அழகர் மலைக்கு புறப்பட்ட கள்ளழகர்!

அழகர் மலைக்கு புறப்பட்ட  கள்ளழகர்!

சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர்மலையை நோக்கி புறப்பட்டார். கருப்பண்ண சுவாமி கோயில் சன்னதியில் இருந்து அழகர் மலைக்கு இன்று கள்ளழகர் புறப்படுகிறார்.

மதுரை சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தொடங்கிய சித்திரைத் திருவிழா கடந்த இரண்டாம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் அதற்குப் பிறகு தேரோட்டம் என வெகு விமர்சையாக நடைபெற்றது.

சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 3 ஆம் தேதி தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர்கோயிலில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார். கடந்த 4-ம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்ற நிலையில், மே 5ல் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. முதலில் முத்தங்கி சேவை நடைபெற்றது. அதற்குப் பிறகு மச்ச அவதாரம், கூர்மாவதாரம், வாமனாவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் தொடர்ந்து நடந்தது. பின்னர் இறுதியாக மோகினி அவதாரத்தில் அழகர் காட்சி தந்தார். 

மே 6 ல் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். மே 7 ல் திவான் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், 8ஆம் நாள் நிகழ்ச்சியில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. கருப்பண்ணசாமி கோயில் முன்பு பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில், கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலை நோக்கி புறப்பட்டார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com