ஆன்மிகக் கதை - விளக்கேற்ற விபரீத எண்ணம் கொண்ட கலிய நாயனார்!

Kalia Nayanar
Kalia Nayanarwww.youtube.com
Published on

ட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவர் கலிய நாயனார்.  சென்னையில் உள்ள திருவொற்றியூரில் செக்கார் என்னும் குலத்திலே பிறந்தவர்.  செக்கு தொழிலே இவரது பிரதான தொழிலாகும். நல்ல செல்வந்தராய் இருந்த இவர் சிவனின் மீது ஆழமான பக்தி கொண்டவரானார். அதன் பொருட்டு  திருவொற்றியூர்த் திருக்கோயில் முழுவதும்  ஆயிரக் கணக்கில் விளக்கேற்றும் சிவத் தொண்டினை செய்து வந்தார்.

பக்தனின் பக்தியை சோதிக்க சிவபெருமான் சித்தமானார்.  இவரது செல்வதை கரைக்க தன்னுடைய திருவிளையாடலை அரங்கேற்றினார். நாட்கள் செல்ல செல்ல இவரது செல்வங்கள் யாவும் கரைந்து போனது. எனினும் சிவனுக்கு விளக்கேற்றும் தொண்டினை இவர் விடுவதாக இல்லை. தினமும் கூலிக்கு வேலை செய்து அதன்  மூலம் வரும் வருவாய் கொண்டு திருவிளக்கேற்றி ஆனந்தம் கொண்டார். இப்படியே நாட்கள் கடந்தன, அதன் பிறகு சில காலங்களில் கூலிக்கு வேலை செய்வோர் அதிகரித்ததால் இவரை யாரும் வேலைக்கு அழைக்கவில்லை. அதனால் தன் வீட்டில் இருந்த பண்ட பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு விளக்கேற்றி வந்தார்.

வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீர்ந்து போக என்ன செய்வதென்று தவித்த இவர், தான் தங்கி இருந்த வீட்டை விற்றார், அதன் மூலம் வந்த வருவாயை கொண்டு விளக்கேற்றும் பணியை தொடர்ந்து செய்தார். இதே நிலை தொடர்ந்ததால் தன்னுடைய சொத்துக்கள் யாவையும் விற்றுவிட்டார், இப்போது விற்பதற்கு ஏதும் இல்லை, விளக்கேற்ற எண்ணெய் வாங்கவும் பணம் இல்லை.

இதனால் தவித்து போன அவர்,விபரீதமான எண்ணம் கொண்டார்.  தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு வாணிப சாலையில் அவரை விற்க முனைந்தார். அவரது செயலை எண்ணி அதிர்ந்த உள்ளூர்வாசிகள் யாரும் மனைவியை வாங்க முன்வரவில்லை.  பின்னர் அவர் தனது மனைவியுடன்   தான் விளக்கேற்றும் படம்பக்கநாதர் திருக்கோவிலிற்கு சென்றார்.

அங்கு இறைவனை மனதார வணங்கிவிட்டு, இறைவா நான் உனக்காக செய்யும் இந்த விளக்கேற்றும் திருப்பணி நின்றுவிட்டால் நான் என் உயிரையே மாய்த்துக் கொள்வேன் என்று சபதமேற்றார்.   

 இவ்வடியேன் ஏற்றும் அகல் விளக்குகளில் எண்ணெய் குறைந்து விளக்குகள் அணையுமாயின் நான் என் இரத்தத்தைக்  கொண்டு விளக்கேற்றவும் தயங்க மாட்டேன் என்று மகிழ்ச்சியோடு கூறினார். கூறியதோடு நின்றுவிடாமல் அதை மெய்ப்பிக்கும் முயற்சியிலும் இறங்கினார். நீண்டதொரு அரிவாளை எடுத்து அதன் மூலம் தன் கழுத்தை அறுத்து உதிரத்தை விளக்கில் ஊற்ற முயற்சித்தார்.

இதையும் படியுங்கள்:
முடி அடர்த்தியாக வளரணுமா? இதோ அசத்தலான 5 டிப்ஸ்!
Kalia Nayanar

அப்போது அங்கு எழுந்தருளிய சிவபெருமான் அவரின் கரத்தை பிடித்து தடுத்தாட்கொண்டார். கோவிலில் இருந்த விளக்குகள் அனைத்திலும் எண்ணெய் நிரம்பி, விளக்குகள் பிரகாசமாக எரியத் துவங்கின, கோவில் முழுக்க சிவபெருமானின் பேரொளி படர்ந்தது, சிவனை கண்டதும் தன் மனைவியோடு சேர்ந்து இரு கரங்களையும் தன் தலையின் மீது குவித்து சிவபெருமானை வணங்கினார் கலிய நாயனார்.

சிவபெருமான் அவருக்கு பேரின்ப பெருவாழ்வு அளித்தார். அதோடு இறுதியில் தன் திருவடியில் சேர்த்து சிறப்புற்றிருக்கும் அருளையும் வழங்கினார். சிவனிடம் உண்மையான பக்தியோடு இருப்பவரை சிவன் நிச்சயம் காத்தருள்வார் என்பதற்கு இவர் ஒரு மிகப்பெரிய சாட்சி. அதோடு சிவனை வணங்குவோருக்கு பற்பல இன்னல்கள் எல்லாம் வரத்தான் செய்யும், அதை எல்லாம் கடந்து ஈசனை மனதார வணங்கி வந்தால் தான் அவனுடைய பேரருளை நாம் பெறமுடியும் என்பதற்கும் இவரே சாட்சி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com