காமாக்யா தரிசனம்!

ஆன்மிகப் பயணம்!
காமாக்யா தரிசனம்!

காமாக்யா:

ஸ்ஸாமின்  தலைநகரான கௌஹாத்தியில் நீலாத்ரி என்ற குன்றின் மேல் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அம்பாள். நாங்கள் 6.6.2023 செவ்வாய்கிழமை தரிசிக்க விழைந்தோம். ஏழு மணிக்குத்தான்  தரிசனத்திற்குத் திறக்கிறார்கள்.  ஆனால்  காலை நாலு மணிக்கு முன்னரே பக்தர்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்து விடுகிறார்கள்.   பொது தரிசனம் பத்து மணி நேரத்தில் கிடைக்கிறது என்றார்கள். சிறப்பு தரிசனம் இரண்டு மணிநேரம் போல் ஆகலாம். அதற்கு 501 ரூபாய்  கட்டணம்.  காலை 6.30க்குத்தான் கௌண்டர் திறக்கிறது. கட்டண நுழைவுச் சீட்டும்  ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரைதான் தருகிறார்கள். அதன்பின் கௌண்டரை மூடிவிடு கிறார்கள். கடுமையான வெய்யிலிலும் அசராமல் எல்லோரும் நிற்கிறார்கள்.  தரிசனம் என்பது "மா" வின் கருணையினால் கிடைப்பது. அவளுடைய விருப்பப்படி தான் எல்லாமே நடக்கிறது என்ற  மனோபாவத்தில்தான் அனேக பக்தர்கள் காணப்படுகிறார்கள்.  நாங்கள் சென்ற ஜூன் மாதம் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் நேரம். ஏனென்றால் வருடா வருடம் ஜூன் மாதம்தான் "அம்புபாச்சி மேலா" என்ற கொண்டாட்டம் நடைபெறும். (இந்த வருடம் 22 லிருந்து 26 ஜூன்வரை). மூன்று நாட்கள் தேவிக்கு தனிமை தேவை என்று கோவில் மூடப்படும். ஒரு விதத்தில் இது பெண்மையின் செழிமையைக் கொண்டாடுவதாகக் கொள்ளலாம். நான்காம் நாள் கோவில் திறக்கையில் மிகக் கோலாகலமான  கொண்டாட்டம். அதனால் அதற்கு முன்னும் பின்னும் பக்தர்களின் எண்ணிக்கை மிக  அதிக அளவில் அதிகரிக்கிறது. லக்ஷக்கணக்கில் பக்தர்களும், சாது, சன்னியாசினிகளும் இங்கே குழுமிவிடுவார்கள்.

கர்ப்பக் கிரகம் ஒரு  சிறு குகைக்குள். அதற்குள் இறங்குவதற்கு கொஞ்சம் குறுகலான சிறிது செங்குத்தான 8, 10 படிகள் குகையிலேயே வெட்டி அமைக்கப்பட்டுள்ளன. கவனமாக இறங்கியதும் அம்பாள் தரிசனம்- கல்லில் அமைந்த ஒரு பெரிய  யோனி வடிவில். அடியிலிருந்து இயற்கையூற்று சுரக்கிறது. அம்பாளுக்கும் குகை சுவற்றிற்கும் அதிகம்  இடைவெளி கிடையாது. தரிசித்த மாத்திரத்திலேயே ஒரு புளகாங்கிதம் ஏற்படுகிறது. பக்தர்கள் அனைவரும் அம்பாளைத் தொட்டு வணங்கி, மலர் சாற்றி, அங்கு ஊறும் புனித நீரை பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர் - அம்பாள் நம் வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்றி விடுவாள் என்ற நம்பிக்கையுடன்.  பண்டாக்கள் அனைவருக்கும் நெற்றியில் சிந்தூர் இட்டு விடுகிறார்கள். இது குங்குமத்தைப் போல் அல்லாமல் நன்றாகப் படிந்து விடுகிறது.  இரண்டு மூன்று நாட்கள் வரை  ( நாம் முயற்சி எடுத்து அழுந்தத் தேய்த்து அகற்றாமல் இருந்தால்) அழியாமல் இருக்கிறது. காமாக்யா சிந்தூர் என்று பிரசித்தி பெற்றது.

உமாநந்தா கோவில்:

காமாக்கியாவிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உமாநந்தா கோவில் உள்ளது.  காமாக்கியாவும் உமாநந்தாவும்  ஒன்றக்கொன்று தொடர்புடையது.  காமாக்கியாவில் ஆவுடையாராகவும் உமாநந்தாவில் லிங்கமாகவும் இருப்பதால் இரண்டு கோவில்களையுமே தரிசிக்க வேண்டும் என்பது மரபு.  உமாநந்தா கோவில் பிரம்மபுத்ரா நதியின் ஒரு மிகச் சிறிய  தீவின் ( பீக்காக் ஐலண்ட்) சிறு குன்றின் மேல் உள்ளது. சிவபெருமான் உமாதேவியுடன் ஆனந்தமாக இருந்த இடம் என்பதால் உமாநந்தா என்ற பெயர். மேலும் இங்கு மன்மதனை தகனம் செய்ததால்  குன்றுக்கு  பஸ்மாசலா என்ற பெயர் வந்ததாகச் சொல்லப் படுகிறது. இதை அடைய படகிலேதான் செல்ல வேண்டும் . இக்கரைக்கும் அக்கரைக்கும் தனியார் படகுகளும், அரசாங்கப் படகுகளும் போய் வருகின்றன. அரசாங்கப் படகுகள் நேரப்படியும், தனியார் படகுகள் இருக்கைகள் நிறைவதைப் பொருத்தும் கிளம்புகின்றன.  சிறிது தூரமேயானாலும் பிரம்மாண்டமான ப்ரம்மபுத்ரா நதியில் பயணிக்கும் இது ஓர் அழகான அனுபவம். அக்கரை சென்றதும் குன்றின் மேல் ஏற 60, 70 படிகள். வயதின் காரணமாக சிறிது சிரமமாகத்தான் இருந்தது.  மேலே ஏறியதும் வலதுபுறம் அழகிய விநாயகர் கோவில். அவரது வாகனமான மூஞ்சூரோ சந்நிதிக்கு வெளியில் மெகா உருவத்தில் கண்ணையும் கவனத்தையும் கவர்கிறார். சிலர் நாம் நந்தி காதில் வேண்டுகோள் தெரிவிப்பது போல் மூஷிகனார் காதில் ப்ரார்த்திக்கிறார்கள்.

