமுறைகளை மீறிய காரணத்தால் காலவ முனிவருக்கு வரவேண்டிய தொழு நோய் உங்களைப் பிடிக்கும்” என பிரம்மதேவன் நவக்கிரகங்களுக்கு தண்டனை விதித்தார். காலவ முனிவர் தப்பித்து விட்டார்.
ஜனவரி 30 உலக தொழு நோய் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோலையும் நுனி நரம்புகளையும் பாதிப்பதே தொழு நோய். தவிர முடிச்சுக்களும் புள்ளிகளும் ஏற்பட்டு இது பெரிதாகப் பரவும். ‘ஹேன்சென்’ எனப்படும் தொழுநோய், மைக்கோ பேக்டீரியம் மற்றும் லெப்ரேயாவால் ஏற்படும் நீடித்த தொற்று நோயாகும். தோல் வகையைச் சேர்ந்த தொழு நோய் உறுப்புகளின் உருக்குலைவை உண்டாக்கும். ஜோதிட ரீதியாக இந்நோயின் காரக கிரகம், ராஜ கிரகமான சூரியன் எனக் கூறப்படுகிறது.
1873ஆம் ஆண்டு மருத்துவர் கெரார்டு ஆன்சன் என்பவர் இந்நோயைக் கண்டறிந்தார். இந்நோய், ‘ஆன்சன்’ எனவும் அழைக்கப்படுகிறது. தவிர குஷ்டம், குஷ்டரோகம் எனவும் கூறப்படுகிறது. இந்நோயின் அறிகுறிகள் வெளிப்பட, மூன்று முதல் ஐந்து ஆண்டு காலம் ஆகும். பெரும்பாலும் இந்நோய் காற்றின் மூலமூம், நோயுற்றவருடன் நேரடித் தொடர்பில் இருப்பதன் மூலமும்தான் பரவுகின்றன.
இந்நோயை குணப்படுத்த, தொழு நோய்க்கான தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை வழியே இந்நோயை சீர் செய்யலாம்.
திருக்கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில் வழிபாடு இந்நோய்க்குப் பரிகாரமாகக் கூறப்படுகிறது.