
காந்தார (Kanthara) படத்தில் சொல்லப்பட்டிருக்கும் பஞ்சூர்லி மற்றும் குளிகா தெய்வங்கள் எப்படி உருவானது? அந்த தெய்வங்கள் எப்படி மக்களின் காவல் தெய்வங்களாக மாறின? - விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
பஞ்சூர்லி வராகம் அதாவது பன்றி உருவத்தில் இருக்கும் தெய்வம். இதனுடைய கதை கைலாயத்தில் இருந்து தான் தொடங்குகிறது. ஒரு நாள் இந்த பன்றி கைலாயத்தில் இருக்கும் சிவனுடைய தோட்டத்தை நாசம் செய்துவிட்டது. இதை பார்த்த சிவபெருமானுக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. ஆனால், பார்வதிதேவி அந்த குட்டி பன்றியின் மீது நிறைய பாசம் வைத்திருந்ததால் சிவபெருமானால் எதுவும் செய்ய முடியவில்லை.
சிவபெருமான் அந்த பன்றியை பூமிக்கு போக சொல்கிறார். பூமியில் மக்களுடைய காவல் தெய்வமாக இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி அனுப்புகிறார். அப்படி தான் பஞ்சூர்லி தெய்வம் பூமிக்கு வந்ததாகவும், காட்டில் வாழும் மக்களுக்கு காவல் தெய்வமாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதை இன்னொரு கண்ணோட்டத்தில் பார்க்கலாம். அதாவது காட்டை ஒட்டியிருக்கும் விவசாய நிலங்களுக்கு காட்டுப் பன்றி பெரும் பிரச்னையாக இருக்கும்.
அதனால் பழங்குடி மக்கள் காட்டுப் பன்றியையே தெய்வமாக வழிப்பட ஆரம்பித்தனர். அந்த பன்றிகளை வழிப்படுவது மூலமாக அதை சாந்தப்படுத்தி அதனால் ஏற்படும் சேதத்தை தடுக்க முடியும் என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கை தான் இந்த வழிப்பாட்டை உருவாக்கியுள்ளது.
இப்படிதான் காந்தாரா படத்தின் முதல் சீனில் வரும் பஞ்சூர்லி தெய்வம் நமக்கு கிடைத்தது. இந்த தெய்வம் மக்களின் கஷ்டத்தை கேட்டு அதற்கான தீர்வைக் கொடுக்கும்.
குளிகா தெய்வம் பஞ்சூர்லியை விட வித்தியாசமான தெய்வமாகும். பஞ்சூர்லி மாதிரி இந்த தெய்வம் பேசிக் கொண்டிருக்காது. தப்பு செய்தால் இந்த தெய்வத்திற்கு தண்டிக்க மட்டும் தான் தெரியும். இந்த குளிகா தெய்வத்தின் கதையும் கைலாயத்தில் இருந்தே தொடங்குகிறது. தான் பூசுவதற்காக வைத்திருந்த சாம்பலில் இருந்த கல்லை சிவன் தூக்கி ஆற்றில் போட்டார்.
அந்த கல் குளிகாவாக மாறியது. குளிகாவிற்கு ஒரு பிரச்னை உண்டு அது என்னவென்றால், அதால் சாப்பிடாமல் இருக்க முடியாது. என்ன செய்தாலும் அதன் பசி மட்டும் அடங்கவே அடங்காது. அப்படிப்பட்ட குளிகாவை மக்களுக்கு காவலாக இருக்க சொல்லி பூமிக்கு அனுப்புகிறார். ஆனால், இந்த தெய்வம் ஊருக்குள் இல்லாமல் ஊருக்கு வெளியாலே நின்று மக்களை காப்பாற்றும் காவல் தெய்வமாக மாறிவிட்டது.
நன்றாக கவனித்துப் பார்த்தால் தெரியும். காந்தார (Kanthara) படத்தின் கிளைமேக்ஸில் வரும் தெய்வம் பஞ்சூர்லியாக இருக்காமல் குளிகாவாக இருக்கும். அதனால் தான் சண்டைப்போடும் போதுக்கூட பொரியை சாப்பிட்டுக்கொண்டே ஆக்ரோஷமாக சண்டைப்போடும்.
இந்த இரு கற்களுக்கும் உருவம் கிடையாது. நடுக்கற்களாக தான் வழிப்படுகிறார்கள். பஞ்சூர்லியை மட்டும் வராக வடிவத்தில் வைத்து வழிப்படுகிறார்கள். ஒருபக்கம் பஞ்சூர்லி மக்களுக்கு காவல் தெய்வமாக இருக்கும் போது இன்னொரு பக்கம் குளிகா எல்லை தெய்வமாக இருந்து மக்களை காப்பாற்றுகிறது. இப்படி தான் காலம் காலமாக இந்த இரண்டு தெய்வமும் பழங்குடி மக்களால் வழிப்படப்படுகிறது.