பிரதான சந்நிதி உள்ளே சென்றால் 10, 12 படிகள் குறுகலாக, செங்குத்தாக கீழே இறங்குகிறது. ஒருவர் பின் ஒருவராகச் சென்றால்,  ஆஹா, சிவபெருமான் அழகிய லிங்க வடிவில் - ஆவுடையார் கிடையாது. பண்டாக்கள் இங்கு  லிங்க வடிவமும்,  காமாக்யாவில் ஆவுடையாரும் இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

உமாநந்தா கோவிலுக்குச் ஏற்றிச் செல்லும் படகுத் துறையை ஒட்டியே சுக்ரேஷ்வர் கோவில் உள்ளது.  மிகப் பெரிய சிவலிங்கம். மேலே பெரிய வெள்ளி தாரா பாத்திரம் தொங்குகிறது. பக்தர்கள் சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்கிறார்கள், ஆசையாகத் தடவித் தருகிறார்கள்‌. தலையை அவர் மேலே வைத்து ஸ்லோகமோ, நாமமோ அல்லது  குறையோ ஏதோ சொல்கிறார்கள். பக்தியின் வெளிப்பாடு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதம்!

பிரசித்தி பெற்ற நவக்ரஹ கோவிலும் சித்ராசல் என்ற குன்றின் மேல் அமைந்துள்ளது. இதன் விசேஷம் என்னவென்றால் ஒன்பது கிரகங்களும் லிங்க வடிவிலே அமைந்துள்ளன. வெளியே வலப்புறம்  பிள்ளையாருக்குத் தனி சந்நிதி.  வட்டமான பெரிய கர்ப்பக்கிரகம். நடுவிலே ஒரு லிங்கம். சுற்றிலும் எட்டு லிங்கங்கள்.  அவரவருக்குரிய வண்ண வஸ்த்ரங்கள் சாற்றப்பட்டுள்ளன. யாருக்கு எந்த க்ரஹ ப்ரீதி வழிபாடு செய்ய வேண்டுமோ அதை பாண்டாக்கள் செய்து வைக்கின்றனர். ஒவ்வொரு லிங்கத்தின் முன்னும் ஒரு குடும்பம் அமர்ந்து வழிபாடு செய்து கொண்டிருந்தனர். ஒன்பது லிங்கங்களையும் வலம் வந்தது ஒரு புத்துணர்வைத் தந்தது.

இங்கு கோவில்கள் நடுவில் மூடுவதில்லை. காலையிலிருந்து இரவு வரை தொடர்ந்து திறந்திருக்கிறது. வசிஷ்டர் இருந்த ஆச்ரமம் கொஹாத்தியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. அங்கு 'வ' எழுத்து 'ப' என்று உச்சரிக்கப் படுவதால் பஷிஷ்டாஷ்ரம் என்கிறார்கள்.  இயற்கை எழில் கொஞ்சும் இடம். உள்ளே போகப் போக, அருவி, சுனை, ஐந்து கிலோ மீட்டர் நடந்தால் வசிஷ்டர் தியானம் செய்த குகையைக் காணலாம் என்றார்கள். நேரமின்மையால் வசிஷ்டரின் சிலையை மட்டும் பார்த்துவிட்டு திரும்பி விட்டோம்.

வாசகி ஹேமலதா சுகுமாரன்
வாசகி ஹேமலதா சுகுமாரன்

அங்குள்ளோர் 'பாலாஜி மந்திர்' பாருங்கள் என்றனர். ஹைவேயிலேயே மிகப் பெரிய வளாகத்தில் நம்மூர் பாணியிலே கட்டப்பட்ட கோவில். தனித்தனி கோபுரத்துடன் அழகிய வெங்கடாசலபதி, தாயார் மற்றும் துர்கை சந்நிதி.  மொத்த வளாகமுமே படு சுத்தம். சுற்றிலும் பூங்கா-  மிக நேர்த்தியாகப் பராமரிக்கப் பட்டுள்ளது. மொத்த நிர்வாகம் காஞ்சி சங்கர மடத்துடையது. உள்ளேயே பார்க்கிங் வசதி - தவிர அருமையான ரெஸ்டாரண்ட்.  சுடச்சுட  சுவையான பொங்கல், தோசை கிடைக்கிறது. இறை தரிசனத்தினால் கிடைத்த மனநிறைவுடன், வயிறும் நிறைகிறது.

இரண்டு நாட்களில் பிரதான கோவில்களின்  தரிசனம் பெற்ற திருப்தியில், புத்துணர்ச்சியோடு 8.6.2023 பெங்களூர் வந்து சேர்ந்தோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com